எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு

தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னால் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சுதந்திரப் போராட்டத்த்ல் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்

சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை,  மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.

ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.

ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார்.

தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.

இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார். 

இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிச் செய்த காவலாளி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அதைவிட முக்கியமான ஒன்று, மாண்புமிகு அமைச்சரே அன்று தனியாக வந்திருக்கிறார். ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் கூட ஒரு கூட்டத்தோடுதான் செல்கிறார். இத்தைகைய சம்பவங்கள் நேரும்போது, சம்பந்தப்பட்ட பிரமுகர் கூட சும்மா இருந்தாலும், உடன் செல்லும் நல்லவர்கள் சும்மா இருப்பதில்லை. "அய்யா யாருன்னு தெரியுமா?" என்ன தைரியம் இருந்து அண்ணன் தெரியாதுன்னு சொல்லுவ?" "உன்பேரு என்ன? எந்த ஊரு?" இப்படி எல்லாம் விசாரித்து மிரட்டி ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இந்த நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. சுயநலம் சிறிதும் இன்றி, நாட்டிற்காக வாழ்ந்த தலைவர்கள் இருந்த இடத்தில் இதுபோன்ற போலி மனிதர்களைத் தான் நாம் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறோம்.

புகழின் மறுபக்கம்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று பெருமளவு சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையுமே சார்ந்து இருக்கின்றன. நேர்மரையானதகாவோ எதிர்மரையானதாகவோ எந்தவொரு பரபரப்பான செய்தியும் திரைத்துறைப் பிரபலங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் முக்கியமானவொன்று, சினிமா ஹீரோக்களின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைப் பற்றியது.

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று, மலையாள நடிகர்களைப் பற்றியது. தமிழ் இலக்கியவாதி ஒருவர் தனது கேரளப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபத்தை ஒரு வார இதழில் கூறியிருந்தார்.

கேரளத்தின் சூப்பர் ஸ்டார்  என்று போற்றப்படும் மம்மூட்டியின் எளிமையைப் பற்றியும், அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மக்களின் அணுகுமுறைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். அதோடு தமிழ்நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதாக எழுதியிருந்தார்.

நானும் எண்ணிப்பார்க்கிறேன். அண்டை மாநிலமான கேரளத்திற்கும் நமக்கும் ஏன் இந்த வித்தியாசம்? சினிமாப் பிரபலங்கள் மீதான பார்வையில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்ன?

முதலில் எனக்குத் தோன்றியது, கேரளத்தில் நிலவும் கல்வியறிவு. இந்தியாவிலேயே, அதிகமான கல்வியறிவு உடைய மக்களைக் கொண்ட மாநிலம். இதனால் மக்களிடம், வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் தெளிவாகக் காணக்கூடிய பக்குவம் இருக்கிறது. திரைப்பட ஹீரோக்களைப் பற்றியும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களும் மண்ணில் தோன்றியவர்கள்தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.அவர்களை ஒரு வித பிரமிம்மூபோடு பார்ப்பதில்லை. தங்களைப் போன்ற ஒரு மனிதராகவே பார்க்கிறார்கள். இதனால், பொது இடங்களில் இந்த நாயகர்களைப் பார்க்கும்போது எந்தவித சலசலப்பும் ஏற்படுவதில்லை.

இந்த ஒன்று தான் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். இங்கு சினிமா ஹீரோக்களை தெய்வமாக பார்ப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்போது அநேகம் பேர் என்று சொல்வது சற்று ஆறுதல்தான். முப்பது நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய கால கட்டத்தில், திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றுபவன் விண்ணுலக தேவனைப் போலவும், திரையில் கெட்டவர்களாகத் தோன்றும் வில்லன்களை, நிஜத்திலும் கொடூர அரக்கனைப் போலவும் நினைத்தவர்கள் நம் மக்கள். திரையில் தோன்றும் பிம்பங்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததனால் ஏற்படும் குழப்பம் இது.

இப்படி பொது மக்களிடம் தமக்கு ஏற்பட்டுள்ள மதிப்பை எத்தனை நாயகர்கள் உணர்ந்து, அதற்க்கேற்ப்ப செயல் பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே தேறுவர். திரையில் ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவரது இயற்கை குணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு படத்தில் மதுவை வெறுப்பவனாக நடிக்கும் நாயகன், நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது அவருடைய தனிப்பட விருப்பம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால், மக்கள் தன்னை மதிக்கிறார்கள் என்று உணர்ந்து, உண்மையிலேயே குடிப் பழக்கத்தை நிறுத்துபவர்கள், நிஜ நாயகர்களாக உருவாகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மிகவும் குறைவானவர்களே.

