நண்பனே நண்பனே

மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில், நண்பனை சேர்க்காமல் விட்டுவிட்டார்கள் என்று ரஜினிகாந்த், தனது சமீபத்திய படத்தில் ஒரு காட்சியில் சொல்லியிருப்பார். நட்பு என்பது அத்தனை முக்கியமானதா? ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும், கல்வி கற்ப்பித்த குருவுக்கும், படைத்த கடவுளுக்கும் இணையாக சொல்வதற்கு? இதனை எண்ணிப் பார்க்கும்போதுதான் நட்பின் முழு மதிப்பையும் உணர முடிந்தது.

தாய், தந்தை, உடன் பிறந்தோர் என்பது ரத்தத்தால் வந்த சொந்தங்கள். மனைவி என்பவள், நம்மோடு கலந்துவிடும் பந்தம். ஆனால், நண்பன் என்பவன், எந்த ரத்த சம்பந்தமும் இல்லாமல், நம் உயிரோடு கலந்து, வாழ்க்கையில் நமக்கு இணையாக பயணிப்பவன்.

நம்மிடம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல், நமது முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய், நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, நமது சுக துக்கங்களில் பங்கெடுத்து, ஆதரித்துச் செல்லும், உன்னதமான உறவு, நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

நட்பின் மேன்மையை, வள்ளுவர் எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார். ஆடை விலகினால், கை எப்படி தன்னிச்சையாக அதனை சரி செய்ய விளையுமோ, அப்படி தன் நண்பனுக்கு ஓர் துன்பம் வரும்போது, ஓடோடி வந்து உதவுவதுதான் நட்பு என்று, இந்த அருமையான உறவின் அர்த்தத்தை, இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்.

தாய் தந்தையிடமும், மனைவியிடமும் சொல்ல முடியாத பல விஷயங்களை, உண்மையான நண்பர்களிடம் மட்டுமே சொல்ல முடியும். நம்முடைய அந்தரங்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளக் கூடிய ஒரே பந்தம், நட்பு.

இந்த நண்பர்கள், நமக்கு மகிழ்ச்சியிலும், சோகத்திலும் கலந்துகொள்ளும் பங்காளிகளாக மட்டுமல்ல, சமயத்தில், நம்மை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும், வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.ஆனால், அத்தனை நண்பர்களும் அப்படி இருக்கிறார்களா? சிந்தித்துப் பார்த்தபோது, இந்த நண்பர்களின் வகைகளை உணர்ந்துகொள்ள முடிந்தது.

நண்பர்களை, மூன்று வகையாக பிரிக்கலாம்.

சில நண்பர்கள், நம்முடன், உறவாடி, நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களில் நம்முடன் இருந்து, நடப்பை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இவர்கள், நமக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது, விலகிச் சென்றுவிடுகின்றனர்.இத்தகையவர்களை நண்பர்கள் என்றே கூற முடியாது. நட்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்.

இன்னும் சில நண்பர்கள், நம் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டு, கஷ்டம் வரும்போது, நமக்கு ஆலோசனை சொல்வார்கள். ஆனால், நாம் அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தினால், நம்மை விட்டு அகன்றுவிடுகின்றனர். நண்பனாக, அறிவுரை சொல்ல வேண்டிய கடமையைச் செய்துவிட்டதாகவும், அதனை நாம் அலட்சியப் படுத்திவிட்டதாகவும், துன்பங்களை நாம் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று, பிரிந்துவிடுகின்றனர்.

வேறு சிலர், நாம் தவறு செய்யும்போது, நம்மை தடுப்பதற்கு பதில், நம்மை தவறு செய்ய தூண்டிவிட்டு, அதன் பலனை அனுபவிக்கும்போது, நம்மை தனியாகவிட்டுவிடுவர்.

