கடிதங்கள்! காவியங்கள்!

நகைச்சுவைத் தென்றல் முனைவர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய கட்டுரைதொகுப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் உணர்ச்சிகளையும் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. கடிதங்கள், கடித இலக்கியங்கள் பற்றி அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை என்னை சிந்திக்க வைத்தது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் பல விஷயங்களை இழந்திருக்கிறோம். அவற்றில் கடிதங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மின்னஞ்சல், அலைபேசி, குறுந்தகவல்கள்  என்றே நாம் தகவல்களைப்  பரிமாறிக்கொள்கிறோம். இதனால் நமக்கு பல சௌகரியங்கள் இருந்தாலும் இழப்புகளும் இருக்கின்றன.

அலைபேசியில் என்னதான் நேரடியாக நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் கடிதங்களில் எழுதுவது போல் ஆழமாக அவற்றைப் பதிவு செய்ய முடிவதில்லை. இன்று அலைபேசியில் சொன்ன விஷயங்கள், இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் மறந்து விடுகின்றன. ஆனால் கடிதங்களில் எழுதும்போது அவற்றைப் படிப்பவர் அதனை எளிதில் மறப்பதில்லை. பல வருடங்கள் கழித்தும் நினைவில் நிற்கும் இனிமையான பதிவாக இருக்கும்.

இந்தக் கடிதப் போக்குவரத்துபற்றி அன்பர் ஒருவர் சொன்ன தகவல் சுவாரஸ்யமானது. 1960-70 களில் சினிமா ரசிகர்களிடையே கடிதப் போக்குவரத்து வெகுவாக இருந்தது. குறிப்பிட்ட சில நடிகர்களின் ரசிகர்கள் தினமும் ஒரு இடத்தில் கூடி தங்களுக்கு வெளியூரிலிருந்து மற்ற ரசிகர்கள் எழுதிய கடிதங்களைப் படிப்பார்களாம். அந்தக் கடிதத்தில் தங்கள் ஊரில் அந்த நடிகரின் படங்கள் எத்தனை நாள் ஓடியது, மக்களின் கருத்து எப்படியிருந்தது போன்ற தகவல்கள் இருக்குமாம். இன்று நாம் சினிமாவுக்கான டிக்கெட்டையே வலைதளத்தில் பெறுகிறோம்.

கடிதங்கள் மூலம் பெரும் புரட்சிகளும் நிகழ்ந்திருக்கின்றன. இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள் இன்றும் வரலாறாக அரசியல் பாடமாக இருக்கின்றன. அண்ணாவும் கலைஞரும் எழுதிய கடிதங்கள் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை ஏற்ப்படுத்தின.

காதல் உணர்ச்சிகளை கடிதங்களில் சொல்வது போன்று அலைபேசியிலோ குறுந்தகவல் மூலமாகவோ சொல்லமுடிவதில்லை. அதனாலேயே நமது இலக்கியத்திலும் கடிதங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. கவிஞர் வைரமுத்து காதல் வயப் பட்டவனின் உணர்ச்சிகளைக் கூறும்போது வெகு அழகாக "தபால்காரன் தெய்வமாவான்" என்று கூறுகிறார். காதலிக்கு கடிதமெழுத வானத்தின் நீளத்தை மையாக்கி சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்கலாக்கிடு என்று கூறுகிறார். சங்க இலக்கியங்களிலும் காதலுக்கு தூது போக சந்திரன், காற்று என இயற்கையை பயன்படுதியிருக்கிறார்கள்.


கடிதங்கள் மூலம் நாம் இழந்திருக்கும் மற்றுமொரு அருமையான விஷயம், பிலடேலி எனப்படும் தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கம். தபால் தலை என்பது ஒரு நாட்டின் வரலாற்றை கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு சின்னம். ஒவ்வொரு தேசத்தின் அஞ்சல் தலைகளைப் பார்க்கும்போதும் அந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பெருமையும் அறிந்துகொள்ள உதவுவதாலேயே தபால் தலைகளை சேகரிக்கும் வழக்கம் சுவாரஸ்யமாக உள்ளது. கடிதப் போக்குவரத்து முற்றிலுமாக குறைந்துவிட்ட நிலையில் தபால் தலை சேகரிப்பும் அறிய விஷயமாக ஆகிவிட்டது.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக நாம் இழந்திருப்பது கடிதப் போக்குவரத்துகளில் உள்ள உணர்ச்சிப் பரிமாற்றம் தான். அன்று தொலை தூரத்திலிருக்கும் ஊரிலிருந்து தாய்க்கு மகன் எழுதிய கடிதத்தில் இருக்கும் உணர்ச்சி, அந்தக் கடிதம் தாய்க்கு தரும் மகிழ்ச்சி, நிறைவு இன்று நினைத்த நொடியில் அலைபேசியில் பேசினாலும் கிடைப்பதில்லை.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நாம் இழந்திருப்பது  இன்றியமையாத பல விஷயங்கள் மட்டுமல்ல. உணர்ச்சிகளும் தான்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U