Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

வாழ்வின் நோக்கம்

அஹமது காசிம் எனும் சூபி ஞானி ஒருவர், மெக்கா நகர் நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள் பயணம் என்பதால், தேவையான உணவை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.

பயணத்தின்போது, ஒரு பெண்மணி எதிர்பட்டார். ஞானியை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, "உங்களைப் பார்த்தால் சூபி ஞானி போல் தெரிகிறதே. எங்கே பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினாள்.

"புனித மெக்கா நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்று பதிலிறுத்தார் அஹமது காசிம்.

"அது சரி மூட்டையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?"என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்மணி.

"வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு" என்றார் சூபி.

"வழியில் உமக்கு உணவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டீரா?" என்று சூபியை ஏளனமாகப் பார்த்தால் அந்தப் பெண்.

இது கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அந்த ஞானியைப் பார்த்து மேலும் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி.

"உங்கள் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. நீர் ஒரு சூபியாக இருந்தும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர். வழிப் பயணத்தின்போது, ஏதோவொரு வகையில் இறைவன் உணவு வழங்கிவிடுவான் என்ற நம்பிக்கை கூட உமக்கு இல்லை. நீர் எப்படி பிறருக்கு இறைத் தத்துவத்தை போதிக்கப் போகிறீர்?" என்று ஏளனமாகச் சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த அந்த சூபி, வழியில் எதிர்பட்டோருக்கு தான் கொண்டு வந்த உணவை தானமாகக் கொடுத்துவிட்டு,  வெறும்கையோடு, மனதில் இறைவன் பால் நம்பிக்கையும் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நீண்ட தூரம் நடந்தார். பசியும் களைப்பும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. சுற்றிலும் எதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கினார்.எதுவும் புலப்படவில்லை. இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் நடந்தார்.

அப்போது கீழே ஒரு பெண்ணின் கால் கொலுசு கிடப்பதைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்தவர், இதைத் தவற விட்டுச் சென்றவர்கள் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள், அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு, உணவு ஏதாவது கேட்கலாம், என்று சுற்றிலும் பார்த்தார்.

அப்போது அவர் முன்பு சந்தித்த அதே பெண்மணி வந்து கொண்டிருந்தாள். நேர்ந்கி வந்ததும் அவளைப் பார்த்து, "தாயே! இந்தக் கொலுசு தங்களுடையதா?" என்று வினவினார்.

"ஆம் என்னுடையதுதான்" என்று பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

"அம்மா! எனக்கு ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் மிகுந்த பசியாக இருக்கிறது" என்று வேண்டினார் அஹமது காசிம்.

மீண்டும் அவரை ஏளனமாகப் பார்த்த அந்தப் பெண்மணி,"இப்போது நீங்கள் இந்தக் கொலுசைக் கொடுத்துவிட்டு உணவு பெரும் வியாபாரியாகி விட்டீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நாமும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை அடைய வேண்டுமென்று உழைக்கிறோம். ஆனால் ஏன் அதனை அடைய வேண்டும்? அதன் பலன் என்ன?அந்த நோக்கம் எத்தன்மையது? போன்றவற்றை நாம் உணர்வதில்லை. அதனாலேயே நம் லட்சியத்தை அடைந்தவுடனேயே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.

வாழ்க்கைப் பயணத்தில் நமது இலக்கு எது? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் பயணம் எப்படி இருக்கிறது? நம்மில் எத்தனைப் பேர் இந்தக் கேள்விகளுக்கான் பதிலை அறிந்திருக்கிறோம்?

நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம், ஆனால் அந்த படிப்பின் நோக்கம் என்ன? எதற்க்காக படிக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கொடுப்பதில்லை. நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம் என்று மட்டும் சொல்லி படிக்க வைக்கிறோம். இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக உணராமல், கடமையைச் செய்வதுபோல் செய்துகொண்டிருக்கிறோம்.

இறை நம்பிக்கையிலும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். கடவுளிடம் நாம் முழுமையாகச் சரனடைந்துவிடுவதே உண்மையான பக்தி. கஷ்டங்களும் கவலைகளும் வரும்போது மட்டும் கடவுளை நினைக்காமல், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவன் செயல் என்று நம்பியிருப்பதே இறை நம்பிக்கை.

வாழ்வின் சுவை

ஒரு முறை சொர்க்கத்தில், ஜைன துறவி, புத்த துறவி, சூபி ஞானி, ஆகிய மூவரும் சந்திக்கின்றனர். அங்கு மூன்று அழகான ஆசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. மூன்று ஞானிகளும் ஆளுக்கொரு ஆசனத்தில் அமர்கின்றனர்.

ஜைனத் துறவி, கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஜென் துறவி, கண்களை திறந்துகொண்டு, மெளனமாக அமர்ந்திருக்கிறார். சூபி ஞானி, முகம் மலர, புன்னைகையுடன் வீற்றிருக்கிறார்.

