தீர்வுகாண விரும்பும் மாவோயிஸ்டுகள்.

குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தன்றும் மக்களுக்கு உரையாற்றுவதே இந்திய ஜனாதிபதியின் தலையாய கடமை என்று கிண்டலாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இருந்தாலும் இந்த சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பிரதிபா பாட்டில் நிகழ்த்திய உரை பயன் தருவதாக உள்ளது.

உலகில் பல பிரச்னைகள் பேச்சாலேயே உருவாகியுள்ளன பேச்சாலேயே தீர்ந்தும் உள்ளன. பெரும் புரட்சிகளும் பேச்சாலேயே நிகழ்ந்துள்ளன. ஆளுமை மிகுந்த தலைவரால் சரியான சமயத்தில், தேர்ந்த இடத்தில் பேசப்படும் ஒரு பேச்சு நாட்டில் உள்ள பெரும் குழப்பங்களைத் தீர்த்துவிடும். மாபெரும் தலைவர்கள் பேச்சாலேயே பல பிரச்னைகளைத் தீர்த்துவைத்திருக்கின்றனர் அந்தப் பேச்சுக்கள் இன்றும் நினைவு கூறப்ப்படுகின்றன. ஆபிரகாம் லிங்கனின் தேர்தல் சொற்பொழிவுகள், கென்னடியின் பிரசங்கங்கள், மார்டின் லூதர் கிங் ஜூனியரின் பேச்சுக்கள்  என்று மக்களை வசீகரித்த, பல ஆண்டுகால சிக்கல்களை தீர்த்துவைத்த சொற்பொழிவுகள் ஏராளம்.

அந்த வகையிலேயே அமைந்தது அறுபத்துனாங்காவது இந்தியசுதந்திர தினத்தன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதியின் சொற்ப்பொழிவு.

தனது சுதந்திர தின உரையில் மாவோயிஸ்டுகளுக்கு  வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விட்டார் ஜனாதிபதி. பிரதமர் மன்மோகன் சிங்கும் இதனை வலியுறுத்தினார். இதற்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.

தேசத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.நாட்டில் உள்ள ஊழல்களை எதிர்த்து போராடுவதாக சொல்லும் மாவோயிஸ்டுகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனால் ஜனாதிபதியும் பிரதமரும், நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீர் இயக்கங்களை பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அழைப்புவிடுத்தனர்  .

இவர்களின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வர மாவோயிஸ்டுகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தேசத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடிந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு மாவோயிஸ்டுகள் தலைவர் கிஷன்ஜி மூன்று நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்.

மத்திய  உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசைய்யா இருவரும் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவரான் ஆஜாதின் படுகொலைக்குப்  பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்

இருதரப்பிற்கும் பொதுவான நபர்களைக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இது விஷயத்தில் அரசு மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜீயை வைத்து பேச்சு நடத்த பரிசீலித்துவருவதாகவும் அதனால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மம்தா பானர்ஜி இல்லையென்றால் எழுத்தாளர் அருந்ததி ராய், சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் போன்ற மாவோயிஸ்ட் அனுதாபிகளின் பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளனர்.

இறுதியாக மூன்று மாத காலம் போற நிறுத்தம் அறிவிக்கப் பட வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் கோதேஷ்வர் ராவ் என்ற கிஷன்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும் மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பச்சைக் கோடி காட்டியுள்ளது.

மம்தா பானர்ஜியும் மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த சம்மதம் தெரிவுத்துள்ள நிலையில் விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

ஆயுதங்கள் ஏந்திப் போராடுவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தான் மிஞ்சுமே தவிர பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது. அப்படியே கிடைத்தாலும் நிரந்தரத் தீர்வாக இருக்காது. இது வரலாற்றில் பல முறை நிருபணமாகியுள்ளது.இந்திய சுதந்திரமே அஹிம்சையால் கிடைத்ததுதான். சாத்விகம் தீவிரவாதம் என்று இரு வழிகளில் சுதந்திரத்திற்க்காக போராடினாலும் இறுதியில் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டமே வென்றது.இதனை உணர்ந்து வன்முறையைக் கைவிட்டு மக்களின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் நாட்டில் கலவரங்கள் அடங்கி வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உதவும். மேலும் இதில் கடிக்கும் தீர்வு தேசத்தில் இயங்கும் மற்ற தீவிரவாத இயக்கங்களும் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர தூண்டுகோலாக வேண்டும்.

மக்களின் பிரச்னைகளுக்காக போராடுவதாக சொல்லப் படும் மாவோயிஸ்டுகளுக்கு தேசத்தின் சில பகுதிகளில் மக்கள் அதரவு இருப்பதாகவே தெரிகிறது. இது தேசத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவுமானால் ஜனநாயகத்திற்க்கே பெரும் அச்சுறுத்தலாகும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்ப்படாமல் தவிர்க்க வேண்டுமால் இது போன்ற சமரச பேச்சு வார்த்தைகளாலேயே முடியும்.

இந்திய அரசாங்கம் பழங்குடி மக்களின் வாழ்வில் அதிக அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது. அறியாமையும் புறக்கணிப்புமே கண்டு வந்த இவர்களின் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.

மேலும் இது போன்ற முக்கிய பிரச்னைகளை  ராகுல் காந்தி போன்ற இளம தலைவர்கள் நேரடியாக கையாள்வது சிறந்தது. இதனால் நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரம் தெளிவாகத் தெரியும். மக்களுக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். சிக்கலான பிரச்னைகளில் அவரது அணுமுறை குறித்து உலகிற்கு தெரியவரும்.அவரது ஆளுமையை தேசம் உணர சந்தர்ப்பமாக இருக்கும். ராகுல் இதில் தலையிட்டாலும் இல்லையென்றாலும் அவரது நடவடிக்கைகள் கவனிக்கப் படுமென்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட இரு தினங்களில் அதற்கு சம்மதம் தெரிவித்ததிலிருந்து அவர்கள் ஒரு சுமூக தீர்வை எதிர்பார்கிறார்கள் என்று தெரிகிறது.இதனை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் நாட்டிற்கு வர இருக்கும் பெரும் ஆபத்துகளையும் இழப்புகளையும் தவிர்ர்து தேசத்தின் முக்கியமான பல பிரச்னைகளுக்கு முடிவு காண முடியும்.

ஒரு மகத்தான மனிதரின் வழிகாட்டுதலில் அற வழயில் போராடி சுதந்திரம் பெறப்பட்ட நாட்டில் வன்முறைப் புயல் அடிக்க வேண்டுமா? அல்லது அமைதி தென்றல் வீச வேண்டுமா என்பதை அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும்

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U