பதிவுலகத் தோழிகளுக்கு சமர்ப்பணம்!

நான் படித்த இரண்டு விஷயங்கள், சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பற்றி என்னுள் சிந்தனைகளை  ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்பினேன்.

வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்புவின் பேட்டியைப் படிக்க நேர்ந்தது. சமூகப் பிரச்னைகளுக்கான அவரது விமர்சனங்களைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில், பெண்களின் மீதான, சமுதாயத்தின் பார்வையை பிரதிபலிப்பதாக இருந்தது. பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும்  உணர்த்துவதாக அமைந்தது.

இரண்டாவதாக, இன்று காலை நான் படித்த வலைப்பதிவு ஒன்று. வலைப் பதிவர்களிலும் பெண்களை இழிவாகச் சித்தரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியது. பெண் பதிவர் ஒருவரைப் பற்றி இழிவாக எழுதப்பட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட அந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்தது.

எங்கே? யார்? என்று குறிப்பிடாமல் அந்தப் பதிவருக்கு கண்டனம் தெரிவித்து எழுதிய தோழி கௌசல்யாவிற்கு (தங்கள் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்) kousalya2010.blogspot.கம, மற்றும். இந்தப் பதிவுலகத்தில் மகத்தான பங்காற்றிக்கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களுக்கும் எனது இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.

பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிட்டது, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்றைய பெண்கள், என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் பெண்களின் நிலை முழுவதுமாக மாறவில்லை என்பது வேதனையே.

இது பற்றிக் கூறும்போது, நெடுநாட்களுக்கு முன்பு படித்த விஷயமொன்று நினைவுக்கு வருகிறது.

ஆண் எப்போது பெண்ணை தனக்கு அடிமையாக நினைக்கத் தொடங்கினான்? என்று கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு, பெண் தன் குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டுவதைப் பார்த்ததிலிருந்து, என்று பதிலளிக்கக்ப் பட்டிருந்தது. இந்த ஒரு பதிலில் பெண்களின் மகத்துவம் முழுதும் உணர்த்தப்பட்டதாக நினைக்கிறேன்.

பெண் என்பவள் போகப் பொருளாகவே இன்றும் பார்க்கப்படுகிறாள். விண்வெளிக்குச் செல்வதிலிருந்து, பாராளுமன்ற அவைகளுக்குத் தலைமை வகிப்பது வரை, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர்ந்துவிட்ட நிலையிலும் அவர்கள் மீதான இந்தப் பார்வை மாறாதது வேதனை.

நடிகை குஷ்பு சொன்னது போல், ஆண் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, அவர்களின் தகுதி  பற்றி எந்த விமர்சனமும், கேள்வியும் எழுவதில்லை. ஆனால் ஒரு நடிகை அரசியலுக்கு வரும்போது, அவரது சமுதாய அறிவு பற்றியும், ஆளுமை குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இதற்கு முன்பு ஆந்த்ராவில் நடிகைகள் ரோஜாவும், விஜயஷந்தியும், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அரசியலில் நுழைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் இது போன்ற விமர்சனங்கள் எழுவது ஆச்சர்யமாக இருக்கிறது.

சமூகப் பிரச்னைகளுக்கு குஷ்புவின் கருத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. கருத்து  சுதந்திரம் உள்ள நமது நாட்டில் யாரும் எத்தகைய கருத்தும் சொல்லலாம்.

மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே சொந்தம் என்று தாக்கரே குடும்பத்தினர் கருத்து சொல்லும்போது, பெண்களின் நிலை பற்றி ஒரு பெண் சொல்லக்கூடாதா?

