கள்வரே! கள்வரே!

நமக்கு கெடுதல் செய்தவனுக்கும் நல்லது செய்யணும்னு வள்ளுவர் சொன்னதா ஸ்கூல்ல  டீச்சர் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அன்னிக்கிருந்தே இதுக்கு அர்த்தம் புரியல. எனக்கு கெடுதல் செஞ்சவனுக்கு, நான் ஏன் நல்லது செய்யணும்? கூட படிக்குற பொண்ணு டிபன் பாக்சில இருந்து, சாப்பாட்ட தின்னுட்டு, என்னை டீச்சர்ட்ட  மாட்டிவிட்டவனுக்கு, நான் எதுக்கு நல்லது செய்யணும்? அப்போ எனக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். இந்த ஆள் சுத்த கிறுக்குத்தனமா எழுதியிருக்கர்னுதான் அப்போ நினைச்சேன்.
 
ஆனா பெரியவனான பிறகு, வேற பெரிய மனுஷங்களும் இதையே சொல்றாங்கன்னு படிச்சப்போ, நாமதான் சரியா புரிஞ்சுக்கலைன்னு தோனுச்சு. சரி இது என்னதான் விஷயம் பார்த்துருவோம்னு, கொஞ்சம் தத்துவ புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அதுல மெய்ஞானம், வேதாந்தம், சித்தாந்தம்னு என்னென்னவோ சொல்லியிருந்தாங்க.என்னடா இது, இதுக்கு ஸ்கூல்ல படிச்சதே பரவாயில்லையேன்னு  நினைச்சேன்.

நல்ல புரியறமாதிரி நறுக்குன்னு யாரும் சொல்லலியானு தேடுனப்போ தான், சூபி கதைகள் கிடைச்சது. பெரிய பெரிய விஷயங்களையெல்லாம், சும்மா நறுக்குன்னு புரியற மாதிரி சுருக்கமா சொல்லியிருந்தாங்க. அத படிச்சப்புறம்தான், இந்த பெரியவங்கல்லாம் என்ன சொல்ல வர்றாங்கனு கொஞ்சம் புரிஞ்சது.

அதுல சொன்ன ஒரு கதைலதான், ஸ்கூல்ல படிச்ச அந்த விஷயத்துக்கு அர்த்தமே புரிஞ்சது.

ஒரு நாள், எந்த வீட்டுக்குள்ள நுழையலாம்னு பாத்துக்குட்டே வந்த ஒரு திருடனுக்கு, ஊர் எல்லையில ஆத்தங்கரை ஓரத்துல இருந்த ஒரு குடிசை கண்ணுல பட்டுச்சு.கதவு வேற தொறந்துருந்துச்சா, நேரா உள்ள நுழைஞ்சுட்டான்.

உள்ள எதாவது கிடைக்குமான்னு பார்த்தான். ஆனா அந்த குடிசைக்குள்ள ஒண்ணுமே இல்ல.என்னடா இது? இந்த குடிசைக்கு சொந்தக்காரன் சரியான பிச்சைக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினச்சுட்டிருந்தப்போ, அவன் மேல ஒரு வெளிச்சம் விழுந்துச்சு.

பதறிப்போய் திரும்பிப் பாத்தபோ , ஒரு பெரியவர் கைல விளக்கோட நின்னுட்டுருந்தார்.

"இருட்டுல என்னப்பா தேடுற?" னு சாதாரணமா கேட்டவரு, "கதவோரமாதான தூங்கிட்டுருந்தேன், நானே உனக்கு வீடு பூராவும் சுத்திக் காட்டியிருப்பேனே?" னு அவன் பக்கத்துல வந்தாரு.

என்னடா இந்த ஆள் சுத்த பைத்தியக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினைச்சாலும், திருடனுக்கு அவர் குரல்ல இருந்த இனிமையும், அப்பாவித்தனமும் அவன என்னமோ செஞ்சுச்சு.முன்ன பின்ன தெரியாதவன்கிட்ட, யார் நீ? எதுக்கு வந்தனு மிரட்டாம், எதோ சொந்தகாரன பாத்ததுபோல குசலம் விசாரிக்கிரானேனு "நான் யார்னு தெரியுமா? நான் திருடன்" னு அதிகாரமா சொன்னான்.

"அதுனால என்னப்பா? ஒவ்வொருத்தரும் வாழறதுக்கு  எதோ ஒன்னு செய்யனுமில்ல? நீ திருடுற, அவ்வளவுதான். சரி வா நானே இந்த வீட்ட உனக்கு சுத்திக் காட்டுறேன். இங்க நான் முப்பது வருஷமா இருக்கேன். என் கண்ணுல எதுவும்பட்டதில்ல. இப்போ உனக்கு எதாவது பொருள் தெரிஞ்சா சொல்லு, நாம் பங்காளிகலாயிடுவோம்" னு இயல்பா சொன்னார்.

