இதுக்குப் பேர்தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்குறதா?

 ராபர்ட் மாக்ஸ்வெல், பிரிட்டனின் புத்தகப் பதிப்புத் துறையில், கொடி கட்டிப் பறந்தவர்.மிகவும் கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும், தனது பதிப்பகத்தை நடத்தும் இவருக்கு, பிடிக்காத பழக்கமொன்று உண்டென்றால், அது புகைபிடிப்பதுதான். தனது நிறுவத்தில், அலுவலக வளாகத்தில், யாரும் புகைபிடிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

ஒரு நாள் மாக்ஸ்வெல், தன் அலுவலக அறையை விட்டு வெளிய வந்தபோது, சற்று தூரத்தில் ஒரு நபர், புகை பிடித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான். மாக்ஸ்வெல்லுகு கோபம் தலைக்கேறியது.
 
நேராக அந்த நபரிடம் சென்றார்.

"இங்கு புகை பிடித்தால் என்ன தண்டனை தெரியுமா?" என்றார்

அந்த மனிதர் சற்றும் அசராமல், "தெரியாது" என்றார்.

"உன்னுடைய சம்பளம் எவ்வளவு?" என்றார் மாக்ஸ்வெல்.

"வாரத்திற்கு எழுபத்தியைந்து பவுண்ட்" என்றார் புகைபிடிதுக்கொண்டிருந்த நபர்.

மாக்ஸ்வெல் தன்னுடைய கோட் பையில் இருந்து முன்னூறு பவுண்ட்களுக்கான தாள்களை எடுத்தார்."இந்தா பிடி. இங்கு புகை பிடித்ததற்கான  தண்டனையாக உன் வேலை போய்விட்டது. இந்த ஒரு மாதச் சம்பளத்தை எடுத்துகொண்டு இங்கிருந்து ஓடிவிடு. என் கண் முன்னே நிற்காதே" என்று கத்திவிட்டு தன் அறைக்குள் புகுந்து விட்டார்.

புகைபிடித்துக்கொண்டிருந்த ஆள், எதுவும் பேசாமல், அந்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

மாக்ஸ்வெல் பின்னர் தன் நிர்வாகிகளிடம் அந்த ஆளைப் பற்றி விசாரித்தார்.

அவன் நம் நிறுவனத்தில் வேலை செய்பவனல்ல என்றும், சரக்குகளை இறக்கி வைத்துவிட்டுப் போக வந்தவன் என்றும் பதில் வந்தது.

மாக்ஸ்வெல் தன்னைத் தானே நொந்துகொண்டார்.

மாக்ஸ்வெல்லின் கோபத்தால், அவருக்கு முன்னூறு பவுண்ட் நஷ்டமானது.

இதே நிலைதான் நமக்கும். நாம் சினத்தின் வசப்படும்போது, நமக்கு நாமே கேடு விளைவித்துக்கொள்கிறோம்.

நிர்வாகத்தில் கண்டிப்பு இருக்கலாம், ஆனால் அர்த்தமற்ற கோபமும், கண்மூடித்தனமான நடைமுறையும் கூடாது.

வாழ்க்கையில் நாம் கோபப்படும்போது, பல உன்னதமான மனிதர்களையும் இழக்க நேர்கிறது. மனைவியிடம் கோபம்கொண்டு பிரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? கோபத்தால் நண்பர்களை இழந்தவர்கள் எத்தனை பேர்?

கோபத்தால் நாம் சாதிக்கக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் இழப்பதற்கு நிரம்ப இருக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U