கொலைசெய்யும் தண்டனைகள்

சிகரட் லைட்டர் வைதிருந்ததற்க்காக மூன்று மணிநேரம் பெஞ்ச் மேல் நிற்க வைக்கப்பட்ட மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டான் என்று நெஞ்சைப் பதறவைக்கும் செய்தியைப் படித்தேன்.

இது போன்ற சம்பவங்கள் தினமும் தேசத்தின் ஏதாவதொரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மாணவர்கள் செய்யும் சிறு தவறுக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் வழ்கங்கும் தண்டனைகள் அவர்கள் உயிரையே குடித்துவிடுகின்றன.

மாணவப் பருவம் என்பது குழப்பங்கள் நிறைந்த பருவம். வாலிப வயதை நெருங்கும் உயர் கல்வி மாணவர்களின் மனது தெளிவில்லாமலேயே இருக்கும். அந்த வயதில் பார்க்கும் எந்தவொரு விஷயமும் அவர்களை ஆழமாக பாதிக்கும் வாய்ப்புண்டு. இதனாலேயே தண்டிக்கப்பட்டவுடன் தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் தற்கொலை செய்துகொள்கின்றனர் சில மாணவர்கள்.

உலகில் தவறு செய்யாத மனிதர்களே  இல்லை. தவறு செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல. அதுவும் விவரம் தெரியாத விடலைப் பருவத்தில் தவறு செய்வது வெகு சகஜம். அதற்காக தண்டிப்பது சரியாகாது. தண்டனைகளின் நோக்கமே ஒருவர் செய்த தவறை உணரவைக்கத்தானே தவிர உயிரைப் பறிப்பதற்கு அல்ல.

தண்டனைகளை வழங்கும் ஆசிரியர்கள் அதற்கான காரணத்தையோ அதன் விளைவுகளையோ சிந்திப்பது இல்லை. தங்கள் வீட்டில் நடந்த பிரச்னைகளுக்கான கோபத்தை மாணவர்கள் மீது காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.இவர்களாலேயே பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆசிய்ரியை அடித்ததால் மாணவியின் கை அழுகியதாக ஒரு செய்தியும் படித்தேன்.

மாணவர்களை அடிக்கக் கூடாது என்று  அரசு உத்தரவு பிறப்பித்தும் இதுபோன்ற செயல்கள் தொடர்கின்றன. இது போன்ற சம்பவங்கள் நடக்க காரணம் தம் கோபத்தை மாணவர்கள் மீது ஆசிரியர்கள் வெளிப்படுத்துவது தான்.

மாணவர்களின் வாழ்க்கையை நெறிப் படுத்த வேண்டிய ஆசிரியர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது அவர்கள் பணியை ஒழுங்காகச் செய்வதில்லை என்பதையே காட்டுகிறது.

மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு பக்குவமாக அவர்கள் செய்த தவறை உணர்த்த வேண்டும். அவர்கள் செய்த செயலின் விளைவு என்னவாக இருக்கும், பின்னால் அத செயல் அவர்களை எப்படி பாதிக்கும், போன்ற விஷயங்களை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

குழப்பங்கள் நிறைந்த வயதில் அவர்களை தண்டித்து அவர்கள் மனநிலை பாதிக்கபடுவதை விட இப்படி புரியவைப்பதே சிறந்தது.

சட்டத்திலேயே மரண தண்டனை வழங்கக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது.

மாணவர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் இம்சைப்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும்பொழுதுதான் இது போன்ற சம்பவங்கள் நிகழாது இருக்கும்.

1 கருத்துரைகள்:


மிக நல்ல பதிவு!


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U