ரக்ஷா பந்தன் - ரட்சிக்கும் பந்தம்!


தேசம் முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாப்பட்ட செய்திகளால் மகிழ்ந்திருந்தபோது, உ.பி.இல் நடந்த ஒரு சம்பவம் மட்டும் நெகிழ வைத்தது.
உத்திர பிரதேச மாநிலமான கான்பூரில் வசித்து வருபவர், மனிஷ் பேகால். இவரது மகன் அனுஜ், அப்லாஸ்டிக் அனிமியா, எனும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பதின்னான்கு வயதே நிரம்பிய இந்த சிறுவனுக்கு, எலும்புகளில் ரத்த செல்கள் போதிய அளவில் உற்பத்தியாகாமல் தடைப்பட்டுள்ளது. மேலும், இந்த நோயினால் ஏற்படும் இரத்தப் போக்கும் எளிதில் நிற்காது. ஜலதோஷம் பிடித்தாலோ, மூக்கில் லேசான ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, மிக ஆபத்தான நிலைக்குகொண்டு சென்றுவிடும்.

இத்தகைய கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டுள அனுஜ், படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்கு 20 லட்சம் ருபாய் செலவாகும் என்றும் கூறிவிட்டனர்.

மோட்டார் மெக்கானிக்கான, மனிஷால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாததால், பலரிடம் உதவி வேண்டினார். சில தன்னார்வக் குழுக்களும், நாடகக் குழு ஒன்றும் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. ஆனால், இந்த சிறுவனின் சகோதரிகளின் செயல்தான், நெகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்ரீ சிதி (13), மஸ்கான் (9), இருவரும் அனுஜின் தங்கைகள். தங்கள் அண்ணன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு மிகவும் வருந்தினர். அவனை எப்படியும் அந்த நோயின் பிடியிலிருந்து விடுவித்தே தீருவது என்று முடிவு செய்தனர். அதுவே அவனுக்கு சிறந்த ரக்ஷா பந்தன் பரிசாக அமையும் என்று கருதினர்.

இதற்காக அந்த இரு சிறுமிகளும், பள்ளி முடிந்ததும், கான்பூரின் அதிக ஜன நடமாட்டமுள்ள தெருக்களில் அமர்ந்து, வருவோர் போவோருக்கெல்லாம் ஷூ பாலிஷ் போடத் துவங்கினர். நோயால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும், தங்கள் சகோதரனைக் காப்பாற்ற உதவுமாறு, ஒரு அட்டையையும் எழுதி அருகில் வைத்துக்கொண்டனர். அந்த வழியாக செல்லும் பலரும், இதைக் கண்டு இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

தங்கள் சகோதரனுக்காக இந்தப் பணியைச் செய்துவரும் இந்த சிறுமிகள், தங்கள் அண்ணன் விரைவில் குணமடைந்து விடுவானென்றும், இதுவே நாங்கள் அவனுக்கு கொடுக்கும் விலை உயர்ந்த ரக்ஷா பந்தன் பரிசு என்றும் கூறினர்

இந்த செய்தியைப் படித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எந்த வேலையையும் செய்ய கெளரவம் பார்க்கும் இன்றைய நிலையில், இந்த சிறுமிகள், தங்கள் சகோதரனுக்காக, ஷூ பாலிஷ் போடுவது எத்தனை பெரிய விஷயம்? அதை விட முக்கியம், தங்கள் அண்ணன், நோய்வாய்ப்பட்டிருக்கிறான், அவனுக்கு உதவுங்கள் என்று பிச்சை எடுக்காமல், ஏதோவொரு வேலை செய்து, அதன் மூலம் பணம் பெற நினைக்கும் இவர்களது எண்ணம் மிக உயர்வானது.

