காமராஜர் கற்றுத் தந்த அரசியல் அரிச்சுவடி

 1967 ம் ஆண்டு, அண்ணாத்துரை அவர்கள், முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பிறகு, முதல் முறையாக டில்லிக்கு வந்திருந்தார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த, கர்ம வீரர், காமராஜர், டில்லியில் இருப்பதாக அறிந்தார் அண்ணா. உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காமராஜரை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அண்ணாவின் விருப்பத்தை அறிந்த காமராஜர்,

"தாராளமாகச் சந்திக்கலாமே. நீங்க தமிழ்நாடு ஹவுஸ்ல தானே தங்கியிருக்கீங்க? நானே அங்க வந்துடுறேன்" என்றார்.

"நீங்கள் வர வேண்டாம். நானே இன்று ஆறு மணிக்கு முன்னால், அங்க வந்து உங்களை சந்திக்கிறேன்." என்று மறுத்து  விட்டார் அண்ணா.

அன்று மாலை, ஐ.நா. செயலாளர், உதாண்ட் அவர்கள், காமராஜரைச் சந்திப்பதாக இருந்தது. இதனை அறிந்ததால்தான் அண்ணா, தானே ஆறு மணிக்கு முன்னால் வருவதாக காமராஜரிடம் சொல்லியிருந்தார்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் காமராஜரை சந்தித்த அண்ணா, அவருடன் உரையாடிவிட்டு, ஐந்தரை மணிக்கு புறப்படத் தொடங்கினார். அவரைத் தடுத்த காமராஜர்,

"நீங்கள் உட்காருங்களேன். என்னை சம்பிரதாயமாகத்தான் உதாண்ட் சந்திக்க வருகிறார். வேறு எதுவும் முக்கியாமான விவகாரம் இல்லை.அவர் வரும்போது தாங்களும் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறேன். நீங்கள் முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது, இவரை போன்ற ஆட்களை சந்திக்கிறது நமக்கும் பிரயோஜனமாக இருக்குமே" என்று அண்ணாவை அங்கேயே இருக்கச் செய்துவிட்டார்.

இன்று ஜெயலலிதாவும், கலைஞரும் ஒருவரை ஒருவர் தாக்கி வார்த்தைப் போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலத்தில், அன்று காமராஜர், எதிர் கட்சித் தலைவரை எந்தளவு மதித்திருக்கிறார்,  என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் விளங்குகிறது.அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதை, இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி இது.

அரசியலில் பால பாடம், எதிரிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது. எதிர்க் கட்சிகள் மீது நாம் கொண்டுள்ள மதிப்பு, அரசியல் வாழ்க்கையையே மாற்றக் கூடியது.அத்தகைய அடிப்படைத் தத்துவத்தை, காமராஜர் தன் நடத்தை மூலம் நமக்கு உணர்த்திவிட்டார்.

தெருவுக்குத் தெரு மேடைபோட்டு, எதிர்க்கட்சியினரை, வக்கிரமாக, ஆபாசமாகத் திட்டுவது பிரபலமாகி வரும் இன்றைய காலகட்டத்தில், இது போன்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தோன்ற மாட்டார்களா? என்ற ஏக்கம் நம்மிடையே எழுகிறது.சீக்கிரம் அந்தக் கனவுநிறைவேறட்டும்.

1 கருத்துரைகள்:


பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா,பெரியார் இவர்கள் எல்லாம் தலைவர்களுக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.காமராசர் ராஜாஜியை எதிர்த்து முதலமைச்சராக நிற்கத் தயங்கிய போது பெரியாரும்,அண்ணாவும் ஆதரவு தந்தவர்கள்.காமராசர் தேர்தலில் நின்றபோது அந்தத் தொகுதிக்கு எதிர் பிரச்சாரத்திற்கே போக மறுத்தவர் அண்ணா.அவர் தோல்வியுற்றதும், அவர் வென்று பிரதமராக வந்திருந்தால் தமிழகத்திற்கு எவ்வளவு செய்திருப்பார்,என்று அனைவரையும் அறையை விட்டு வெளியேறச் சொல்லி வருத்தமடைந்தவர் அண்ணா. அண்ணா உடல் நலமில்லாமல் சென்னை பொதுமருத்துவ மனையில் இருந்தபோது காமராசர் விசாரித்து,மருத்துவர்களின் பதிலில் நிறைவடையாமல் உடனே அமெரிக்கா கூட்டிச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தி ஆணையிட்டவர்(பதவில் இல்லாமலும் ஆணையிடக் கூடிய ஆளுமை அவரிடம் இருந்தது).காமராசர் கே திட்டப்படி பதவி விலகிய போது அத்தனை நிகழ்ச்சிகளையும் தள்ளிவிட்டு அலறி அடித்துக் கொண்டு "நீங்கள் செய்வது தமிழ் நாட்டிற்கும்,தங்களுக்கும் தற்கொலையாகும்" என்று துடித்தவர் பெரியார்.


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U