காசுக்கு நியூசு : ஊடகங்களின் ஊழல்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது ஊடகம். மக்களுக்கு செய்தியை கொண்டு செல்வது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டும் கடமையும் இந்த ஊடகங்களுக்கு உண்டு. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் சக்தி வாய்ந்த துறை.

மேலை நாடுகளில் ஊடகங்கள் அம்பலபடுத்திய ஊழல்களால் ஆட்சியே கவிழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் இதற்குச் சிறந்த உதாரணம். அந்த நாட்டில் வெளிவரும் முன்னணி பத்திரிக்கைகளான, Time, Newyork Times, குறிப்பாக Washington Post போன்றவை இந்த ஊழலை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றினர். அவர்களது பத்திரிகை செய்திகளால் அந்நாளைய அதிபர் Richard Nixon பதவி விலகினார். அமெரிக்க வரலாற்றில் இப்படி ஊழல் புகாரில் சிக்கி பதவி விலகிய ஒரே அதிபர் இவர் தான்.

இத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்கள் நம் இந்திய தேசத்தில் எப்படிச் செயல்படுகின்றன?

சமீப காலமாக வரும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஊடகங்களிலும் ஊழல் இருப்பது தெரிய வருகிறது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மகாராஷ்ட்ராவில், 500 கோடி ரூபாய்க்கு  மேலும், ஆந்த்ராவில் 300 கோடி ரூபாய்க்கு மேலும், பணம் பெற்றுக்கொண்டு, அக்கட்சிகளுக்குச் சாதகமாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசாங்கத்தின் அவலங்களை, மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஊடகங்களே ஊழல் செய்வது வெட்ககேடானது. ஒரு சில பத்திரிக்கைகள் செய்யும் இதுபோன்ற தவறுகளால், ஒட்டுமொத்த ஊடகத் துறையும் பாதிக்கப்படுகிறது.

ஒரு தேசத்தின் கட்டுமானத்திலும், வளர்ச்சியிலும் ஊடங்கங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு அரசாங்கத்தை ஆக்கவும், அழிக்கவும் வலிமை கொண்ட துறை இது.

தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களை இணைக்கும் சக்தியிது.

பல கலாச்சாரங்களும், மொழிகளும், இனங்களும் நிறைந்த இந்தியா போன்ற தேசத்தில், பத்திரிக்கைகளின் கடமை பெரிது. ஆனால் இந்த வேறுபாடுகளே ஊடங்கங்களுக்கு நம் நாட்டில் சிக்கள்கலாகவுள்ளது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக வழங்கப் படுவது ஹிந்தி. அரசாங்கம் வெளியிடும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ஹிந்தியிலேயே  இருக்க முடியும். அல்லது, இன்றைய காலகட்டத்தில், ஆங்கிலத்திலும் அறிவிக்கப்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் இருப்பதோ பல மொழிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி பேசபடுகிறது. ஹிந்தி பொதுவான மொழியாக இருந்தாலும், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் இந்த மொழி புழக்கத்தில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தேசம் முழுவதும் ஒரு செய்தியை கொண்டு செல்வது கடினம்.

அதுமட்டுமல்லாது, இன்று தொழில் துறை வளர்ச்சியால், இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இருக்கின்றன. அதாவது, தலைநகரில் வெளியிடப்படும் செய்தியொன்று, அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கப்படுகின்றன. இப்படிச் செய்யும்போது, அந்த செய்தியின் பொருள் மாற நிறைய வாய்ப்புள்ளது. அதோடு, சில பத்திரிகையாளர்கள், பணத்திற்காக அந்த மாநில மக்களுக்கு சாதகமானது போல் இந்தச் செய்திகளை மாற்றி எழுகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைகளால், ஒரு செய்தி, ஒன்று போல தேசத்தின் அனைத்து மக்களையும் சென்று சேர்வதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒன்று மட்டுமே தொலைகாட்சி சேனலாக இருந்தது. பத்திரிகைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அன்று தூர்தர்ஷனின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஹிந்தியிலேயே இருக்கும். ஒளிபரப்பப்படும் படங்களும், ஹிந்திப் படங்களாகவே இருக்கும். அன்றைய நிலையில், அந்த ஹிந்திப் படத்தை பார்க்காதவர் வெகு சிலர். ஆனால் இன்று, எத்தனை பேர் தங்கள் ஊர் தியேட்டர்களில் வெளிவரும் ஹிந்திப் படங்களைப் பார்க்கிறார்கள்?