என்னடா இது வம்பாபோச்சு? எப்படியாவது இவர்கிட்ட்யிருந்து தப்பிச்சு போய்டனும்னு அவன் நகர்ந்தப்போ

"நில்லுப்பா, நீ இப்படி வெறும் கையேடு போகக்கூடாது. இந்தா இதை எடுத்துக்கோ" அப்படின்னு அவர் போத்தியிருந்த கம்பளிய கொடுத்தார். அவருகிட்ட இருந்த ஒரே பொருள் அதான்.

"என்னய்யா இது நன் ஒரு திருடன். எனக்குபோய் இதைக் கொடுக்குறீங்களே?" னு குழம்பிப் போய் கேட்டான் திருடன்.

"அட அதனால் என்னப்பா? எல்லாரும் ஏதோவொரு தொழில் பண்றாங்க. நீ இதப் பண்ற. என் ஆசீர்வாதத்தோட, நீ உன் தொழில கண்ணும் கருத்துமா செய். யாருகிட்டயும் மாட்டிக்காத" அப்படின்னு சொல்லி கம்பளிய அவனுக்குக் கொடுத்தார்.

இவருகிட்டருந்து தப்பிச்ச போதும்னு, அந்த திருடன், கம்பளிய போத்திக்கிட்டு வாசலைப் பாத்து நடந்தான்.

திருடன் அரண்டு போய்ட்டான். அவன் வாழ்நாள்ல அப்படியொரு அதட்டல் கேட்டதில்ல.திரும்பி அவருகிட்ட வந்தான்.

"வாழ்க்கைல கொஞ்சமாது நல்ல பண்புகளா கத்துக்கோ. நான் உனக்கு கம்பளி கொடுத்துருக்கேன், இவ்வளவு நேரம் பழகியிருக்கேன், ஒரு நன்றி கூட சொல்லாம் போற?" னு ஒரு அரட்டு அரட்டுனாறு.

"நன்றிங்கய்யா" னு சொல்லிட்டு வாசப்படிய தாண்டுனவன்கிட்ட, "கதவு திறந்துருந்துதுன்னு உள்ள வந்தெல்ல, போகும்போது மூடிட்டு போ. குளிர் காத்து அடிக்குதுள்ள. நீ திருடனாயிருக்குறதுல எனக்குப் பிரச்சனையில்ல. ஆனா பழக்க வழக்கங்கள்ள நான் ரொம்ப கண்டிப்பானவன் தெரிஞ்சுக்கோ" னு அவர் பேசுனத கேட்ட திருடன், இப்படி ஒரு மனுஷனான்னு நினைச்சுட்டே கதவை சாத்திட்டு நடந்தான்.

அடுத்த கொஞ்ச நாள் அவனுக்கு அந்த பெரியவர் பத்திய நினைப்பே இருந்துச்சு. அவரப் புரிஞ்சுக்கவே முடியலையேனு நினச்சவன், அவரைப்பத்தி விசாரிச்சதுல, அவரு ஒரு சூபி ஞானின்னு தெரிஞ்சுது.

அப்பறம் கொஞ்ச நாள்ல, அந்த திருடன் மாட்டிகிட்டான். அவனி நீதிமன்றத்துல நிப்பட்டினப்போ, "உன்ன நல்ல தெரிஞ்சவங்க யாராவது இந்த ஊர்ல இருக்காங்களா? னு நீதிபதி கேட்டார்.

அந்த ஊர்ல நிறையப் பேருக்கு அவனைத் தெரியும்னாலும், யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ஒரு திடனத் தெரிஞ்சவன்னு யாரு சொல்வாங்க? யாரு தனக்காக வந்து சாட்சி சொல்லுவாங்கனு அவன் யோசிச்சப்போ, அவனுக்கு, அந்த சூபி ஞானி ஞாபகம் வந்துச்சு. அவர் பேரைச் சொன்னான்.

இதைக் கேட்ட நீதிபதிஅதிர்ச்சியோட , "நீ சொல்றது மட்டும் பொய்யா இருந்தா உன்ன கடுமையா தண்டிப்பேன்" னு சொல்லி அந்த பெரியவர அழைச்சுட்டு வரச் சொன்னார்.

நீதிமன்றத்துக்கு வந்த பெரியவர்கிட்ட "இவனை உங்களுக்குத் தெரியுமா" னு நீதிபதி கேட்டார்.

"தெரியுமாவா? இவர் என் நண்பர்.ஒரு நாள் ராத்திரி இவர் என் வீட்டுக்கு வந்தார், அன்னைக்கு குளிர் அதிகமா இருந்துச்சு. அதுனால இவருக்கு என் கம்பளியைக் கொடுத்தேன்" அப்படின்னு சொன்னாரு.

"இவரு உங்க நண்பர்னு சொல்றிங்க. ஆனா இவர் மேல மத்தவங்க திருட்டுக் குற்றம் சுமத்துராங்களே?" னு நீதிபதி கேட்டார்.