ஆனால் உண்மையான நண்பன் என்பவன், நாம் அவனது வார்த்தைகளை  அலட்ச்சியப்படுத்தினாலும், நம்மைவிட்டு விலகாமல், நாம் தவறு செய்தாலும் நம்முடனேயே இருந்து, நம்மை திருத்த முயற்ச்சிக்கிறான். அந்தத் தவறுக்கான பலனை அனுபவிக்க நேர்ந்தாலும், நம்முடன் அதையும் பகிர்ந்துகொள்வான்.

ஆபத்தில் உதவுபவன் மட்டுமல்ல உண்மையான நண்பன், அந்த ஆபத்தை நம்முடன் சேர்ந்து எதிர்கொள்பவனே சிறந்த நண்பன்.

நம்முடைய திறமைகளை, மற்றவரைவிட, நன்கு அறிந்து வெளிக்கொண்டு வரக் கூடியவர்கள் நண்பர்கள் மட்டுமே.

இன்றைய காலகட்டத்தில், ஒன்றாக சேர்ந்து மது அருந்தவும், காதலில் பிரச்னை எழும்போது, பெற்றோரை எதிர்த்து, காதலர்களை சேர்த்துவைப்பதுமே நண்பர்களின், தலையாய பணியாக இருக்கிறது.இது சரியான நட்பல்ல. பள்ளியிலும், கல்லூரியிலும், நண்பனோடு செலவிடும் நேரங்களில், அவனது, திறமைகளையும், ஈடுபாடுகளையும்  அறிந்து, அதனை வெளிக்கொணர முயற்ச்சி செய்ய வேண்டும்.

புத்தகங்கள் வாசிப்பது, நல்ல சினிமாக்களைப் பார்ப்பது, தொலைக்காட்சியில் வரும், அறிவியல், பொது அறிவு, ஆக்கப்பூர்வ விவாத நிகழ்சிகள் போன்ற நல்ல பல விஷயங்களை, நண்பனுக்கு அறிமுகம் செய்து, அவனது உலகத்தை விரிவடையச் செய்வது, நண்பனின் கடமையே.

திருமணத்திற்குப் பிறகு, நண்பனை விட்டு நாகரீகமாக விலகினாலும், அவனது குடும்ப வாழ்க்கையில், பிரச்னைகள் வரும்போது, ஓடிவந்து தீர்த்துவைக்க வேண்டும்.

இத்தகைய பண்புகளை வைத்தே சிறந்த நண்பனை நாம் இனம் கண்டுகொள்ள முடியும். இத்தகைய குணம் அற்றவர்களை, நாம் விலக்கி வைப்பதே சிறந்தது.

மொத்தத்தில் நண்பன் என்பவன், நம் மீது அன்பைப் பொழியும்போது அன்னையாகவும், நாம் தவறு செய்யும்போது, நெறிப்படுத்தும் தந்தையாகவும், பல நல்ல விஷயங்களைக் கற்றுத் தரும்போது குருவாகவும், ஆபத்தில் உதவும்போது தெய்வமாகவும் இருக்க வேண்டும்.

மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் நண்பன் சேர்க்கப்படவில்லையே என்ற ஆதங்கத்திற்க்கான அர்த்தம், எனக்கு இப்போது விளங்குகிறது. இந்த நான்கு உறவுகளின், மொத்த உருவமாக விளங்கும், நண்பன், கண்டிப்பாக நாம் வாழ்வில் சம்பாதிக்கும் மதிப்பில்லாத சொத்தாக அமையும்.அதனால், சிறந்த நண்பர்களை தேர்வு செய்வதில் நாம் எச்சரிக்கையாகவே செயல்பட வேண்டும்.

சிறந்த நண்பர்கள் மட்டும் அமைந்துவிட்டால், வாழ்வில் புதிய உயரங்களைத் தொடலாம்.

நண்பனொருவன் வந்தபிறகு,
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு,
வானுக்கும் எல்லையுண்டு
நட்புக்கில்லையே .

6 கருத்துரைகள்:


நல்லாச் சொல்லியிருக்கீங்க.



No words to say.super.......



No words to say super vera lavel



No words to say super vera lavel


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U