அறிவுக் கொல்லி நோய்கள்

தமிழகத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்பது தமிழக அரசியல்வாதிகளின் முக்கியமான கோஷம். ஆனால், தமிழகத்தை சீரழிக்கும், மக்களை மூடர்களாக்கும் விஷயங்களே இங்கு நடக்கின்றன. இவற்றுக்கும் அரசியல்வாதிகளே முக்கியக் காரணம்.இத்தகைய செயல்களைச் செய்ய தொலைகாட்சி எனும் சிறிய வஸ்துவே போதுமானது.. தமிழில் இருக்கும் அளவுக்கு இந்தியாவின் வேறு மொழிகளில், இத்தனை சேனல்கள் இருகின்றனவா என்பது சந்தேகமே. இதில் முக்கியமான விஷயம், ஏறக்குறைய தமிழ் நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சிச் சேனல்கள் வைத்திருக்கின்றன.(மற்ற மாநில அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு வசதியில்லாதவர்களா, அல்லது புத்திசாலித்தனம் இல்லாதவர்களா என்பது தெரியவில்லை.)

இத்தனை சேனல்கள் இருப்பதால் என்ன பிரச்சனை என்பதைக் கூட உணராதவர்களாக இருக்கிறோம் நாம். அந்த அளவுக்கு நம்மை இந்த சின்னத்திரை மோகம் பீடித்திருப்பதுதன் முதல் பிரச்சனை.

உலக அளவில் பார்த்தால், தொலைக்காட்சிச் சேனல்கள் எத்தனையோ இருக்கின்றன. அறிவையும் திறமையையும் வளர்க்கும் பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களும் செய்திகளும் உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. இப்படி இந்த தொலைக்காட்சியின் நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகளின் வீரியம் அதிகமாக உள்ளது.

முன்பே சொன்னது போல், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சேனல்கள், கட்சிக்காரர்களுடையதே. இவை இந்த கட்சிகளின் பிரசார ஆயுதமாகவே செயல்படுகின்றன. இவர்கள் ஒளிபரப்பும் செய்திகளின் நம்பத்தன்மை மிகக் குறைவாகவே இருக்கிறது. தங்கள் கட்சிக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. இதனால், இவர்களின் செய்திகளைப் பார்ப்பவர்கள், நாட்டு நடப்புகள் பற்றி, தவறான கண்ணோட்டம்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த சேனல்களால் ஏற்படும் முக்கியமான தீமை, இவர்களின் நிகழ்ச்சிகளின் பலனாக வருவதுதான். அறிவுப் புரட்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு, இவர்கள் மூளையை மழுங்கடிக்கும் செயல்களையே செய்துவருகிறார்கள். ஆக்கப்பூர்வமான் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கும்போது, கதைகளே இல்லாத மெகா சீரியல்களும், சினிமா மற்றும் சின்னத் திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருக்கும் தொலைபேசியில் பாட்டு கேட்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, இன்று தமிழக மக்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

செய்திகளில்தான் இவர்கள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறார்கள் என்றால், சினிமா விமர்சனத்திலும் நடுநிலைத்தன்மை இல்லை. இந்தச் சேனல்காரர்கள் சினிமாவையும்  தயாரிப்பதால், தங்கள் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்களின் ரசனைப்படியும், கதையின் தன்மையைப் பொருத்தும் படங்களை வரிசைப் படுத்தும் நிகழ்ச்சியில், இவர்களின் படங்களுக்கே முன்னிலை அளிக்கப்படுகிறது. இதனால் பல தரமான படங்கள், உரிய மதிப்பளிக்கபடாமல் தோல்வியைத் தழுவுகின்றன.

பொது மக்களுக்கு மட்டுமல்ல, திரைத் துறைக்கும் பாதகமான செயல்களையே இவர்கள் செய்து வருகிறார்கள். புதிய படங்களை வெளியான மூன்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே இவர்களின் சேனல்களில் ஒளிபரப்பிவிடுகின்றனர். இதனால், மக்களிடையே, எப்படியும் சில நாட்களில் ஏதாவதொரு டிவியில் போட்டுவிடுவார்கள், எதற்க்காக படத்தை திரை அரங்குகளில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. திரைப் படங்கள் தோல்வியடைய இது ஒரு முக்கியமானக் காரணம்.

இவர்களின் இந்த செயல்கள், உலகில் பரவும் ஆட்கொல்லி நோய்களை விட கொடிய  அறிவுக்கொல்லி நோயாக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்துவருகிறது. இந்த நிலை மாற மக்களிடையே ஒரு அறிப் புரட்சி நிகழ்வதைத் தவிர வேறு வழி இல்லை. உலகில் மீண்டும் பெரியாரும், சாக்ரடீசும், பெர்னார்ட் ஷாவும் பிறந்து வந்தால் தான் இத்தைகய புரட்சி நிகழுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

2 கருத்துரைகள்:


நல்ல பகிர்வு,
தொலைகாட்சியில் குழந்தைகள் என்ன பார்க்கின்றனர் என்று அவசியம் கண்கானிக்க வேண்டும்.



நல்ல பகிர்வு


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U