சினிமா ஹீரோக்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடாத ஊடங்ககளே கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கார் உபயோகிக்கிறார்கள், கல்யாண மண்டபங்கள், பண்ணை வீடுகள் முதலிய சொத்துகள் என்ன வைத்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பாமர மக்களையும் சென்று சேர்கின்றன. ஆனால் இந்த ஆடம்பர தோற்றத்துக்குப் பின் இந்த நட்சத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையை அந்த மக்கள் அறிவதில்லை.

இன்றைய தேதியில், தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொகையை சம்பளமாகப் பெருமளவிற்கு, அவருக்கு இருக்கும் அவசியங்கள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாயகனின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், அவனது வாழ்கை முறையைப் பற்றி நாம் அறிவதில்லை.

மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு ஹீரோ, ஒரு பொது இடத்தில் தோன்றினால், அங்கு என்ன களேபரம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். அவரைப் பார்க்கவும், அவருடன் கை குலுக்கி, கையெழுத்து பெறவும் முண்டியடித்துக்கொண்டு ஒரு சிறு பிரளயத்தையே உண்டாக்கிவிடுவார்கள் மக்கள். இப்படி இருக்கும்போது, ஒரு நாயகன் சாமான்யனைப் போல சாதாரண உணவு விடுதியில் சென்று தன் குடும்பத்தோடு உணவருந்த முடியாது. அவர்களது தனிமையையும் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய, ஒரு நட்சத்திர உணவகத்திக்கே அவர்கள் செல்ல முடியும்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, சாதரணக் கார்களில் பயணம் செய்தால் என்ன ஆகும்? பணத்தையெல்லாம் இழந்துவிட்டார். கடன் தொல்லையில் இருக்கிறார்.அவருக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது. அவரது புதிய படம் வெற்றிபெறாது . அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். போன்ற வதந்திகள் அவருக்கு எதிராக பரப்பப்படும். அதனால், தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், ஒரு ஆடம்பர சொகுசுக் காரை, அந்த ஹீரோ பயன்படுத்த வேண்டிய நிலை.

இதையெல்லாம் விட, ஒரு சினிமா நட்சத்திரமாக இருக்கக் கூடிய ஒருவர் இழக்கும் முக்கியமான விஷயம், தனிமை. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட முடியாத ஒரு பரிதாபத்திற்க்குரிய மனிதர். ஒரு சாமாநியனைப் போல தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல இயலாது.


நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்தில் கூறுவார். "ஓவர்நைட் ஸ்டார் என்பது தங்கக் கூண்டு போன்றது" என்று. ஆம். இந்த நடிகர்களின் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். தங்கக் கம்பிகளால் பூட்டப்பட்ட சிறையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து, புகழின் உச்சிக்குச் செல்ல, இவர்கள் கொடுத்த விலை, தங்களின் தனிமையும் சுதந்திரமும். இந்த நாயகர்கள் அடைந்திருக்கும் புகழின் மறுபக்கம் இதுதான்.

தங்கத்தில் செய்திருந்தாலும் சிறை சிறைதான். இதனை உணர்ந்தவர்கள், ஆடம்பர வாழ்கையை வெறுக்கத் துவங்கிவிடுகின்றனர். ஆனால், இந்த சிறையினை கௌரவமாகக் கருதுபவர்கள், அறியாமையில் உழன்று, வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள.

கேரளத்தில் மக்கள் சினிமா நட்சத்திரங்களை சக மனிதர்களாகவே பார்க்கிறார்கள். அதனால், இந்த நாயகர்களும், எளிமையான வாழ்கையை வாழ முடிகிறது. தமிழக மக்களும் விரைவில் இதனை உணர்ந்துகொள்வார்கள்.

அலைபேசி அடிமைத்தனம்

நம்முடைய வாழ்க்கை, இன்று இயற்கையால் சூழ்ந்திருப்பதைவிட, இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலுமே நிரம்பியிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் சில வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை, வாகனங்கள் இன்றி பக்கத்துத் தெருவுக்கு கூட நாம் செல்வதில்லை, தொலைக்காட்சி இல்லாமல் பொழுதைக் கழிக்க இயலவில்லை. இப்படி, அவற்றிடம் நம்மை முற்றிலுமாக இழந்துவிட்ட அறிவியல் சாதனங்களில் மிக முக்கியமானது, அலை பேசி.