பெண் மென்மையானவள் என்று சொல்கிறோம். அனால் அந்த மென்மை உடலுக்குத் தானே தவிர, உள்ளத்துக்கு இல்லை. பெண்களின் உள்ள வலிமை ஆண்களைவிட பன்மடங்கு அதிகமானது. சமூகத்தின் பிரச்னைகளை எதிர்த்து போராடி வெற்றி கண்ட பல பெண்களை நாம் தினமும் பார்க்கிறோம். அப்படி இருந்தும் பெண்களின் மீதான நம் கண்ணோட்டம் மாறவில்லை.

பெண் என்பவள் படுக்கைச் சுகமளிக்க மட்டுமே என்ற இழிவான நினைப்பு, இன்னும் பல ஆண்களின் ஆழ்மனதில் இருக்கிறது. அதன் வெளிப்பாடே இதுபோன்ற விமர்சனங்களும்,  வக்கிரமான பார்வையும்.

"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே,
  அவர் தீயவராவதும் நல்லவராவதும் அன்னை வளர்ப்பினிலே"

ஒரு மனிதனை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான். ஒரு ஆண்மகனை அரவணைத்து வளர்ப்பதும், வாழ்க்கைப் பாதையில் அவன் கைபிடித்து அழைத்துச் செல்வதும் தாயாகிய பெண்தான். அத்தகைய பெண்களை கேவலப்படுத்துவது வேதனையளிக்கிறது.

இத்தகைய இழிவான நிலையை மாற்ற ஒரே வழிதான் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் மகத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யவேண்டும். உங்கள் தோழியின், சகோதரியின் மேன்மையான குணங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் பெருமைகளை உங்கள் சுற்றம் உணரச் செய்யுங்கள். இது தான் பெண்களின் மீதான பார்வை மாற சிறந்த வழி.

இனியொரு விதி செய்வோம்!
நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் மேன்மையைப் போற்றுவோம்!

பதிவுலகில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, சமூகத்திற்கு மகத்தான சேவைபுரிந்துகொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் எனது இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். பெண்களின் மீதான தவறான கண்ணோட்டம் மாற என்னால் முடிந்த, சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்கிறேன்.

 தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.

வாழ்த்துகள்.

2 கருத்துரைகள்:


நானும் வழிமொழிகிறேன்...

பெண்கள் மேலே மேலே முன்னேறுவது கண்டு பொறாமை கொள்ளும் ஆண் வர்க்கம் செய்யும் கயமைத்தனம்.. ஏறி மிதிக்கவும் வேண்டாம், மேலே உயர்த்தி ஜொள்ளு விடவும் வேண்டாம், யாரும் யாரையும் தாக்காமல் அவரவர் வேலையைச் செவ்வனே செய்வோம், மனிதாபிமானத்துடன் அனைத்தையும் அணுகுவோம்... ஆண் பெண் என்ற பிரிவினை அங்கு விலகும்..



என் அனுமதியின்றி என்னைபற்றி புனைவு எழுதிய முகிலன் அர்விந்த் என்ன செய்ய.?

நமக்கு திரும்ப செய்ய முடியாது என்றில்லை.. அந்த லெவலுக்கு கீழிறங்க நேர விரயம் செய்ய வேண்டாமே..

சும்மா கத்திட்டு போவதை விட குப்பையென தள்ளிவிட்டு முன்னேறிடணும்..

எழுதுவதை எழுதிட்டு போகட்டும் என...

:)

இவர்கள் தான் மறைமுகமாக பெண்களுக்கு அதிக துணிவை , தைரியமான சிந்தனையை கொடுப்பதும். அதனால் வாழ்த்தலாம்..


பெண்ணை பூவாக பூஜித்து ஏமாற்றும் போது அடங்கி போகிறாள் ஏமாந்து.

ஆனால் அவளை வேதனைப்படுத்தும்போதே அவள் சக்தி வெளிப்படுது.. அவளுக்கே அப்போதுதான் தெரிகிறது..

அதுக்காகவாவது சில ஆண்களை பாராட்டணும்தான்.:)

நேர்மறை சிந்தனையோடு அணுகலாம் சில நேரம் இப்பிரச்னையை..


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U