இந்தியக் கனவு

"விரைவில் இந்தியா வல்லரசாகும்". விஞ்ஞானிகள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பேட்டிகளிலும், மேடைகளிலும் முழங்கும் கோஷம் இது. இன்று நேற்றல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லப்படும் விஷயமிது.

உண்மையில் இந்தியா வல்லரசாகுமா? இத்தனை ஊழல்கள், ஜாதிச் சண்டைகள், மதக் கலவரங்கள், சிகப்புத் தீவிரவாதம் எனப்படும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல், இத்தனையையும் மீறி, இந்தியா வல்லரசாக சாத்தியமுள்ளதா? இந்தக் கேள்விகளை பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வரலாற்று ஆய்வாளர், ராமச்சந்திர குஹா, அவர்களின் கருத்து சிந்திக்க வைக்கிறது.

பத்திரிகை ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், இந்தியா வல்லரசாவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்தியா வல்லரசாகாது, நொறுங்கியும் போகிறது" என்று கூறியருந்தார். இந்தியா வல்லரசாவது பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, "என்னுடைய சிந்தனை வேறுமாதிரியானது. நான் இந்தியா அமைதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று பதிலளித்திருந்தார்.

அவரது இந்த சிந்தனை, என்னை சிந்திக்க வைத்தது.

வல்லரசாகப் போகிறோம் என்பது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இதன் அடிப்படையில் உள்ள அர்த்தம் என்ன?

அனைத்து துறைகளிலும், அம்சங்களிலும், முழுமையான வளர்ச்சியை அடைந்த, தன்னிறைவைப் பெற்ற தேசங்களுடன், இந்தியா ஒப்பிடப்படுகிறது. இந்த தேசங்களின், அதாவது வல்லரசுகள் என்று சொல்லப்படும், சொல்லப்பட்ட நாடுகளின் நிலையை நாம் ஆராய வேண்டும்.

இன்றைய உலகில் வல்லரசு என்றால், பால்லிக் குழைந்தை கூட சொல்லும் பெயர் அமெரிக்கா. பொருளாதாரம், ராணுவம், நிலையான அரசியல், என்று அத்தனை அம்சங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கும் தேசம். ஆனால் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு இன்று கிடைத்திருக்கும் பெயர்?

சர்வதேச தாதா. வட்டார வழக்கில், விவரமாக சொல்வதென்றால், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாடு.

இந்தப் பெயர் வரக் காரணம், உலகிலுள்ள அனைத்து தேசங்களையும், கண்காணித்து, அங்கு ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் வகையில் உதவி என்ற பெயரில், பணம் முதல் ஆயுதம் வரை அனைத்தையும் வழங்குவது. அவசியம் ஏற்பட்டால், இருக்கும் அரசைக் கவிழ்த்துவிட்டு, தனக்கு சாதகமான அரசாங்கத்தை அமைப்பது.

இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடக் காரணம்? உலக நாடுகளுக்குத்  தான் ஒரு வல்லரசு என்ற தன் பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அவர்கள் தன்னைப் பார்த்து பயந்து மரியாதை செலுத்த வேண்டும். என்ற எண்ணம். இந்த எண்ணத்தில் இவர்கள் செய்த காரியங்கள், இவர்களுக்கே வினையாகி நிற்கிறது.

மத்தியக் கிழக்கில், தங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்க இவர்கள் மூட்டிவிட்ட தீவிரவாதம் எனும் நெருப்பு, இவர்களையே தாக்கி, இன்று உலகம் முழுதும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகின் மாபெரும் வல்லரசாக கருதப்பட இங்கிலாந்து, இன்று சந்தித்து வரும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அமெரிக்காவுக்கு இணையாக அவர்களது செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், இன்று அமெரிக்காவிற்கு ஆதரவான நிலையை எடுத்து, பல நாடுகளின் கேட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நிலை, எந்த நேரத்தில், எந்த இடத்தில், தீவிரவாதிகள் தாக்குவார்களோ, என்ற பயத்தோடு, நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து, பதட்டமான வாழ்க்கை நிலையாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு நிலையை இந்தியா அடைய வேண்டுமா?

வல்லரசாக வேண்டாம், நல்லரசாக இருந்தால் போதும் என்ற கோஷங்கள் ஆங்காங்கே ஒலிப்பதன் அர்த்தம் இது தான்.

நமது வளர்ச்சி இந்த தேசங்களைப்போன்று இருக்க வேண்டாம். கிட்டத்தட்ட தேசத்தையே உருக்குளைதுவிட்ட அணுகுண்டுத் தாக்குதலிலுருந்து, பீனிக்ஸ் பறவை போல, எழுந்து வந்திருக்கும், ஜபனைப் போன்றதாக இருக்கட்டும்.

மற்ற நாடுகள் நம்மைப் பார்த்து பயந்து, நம் வாழ வேண்டாம். இந்தியா போன்று வாழ்க்கை முறை இருக்க வேண்டும், தேசத்தின் வளர்ச்சியும்,அமைதியான அரசியல் நிலையும் அமைய  வேண்டும் என்று உலகிற்கு முன்மாதிரியாக இருப்போம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U