கிட்டத்தட்ட நம் உடலில் ஒரு உறுப்பாக, மூன்றாவது கையாக நம் வாழ்வில் ஒன்றிவிட்ட்ட ஒரு சாதனம் இந்த அலை பேசி. Mobile Phone. இந்த சின்னஞ்சிறிய கருவி இல்லாமல் நம்மால், இயங்க முடிவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, தகவல்கள் உடனடியாக பரிமாறிக்கொள்ளபப்டுகின்றன, அதோடு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் உபயோகப்படுகிறது. இப்படி பல அம்சங்களில் நமக்கு உதவும் இந்த கைபேசியை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அப்படிச் செய்த ஒரு மனிதரையும் சமீபத்தில் காண நேர்ந்தது.

சில அரசியல், சினிமா பிரபலங்களும், இலக்கியப் பிரமுகர்களும் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ஆனால், நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், அலைபேசி இல்லா வாழ்க்கையை அனுபவித்து வருவதை கண்டபோது ஆச்சர்யம் அளித்தது. இத்தனைக்கும் அவர் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி இந்த சிறிய தேவதையை புறக்கணித்துவிட்டு இருக்கிறார் என்று வியந்து அவரிடமே கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன காரணங்கள் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தின.

"இந்த அலைபேசி இல்லாததால், நம்முடைய நேரம் முழுமையாக நம்மிடமே இருக்கிறது" என்றார். "எங்கேனும் வெளியே செல்லும்போது, நண்பர்களைப் பார்த்தால், எந்த இடையூறும் இன்றி மணிக்கணக்கில் பேச முடிகிறது. அலைபேசி இருந்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வந்து விடுகிறது." என்று கூறியவர், "முக்கியமான கூட்டங்களிலும், கலந்துரையடல்களிலும் இருக்கும்போது அனாவசியமான கவனச் சிதறல்கள் ஏற்படுவதில்லை" என்று விளக்கினார்.

"இதெல்லாம் சரி, ஆனால் உங்கள் தொழிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? அலைபேசி உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியமல்லவா?" என்று கேட்டேன்.

"இல்லை கைபேசி இல்லாதது என் தொழிலுக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. " என்று சிரித்தார்.

"அது எப்படி?" என்று கேட்டேன் மேலும் ஆச்சர்யத்துடன்.

"என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் என் அலுவலக என்னை அதாவது landline எண்ணை வழங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் நேரடியாக அங்கு தொடர்புகொண்டு வேண்டிய சரக்கை தருவித்துக்கொள்வார்கள். ஒரு வேளை நான் அலைபேசி வைத்திருந்தால், அவர்கள் என்னை அழைத்து இந்த சரக்கை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்வார்கள். பின்னர் நான் மீண்டும் என் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டும். இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது.அதனால்தான் எனக்கு கை பேசி உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் என் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடைமுறை சௌகர்யமாகவே இருக்கிறது." என்றார்.

எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நம்முடைய விஞ்ஞான  உபகரன்களால் எத்தனை அழகான வாழ்க்கை மறைக்கப்பட்டிருக்கிரதேன்று உணர்ந்தபோது வேதனையாக இருந்தது.

நண்பர் சொன்னது போல் அலைபேசி உபயோகிக்கும்பொழுது, நம்முடைய நேரம் நம்மிடம் இருப்பதில்லை. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்வதை போல்லவே இயங்கிக்கொண்டிருக்கிறோம். சந்தித்துப் பார்க்கும் பொழுது, எதோ அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போலவே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தமானவர்களுடன், நேரம் செலவிட முடியாமல், சிறிது நேரத் தனிமையின் சுகத்தை அனுபவிக்க முடியாமல், சூழ்நிலைகளுக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது உணரமுடிந்தது.

ஆனால் இந்த அடிமைத்தளை வேறொருவர் நம்மீது சுமத்தியதல்ல, நாமே நமக்கு சூட்டிக்கொண்டது. இந்த அலைபேசி அடிமைத்தனம், பாரபட்சமின்றி, அனைத்துத் தரப்பினரிடமும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்யாசம் இன்றியும் பரவியிருக்கிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டும், வாலிபர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புவதிலும், பெரியவர்கள் தொழில்த் தொடர்புகளை பேசிக்கொண்டும், பெண்கள் தொலைகாட்சி நிகழ்சிகளைப் பற்றியும் தம் குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வதிலும் அலைபெசியிடம் காலத்தைப் பரிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நண்பரிடம் பேசியபோது உணர முடிந்த மற்றொரு விஷயம், இந்த அடிமைத்தளையை உடைத்தெறியவும், இந்த விஞ்ஞான சிறையிலிருந்து வெளியே வரவும் நமக்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியமும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. நான் உட்பட. அனாலும் இந்த இந்த சாதனங்களின் உபயோகத்தை குறைக்க முடியும். அதற்க்கான் முயற்சியையாவது மேற்கொள்ள எல்லோராலும் நிச்சியமாக முடியும்

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U