இந்த பாசம்தான், இந்த போராடும் குணம்தான், இந்தியர்களை உலகின் மற்ற நாட்டவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. உலகில் வேறு எந்த தேசத்திலாவது, அண்ணன் தங்கப் பாசம் இந்தளவுக்கு இருக்குமா என்று தெரியாது. அப்படியிருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட இந்தியர்களின் பாசமே சிறந்தது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சொத்துக்காக உடன் பிறந்தவர்களைக் கொலை செய்யும் இந்தக் காலத்தில், இந்த பிஞ்சு மனம் கொண்ட சிறுமிகளின் செயலில்தான் எத்தனை அன்பு! வளர்ந்துவிட்ட பின், அவ்வப்போது சில மனக்கசப்புகள் வந்தாலும், இத்தகைய உன்னதமான அன்பு மாறுவதில்லை. வெறுப்புகளும், கோபங்களும் மேலோங்கியிருந்தாலும், அடி மனதில், நம் பிரியத்திற்குரியவர்களின் மீதான நமது அன்பு, என்றும் மாறாது இருக்கும்.

இத்தகைய பாசம் இந்தியர்களிடம் காணப்படுவதற்குக் காரணம், நமது குடும்ப அமைப்பே.
சிறு வயதில் இதுபோன்ற வெள்ளந்தியான பாசத்துடன் இருந்தாலும், வளர, வளர, ஒரு இடைவெளி விழத் தொடங்கிவிடுகிறது. குடும்பம் பெருகும்போது, சில மனக்கசப்புகளும், சச்சரவுகளும், ஏற்படவே செய்கின்றன. ஆனாலும், அதையெல்லாம் கடந்து, நம் ஆழ்மனதில் அந்த அன்பு, என்றும் மாறாமல் இருக்கிறது. சரியான சமயங்களில் அதனை நாம் உணர முடிகிறது.

இத்தகைய பந்தங்களுக்கு, நம் சம்ப்ரதாயங்களும் காரணம். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டதொடு, அந்த குடும்பத்தின் கடமை முடிந்துவிடுவதில்லை. பெண்ணின் முதல் பிரசவம், அவளது தாய் வீட்டிலேயே நடக்க வேண்டுமென்பது, நமது சம்ப்ரதாயம். பெண்ணின் மறுபிறப்பு என்ற சொல்லக்கூடிய, பிரசவத்தின்போது, அவளது தாய் வீட்டார் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அது மட்டுமில்லாது, பிறந்த குழந்தைக்கு, பெண்ணின் உடன் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இதுபோல திருமணத்தோடு, பெண்ணின் பிறந்த வீட்டு உறவு முரிந்துவிடுவதில்லை. அவளுக்கு ஒரு கஷ்டம் வரும்போதும் அரவணைக்கவும், அவளது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதிலும் அவர்கள் உடனிருக்கிறார்கள்.

இதனாலேயே சகோதர உறவின் மகத்துவத்தை உணர்த்தும், ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். இது போன்ற பண்டிகைகளின் நோக்கம், சகோரத்துவத்தை போற்றுவது மட்டுமல்ல, பெண்களின் மகத்துவத்தையும், அவர்களின் மீதான நமது மரியாதையையும் உணர்த்தவும்தான்.

மகாபாரதத்தில் எப்படி, திரௌபதிக்கு ஒரு ஆபத்து நேர்ந்தபோது, சகோதரனாகிய கிருஷ்ணன் வந்து காப்பாற்றினாரோ, அது போல, ஒவ்வொரு பெண்ணையும், நம் சகோதரியாக பாவித்து, அவளை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற உயரிய பண்பாடுகள் கொண்ட தேசம், நம் தேசம்.

இதனால்தான், பல கலவரங்களும், வன்முறைகளும், நவீனத்துவம், மேற்க்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் எண்ணற்ற சீர்கேடுகள் வந்தாலும் நம் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

நிச்சயமாகச் சொல்ல முடியும், தீவிரவாதமும், இயற்கைச் சீற்றங்களும், உலகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், சக மனிதனை நேசிக்கும் உயர்ந்த பண்பை, உலகம் முழுதும் பரப்பி, அழிவுகளிலிருந்து காக்கும் பணியை நம் தேசமே செய்ய முடியும்.

இத்தகைய உயர்ந்த பண்பாடுகளையும், பாரம்பரியத்தையையும் கொண்ட, தேசத்தில் பிறந்தது கண்டு நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U