முல்லாவின் அல்லா

முல்லா நஸ்ருதினை நமக்குத் தெரியும். குழந்தைகள் கதையில் வரும் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம். அனால் அவரது கதையில் சொல்லபப்டும் கருத்துகள், ஆழ்ந்த பொருள் உடையதாக இருக்கும். அவரை ஒரு ஞானி என்றே சொல்லலாம். அவர் நகைச்சுவையாக பேசினாலும், அதில் பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட முல்லா நஸ்ருதீன் மீது ஒரு நாள் ஒரு வழக்கு தொடரப்பட்டது.அவரது பெருமை, புகழ் கண்டு பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

புகாரின் முக்கிய அம்சம், முல்லா மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான். மன்னரிடமும் முல்லாவுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. ஆனாலும் வேறு எந்த வழக்காக இருந்தாலும் மன்னர் தள்ளுபடி செய்திருப்பார், மதத்துக்கு எதிராக செயல்படுவாதாக கூறப்பட்டபடியால், மன்னர் அரசவையில் முல்லாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தார்.

முல்லா அவைக்கு வந்தார். அவர் மீது விசாரணை என்று கேள்விப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் பலரும் அரசவையில் கூடி இருந்தனர்.

வழக்கு தொடந்தவர்கள் எழுந்தனர். முல்லா ஊர் ஊராகச் சென்று கடவுளுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். பல ஊர்களிலும் முல்லா பேசியதாக சொல்லப்பட்ட விஷயங்களை தெரிவித்தனர்.

"முல்லா இதற்கு உங்களின் விளக்கம் என்ன?" அமைதியாக கேட்டார் மன்னர்.

முல்லா நஸ்ருதீன் எழுந்து நின்று, "அரசே! ஆன்றோர்கள் நிரம்பிய இந்த அவையிலிருந்து, பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுங்கள்" என்று பணிவுடன் கூறினார்.

பொறாமை நிறைந்தவர்களுக்கிடையே பெரும் போட்டி ஏற்ப்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.பெரும் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முல்லா அவர்களிடம், இறைவனைப் பற்றி அவைகள் நினைப்பதை எழுதச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும், எழுதி முடித்து மன்னரிடம் கொடுத்தனர்.

மன்னர் ஒவ்வொன்றாக, அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார். ஒருவர் இறைவனை ப்ரம்மாண்டமனவர் என்று கூறியிருந்தார். மற்றொருவர், அவர் அணுவுக்குள் அடங்கியிருப்பதாக கூறினார். ஒருவர், கடவுள் ஆகாயத்தில் இருப்பதாக எழுதியிருந்தார். வேறொருவர், எளிய வடிவமானவர் என்று கூறியிருந்தார். இன்னொருவரோ, இறைவன்  வடிவமற்றவர் என்று சொல்லியிருந்தார். இப்படி பத்து பெரும் பத்து விதமான பதில்களை எழுதியிருந்தனர்.

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த முல்லா நஸ்ருதீன் எழுந்து, "மன்னா! எது இறைவன் என்பதிலேயே இத்தனைக் குழப்பம் கொண்ட இவர்கள், நான் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறேன் என்று எப்படிக் கூற முடியும்? இறைவனையே அறியாத இவர்கள், நான் அவருக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்பதை மட்டும் எப்படி உணர்ந்தார்கள்?" என்று கேட்டார்.

ஆன்மிகம் என்ற பெயரில் பல ஏமாற்று வேலைகளும், மதத்தின் பெயரால் கொடிய கலவரங்களும் நடக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்தக் கதை எத்தனை கருத்துகளை விளக்குகிறது.

இன்று ஆன்மிகவாதிகள் என்று சொல்லிகொள்ளும் பலரும் இறைவன் யார், எப்படி இருப்பார் என்று அறியாதவர்களே. அந்தக் கடவுளே இவர்கள் முன் தோன்றினாலும் இவர்களால், உணர முடியாது. காரணம், இவைகள் யாரும் இறைவனையும், அந்த தத்துவத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களில்லை.

தங்கள் கஷ்டங்களைத் தீர்த்துவைக்குமாறு கடவுளை வேண்டுபவர்களிடம், கடவுள நேரில் வந்து, "நான்தான் கடவுள், உங்கள் கஷ்டங்களைப் போக்கவே வந்தேன்" என்றால் எத்தனைப் பேர் நம்புவார்கள்?. அத்தனைக் கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டியவர்கள், அவர் நேரில் வரும்போது, அவரை அறிந்துகொள்ள மறுப்பார்கள். இதுதான் மக்களிடையே நிலவும் ஆன்மிகம்.இப்படிப்பட்ட மக்களை யார்தான் ஏமாற்ற மாட்டார்கள்?

கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவர்கள் என்றும், அவரையும், அவரது சக்திகளையும் முழுமையாக உணர்ந்தவர்கள் என்று சொல்லும் யாரும், கடவுள் நேரில் வந்தால் நம்ப மறுப்பார்கள். இதற்குக் காரணம், அவர்கள் கடவுள் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகள். இறைவனை இவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு, அந்த உருவப் படியே கடவுள் இருக்கிறார்  என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள். இறைவன் நேரடியாக நம்மிடம் வர மாட்டார் என்பதை இவர்கள் அறிவார்கள். இதனால்தான், போலியாக சில ஆன்மீகவாதிகளும், சாமியார்களும், இறைவனைக் காட்டுகிறேன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிரார்கள்.

இறைவனைப் பற்றி ஒன்றை நாம் முழுமையாக உணர வேண்டும். அவரை நாம் காண முடியாது. ஆனால் அவரை உணர முடியும். உணமையான ஆன்மீக அறிஞர்கள் பலரும் சொன்ன கருத்து, உனக்குள்ளேயே தேடு என்பதுதான். அதன் அர்த்தம், இறைவன் உனக்குள் இருக்கிறார், அவரைத் தேடு என்பதுதான்.

இந்தத் தேடலை மேற்கொள்ளத்தான், தியானம், யோகாசனம் என்று பல வழிமுறைகளை ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர்ந்துகொண்டால், போலியான ஆன்மீகவாதிகளை நாம் நாடிச் செல்ல வேண்டியதில்லை.

இறைவனை உணர மற்றொரு வழி, அன்பு! அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் கடவுளை உணர முடியும். பிறர் மீது நாம் அன்பு காட்டும்போது அவர்களை நாம் மதிக்கிறோம். அந்த மதிப்பிலும், பரிவிலும் இறைவனைக் காணலாம். கருணை என்பதே இறைவனின் குணம். அதனை நாம் பிறரிடம் காட்டும்போது நாம் கடவுளாகிறோம்.இதனை உணர்ந்துகொண்டு, கடவுள், ஆன்மிகம் என்ற பெயரால் நடத்தப்படும் ஏமாற்று வேலைகளை தடுப்போம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U