ராமர் கோவிலா? பாபர் கோவிலா?

தேசத்தின் மாபெரும் புதிராக இருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தொடங்கிய இந்த பிரச்னை, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உச்சக்கட்டத்தை எட்டி, இன்று வரை தீராத துயரமாக இருக்கிறது. இந்த விவகாரத்தின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கபப்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு அதுவும் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. காமன் வெல்த் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில், கலவரம் ஏற்ப்படக் கூடிய அபாயம் இருப்பதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற நியாயமான காரணம் இருந்தாலும், இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி தற்காலிகத் தீர்வுகளும், தள்ளிவைப்புகளும்? முடிவு என்றைக்கு வெளியிடப்பட்டாலும் கலவரம் நடக்கும் ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு கலவரத்தை அடக்க வேண்டுமே தவிர இப்படித் தள்ளிவைப்பது சரியான அணுகுமுறையாகாது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரை, இதன் பின்னணியையும், இந்தப் பிரச்னையின் மூலத்தையும் சற்று விரிவாக அலசியிருக்கிறது.  அதில் கூறப்பட்டுள்ள படி, முகலாயப் பேரரசர் பாபர் இந்தியாவை ஆண்டபோது, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பது தான் இந்த பாபர் மசூதி. இஸ்லாமிய, மங்கோலியப் படையெடுப்புகளின்போது நிர்மூலமாக்கப்பட்ட பல கோவில்களில், இந்த அயோத்தியும் ஒன்று. அப்படி இடிக்கப்பட்ட பல கோவில்கள், சுதந்திரத்திற்குப் பின்பு மீண்டும் கட்டப்பட்டிருகின்றன. அப்படியிருக்கையில் இந்த அயோத்தி விவகாரம் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக  மாறவேண்டும்?

இந்துக்கள்  வணங்கும்  தெய்வமான,  ராமர் அவதரித்த  இடம், ராம ஜன்ம பூமி என்று இந்த அயோத்தி கருதப்படுவதுதான் இத்தனைக் கலவரத்திற்கும் காரணம். ஹிந்துக்களின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக, ராமாயணம் எனும் பெருங்காவியம் இருக்கிறது. ஆனால், மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த நம்பிக்கைகள் காரணம் அல்ல என்பதும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் வேண்டிச் செய்யப்பது என்பதும், இருதரப்பினரும் அறிந்ததே. பின் எப்படி இத்தனை கொடிய கலவரங்கள் நிகழ்கின்றன?

இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள நாம் முகலாயர் காலம் வரை செல்ல வேண்டும். மங்கோலியர்களும், இஸ்லாமியர்களும் இந்தியா மீது தொடர்ச்சியாக நடத்திய படையெடுப்புகளில், ஹிந்து மதத்தின் சின்னங்களாகக் கருதப்பட்ட பல கோவில்கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. மக்களும் மிகுந்த கொடுமைகளை சந்திக்க நேர்ந்தது. அன்று இஸ்லாமியர்கள் காட்டிய அந்த வெறி, அவர்களை ஹிந்து மதத்தின் நிரந்தரப் பகைவர்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துவிட்டது. பின்னர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறை சம்பவங்களும் இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்துவிட்டது. ஊன்றிக் கவனித்தால், ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் வட இந்தியாவிலேயே அதிகம் நடப்பது தெரியும். காரணம் இந்த மக்கள், முகலாயர் காலத்திலும், பிரிவினையின்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான் இப்பொழுது நடந்து வரும் சம்பவங்கள் இருக்கின்றன. இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருப்பதும் நிதர்சனமான உண்மை.

மக்களின் நிலை இப்படி இருக்கையில், வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது முக்கியமல்ல.எப்போது சொல்லப்பட்டாலும், கலவரத்தைத் தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த நிலையில், தீர்ப்பை விரைவாக வெளியிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே புத்திசாலித்தனமாக இருக்குமே சாஹிய, அதனைத் தள்ளிப்போடுவது எந்த வகையிலும் நன்மை அளிக்கப்போவதில்லை. கலவரங்கள் எழுமானால், அதனை எதிர்த்து அடக்க முயற்ச்சிக்க வேண்டும். அதைவிடுத்து, வான்முறை ஏற்படும் என்று தயங்குவதும் அஞ்சுவதும் ஒரு அரசாங்கத்துக்கு அழகல்ல.

இந்தக் கலவரங்களைத் தவிர்ப்பது என்பது சிரமாமான காரியம். ஏனெனில், எத்தகைய தீர்ப்பு வந்தாலும், வன்முறையில் ஈடுபட சில விஷமிகள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும், மக்களிடையே அதிக பதட்டமில்லாமல் இருக்க, இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் நடுநிலையானதாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில், ராமர் கோவிலும் கட்ட வேண்டாம், பாபர் கோவிலும் கட்ட வேண்டாம். ஒரு அநாதை ஆசிரமமோ, குழந்தைகள் பூங்காவோ, அல்லது ஏதேனும் அரசாங்க அலுவலகமோ கட்டிவிடலாம்.

மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில தேசவிரோதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இத்தகைய தீர்ப்பையே வழங்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U