"இருக்காது. இவர் ரொம்ப இனிமையானவரு. என்கிட்டே கம்பளிய வாங்கிட்டு நன்றி சொன்னார். வீட்டைவிட்டு போகும்போது, எனக்குத் தொந்தரவு தராம, கதவ சாத்திட்டு போனாரு. அருமையான நண்பர்"

"ஐயா நீங்களே இவரப் பத்தி இவளோ உயர்வாக சொல்றதுனால இவர விடுவிக்குறேன்" னு சொல்லி அந்த திருடன விடுதலை பண்ணுனாரு நீதிபதி.

விடுதலையான திருடன், அந்த ஞானி பின்னாடியே போனான். இதைப் பார்த்த ஞானி" என்னப்பா இது? எதுக்கு என் பின்னாடி வர்ற?" னு கேட்டார்.

"நீங்க என்ன காப்பத்திருக்கீங்க. என்ன உங்க நண்பன்னு சொல்லிருக்கிங்க. இனிமையானவன்னு சொல்லியிருக்கிங்க. இதுவரை என்னை யாரும் அப்படி சொன்னதில்ல. இனி உங்களோடதான் வரப் போறேன். உங்ககிட்ட இருக்குற இந்த பக்குவம், எல்லாத்தையும் வித்த்யாசமா பாக்குற இந்த குணம், இதெல்லாம் நானும் கத்துக்கணும். நானும் உங்களைப் போல ஆக வேண்டும். அதான் உங்க கூட வரேன்" னு சொன்னான்.

இந்தக் கதைய விளக்கி, நிறைய சித்தாங்களும், தத்துவங்களும் சொல்லியிருந்தாங்க. நான் அதையெல்லாம் இங்க சொல்லப் போறதில்ல. (பின்ன எனக்கு புரிஞ்சாத் தான நான் சொல்ல முடியும்?) முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் (அதாவது எனக்குப் புரிஞ்சது) அவன் ஒரு திருடன்னா இருந்தாலும்,  அந்த சூபி ஞானி அவன எப்படிப் பாத்தாரு?

அவருகிட்டயிருக்குரத  திருட வந்தவன் கிட்ட கூட எவ்வளவு அன்பா  நடந்துக்கிட்டாரு? தன்கிட்டயிருந்த ஒரே சொத்தான கம்பளியையும் அவனுக்குக் கொடுத்தாரு.

இதை படிக்கும்போதுதான் சின்ன வயசுல படிச்ச திருக்குறளுக்கு அர்த்தமே புரிஞ்சுது. ஒரு திருக்குறளைப் புரிஞ்சுக்குரதுக்கே இவளவு நாலாகியிருக்குன்னா, வாழ்க்கைல நம் எவ்வளவு விஷயங்களப் புரிஞ்சுக்காம இருக்கோம்?

தன்கிட்ட திருட வந்தவன் அன்பா நடத்தி, அவன தன் நண்பன்னு சொல்லி தண்டனைலருந்து காப்பாதுனதுனால, அவன் திருட்டு தொழில விட்டுட்டு திருந்தி, அவருகூடவே, சிஷ்யனா, ஞானத்தைத் தேடி கிளம்பிட்டான்.

அவரு மட்டும் அவன திருடன்னு சொல்லியிருந்தா, அவன் திருடனாவே தான் இருந்திருப்பான். கெடுதல் செய்ய வந்தவனுக்கு நல்லது செஞ்சதாலதான், அவன் திருந்தி அவருக்கு சீடனாகவே வந்தான். இதைத் தான், மன்னிக்கிற பண்புன்னு பெரியவங்க சொல்றாங்க. ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தா அவன் திருடனாவே இருந்திருப்பான். அந்த ஞானி வழங்கிய மன்னிப்புதான் அவன திருந்தி வாழ  வைச்சது.

தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கொடுக்குறதே, அவங்க செஞ்ச தப்ப உணரனும், திரும்ப செய்யக்கூடாதுன்னு தான். ஆனா அந்த தண்டனையலேயே அவங்க மறுபடியும் தப்பு செயவ்வாங்கன்னா அதனால என்ன பிரயோஜனம்?

ஆனால் மன்னிக்கும்போது, அவன் செஞ்ச தவற அவனே உணர ஒரு சந்தர்ப்பம் கொடுக்குறோம். அதைப் புரிஞ்சுக்கிடான்னா, எந்த சூழ்நிலைலயும், அவன் தப்பே செய்ய மாட்டான்.

இதுதான் வாழ்க்கையோட அடிப்படை தத்துவம்(நான் கூட கொஞ்சம் தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டேன்ல?). பிறரிடம் அன்பு செலுத்தும்போது, உலகத்தையே நாம் மாற்றிவிடுகிறோம்.

அன்பு மட்டுமே நிலையானதாக இருக்கும். அதுவே வலிமையானதாகவும் இருக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U