இன்று ஒரு மொழிக்கு பல சேனல்கள் வந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் செய்திகளை, தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு ஏற்றவாறு திரித்துக் கூறுகின்றன. இதனால் மக்கள் உண்மையான செய்திகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.

இந்த நிலை மாற, ஒரே செய்தி நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியிட வேண்டும். அந்த நிறுவனம் எந்தக் கட்சி, மொழி, இணச் சார்புமில்லாமல் இருக்க வேண்டும்.

இன்றைய பத்திரிகைகளில் பெரும்பான்மையானவை வியாபார நோக்குடனேயே செயல்படுகின்றன. இதனால் சில செய்திகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.

நாட்டில் நடக்கும் எந்தவொரு ஊழலோ, குற்றமோ மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முதல் பக்கத்தில் இடம்பெறும் ஐந்தாவது நாள், பின்னுக்குத் தள்ளப்படும். அன்றைய தினம் பரபரப்பாக பேசப்படும் வேறு ஒரு செய்தி முதல் பக்கத்திற்கு வரும். மக்கள் பழைய செய்தியை மறந்துவிடுவார்கள்.

இதனாலேயே பெரும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போய்விடுகின்றன. நீதி மன்றத்தில் வழக்குகளும் இழுத்துக்கொண்டே செல்கின்றன.

பத்திரிகைகள் அந்த செய்தியை தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தால், மக்கள் கவனிக்கிறார்கள் என்ற பயத்தில் விசாரணை துரிதமாக நடந்து, விரைவாக முடிவு தெரியும்.

பத்திரிகைகளின் இதுபோன்ற செயல்களால்தான் போலிச் சாமியார்களும், மோசடி பேர்வழிகளும், கைதாகும்போது கொஞ்சம் கூட கவலைபடாமல் சிரித்துக்கொண்டே, புகைப்படங்களுக்குப் போஸ் கொடுக்கின்றனர். சில நாட்களில் மக்கள் இந்தப் பிரச்னையை மறந்துவிடுவார்கள், பின் மீண்டும் அவர்களை புதிய வகையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்துடன் சுதந்திரமாக திரிகின்றனர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா, இதற்கு சரியான உதாரணம்.

நம் தேசத்தில் இருக்கும் அத்தனை ஊடங்கங்களும் இப்படியிருக்கின்றன என்ற சொல்லவில்லை. நேர்மையான பத்திரிகைகளும் இருக்கின்றன. ஆனால் அவை மக்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன.

பொய்மை வாய்மையை மறைத்திருக்கிறது.

ஒரே செய்தி நிறுவனம், இந்தியாவிலுள்ள ஆனைத்து, அல்லது பெரும்பான்மையான மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். தங்கள் சுய லாபத்திற்காக செய்திகளை திரித்து கூறாமல், நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்து, தேசம் நிலையான, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கும்

இது விவகாரத்தில், அரசாங்கம் நேரடியாக தலையிட்டு முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

நேர்மையான, நிலையான பார்வைகொண்ட ஊடகங்கள் இல்லாது, ஊழலற்ற, வளமான இந்தியாவை உருவாக்க முடியாது.

ஊழல்களை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியவர்களே ஊழல் செய்தால், எப்படியிருக்கும் வளர்ச்சி?

1 கருத்துரைகள்:


வேலியே பயிரை மேய்வதுபோலன்னு சொல்லுங்க


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U