நேருவின் கண்டனம்

இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு பதவியில் இருந்தபோது, அவரிடம் பாராளுமன்றத்தில் அதிக கேள்விகள் கேட்டவர், கிருபாளனி.

கிருபாளனி இப்படி குறுக்குக் கேள்வி கேட்கும்போதெல்லாம், மற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுங் கோபம்கொண்டனர். நேருவை ஆதரிக்கும் பத்திரிகை ஒன்று, கிருபாலணியை கண்மூடித்தனமாகத் தாக்கும் வகையில், கிருபாளனி எனும் பெயரை, கிருபாலூனி என்று அச்சிட்டது. லூனி என்றால், பைத்தியம் என்றொரு அர்த்தம் இருக்கிறதாம். அதனை குறிக்கும் வகையில் இப்படி எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை.

மூத்த தலைவரான கிருபாலணியை இப்படி குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்காக பாராளுமன்றத்தில், இதனை எதிர்த்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், எதிர்க் கட்சியினர் எல்லாம், குரலெழுப்பினர்.

இந்த செயலைச் செய்தது, நேருவுக்கு விசுவாசமான பத்திரிகை. அதனால், அந்த நாளிதழின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றே பேசப்பட்டது.

ஆனால் இந்த பிரச்னை அவையில் எழுப்பப்பட்டபோது, நேரு, "நாட்டின் முதுபெரும் தலைவர் ஒருவரை, இப்படிச் சித்தரித்திருப்பது, அவரை அவமானப்படுத்துவது போலாகும். அந்தப் பத்திரிகைக்கு, அதிகமான ஆணவம் இருக்கிறது.எனவே வெறும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. சம்பத்தப்பட்ட பத்திரிகையாளர், பாராளுமன்றத்திற்கே வந்து பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்." என்று கூறி அதனை நிறைவேற்றியும் காட்டினார்.

ஒவ்வொரு கட்சியும்,தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பத்திரிகை வைத்துக்கொண்டு, தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிட்டும், எதிர்க் கட்சித் தலைவர்களை சரமாரியாகத் திட்டியும், அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதத்திலும் செய்தி வெளியிடுவது, அரசியலின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், நேருவின் நேர்மையான அரசியல், இளைஞர்கள் அனைவரும் பொது வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U