மூவரும் ஒருவரோடொருவர் பேசவில்லை.. ஒரு நீண்ட மௌனம் அங்கு நிலவியது. அதைத் தொடந்து, ஒரு அழகிய தேவதை அங்கு தோன்றியது. அதன் கையில் ஒரு தாம்பாளம். அதில், ஒரு தங்கக் கிண்ணத்தில், சிவந்த பழரசம் நிரம்பியிருந்தது.

புன்னகையுடன் அந்த தேவதை, "இதுதான் வாழ்கையெனும் ஜீவரசம்" என்று மூன்று ஞானிகளையும் பார்த்துக் கூறுகிறது.

இதனைக் கேட்ட ஜைனத் துறவி, "நான் இதனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.வாழ்கை என்பதே துன்பம்,. உலகமே துக்கமயமானது. வாழ்வின்போது செய்யும் செயலகலாகிய  கர்மவினைதான், நாம் அனுபவிக்கக் கூடிய பெருந்துன்பங்களுக்கு எல்லாம்  காரணம்.இதன் வாடை கூட என் மீது படக் கூடாது." என்று ஒதுங்கிச் சென்றுவிட்டார்.

தேவதை அடுத்தபடியாக ஜென் துறவியின் பக்கம் திரும்பியது. "எதையும் சுவைத்துப் பார்க்காமல் மறுத்துவிட முடியாது.ஒரேயடியாக மறுப்பதோ, அதே சமயம் ஏற்பதோ, தவறு. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாக, சிறிதளவு எடுத்துக்கொண்டு, பின்பு ஒதுக்கி விடவேண்டும்." என்று கூறியபடி, கிண்ணத்தை எடுத்து சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டார்.

"அப்பப்பா என்னவொரு கசப்பு. ஜைனத் துறவி சொன்னது போல், இது கொடும் துயரம்தான். எனினும் இதனைக் குடித்துப் பார்ப்பதே நம் கடமை. குடித்த பிறகு, சுவையில் மூழ்கிவிடாமல், ஒதுக்கிவிடுவதுதான் சரி" என்றார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சூபி ஞானி, அமைதியாக எழுந்து வந்து, கிண்ணத்தை எடுத்து, ஒரே மூச்சில், மொத்த திரவத்தையும் குடித்துமுடித்துவிட்டார்.

அவரது,முகம் முழுக்க சிரிப்பும், பூரிப்பும் நிரம்பியிருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஆசனத்தில் சாய்ந்துவிட்டார். ஜீவரசம் எப்படியிருந்தது? அதன் சுவை இனிப்பா? கசப்பா? எதையுமே கூறவில்லை. அமைதியாக இருந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரு துறவிகளும், "எப்படியிருந்தது ஜீவரசம்? உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்." என்று சூபி ஞானியிடம் வினவினர்.

"இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வாழக்கையை அப்படியே மொத்தமாக அருந்திவிட வேண்டும். அப்போதுதான் அது என்ன, எப்படிபட்டது என்பது நமக்குத் தெரியும். தெரிந்துகொண்ட பிறகு, சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. கொஞ்சம் கூட சுவைக்காமலோ, அல்லது ஒரு பகுதியை மட்டும் அருந்திவிட்டோ, அது எத்தன்மையது என்று கூறமுடியாது. அதனை முழுமையாக அனுபவித்த பிறகே அதன் தன்மையை உணர முடியும்." என்றார்.

வாழ்கை என்பது இப்படித்தான். ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறோம். நாம் எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே அதுவும் நமக்குத் தெரிகிறது.

துன்பமாகப் பார்த்தால், நம் வாழ்வில் நடக்கும் துன்பங்களே பெரிதாகத் தெரியும்.இன்பங்களை நம்மால் உணர முடியாது. அதற்காக நம்மால் வாழ்கையை ஒதுக்கி விடவும் முடியாது. இன்பமோ, துன்பமோ, வாழ்வது ஒன்றே வழி.

வாழ்கையை இன்பம் துன்பம் என்று பகுத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை.இரண்டும் கலந்ததே வாழ்கை.எதோ ஒன்றை மட்டும் நாம் எடுத்துகொள்ள முடியாது.இதுவே நிஜம். அதனால், வாழ்கை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தக் கோட்பாடு வாழ்கையின் இன்ப துன்பங்களுக்கு மட்டுமல்ல. அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தும். எந்தவொரு உணர்ச்சியையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காதல், காமம், பாசம், நட்பு, கோபம், என்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒன்றுபோல் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த உணர்ச்சிகளின் கலவையே வாழ்கை.இவைஅனைத்தும் சரி விகிதத்தில் கலக்கும்போதுதான், வாழ்கையின் சுவை சிறந்திருக்கும். உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என்று பல பதார்த்தங்கள் கலந்து தயாரிக்கப் படும் உணவில், ஏதோவொரு பதார்த்தம் மட்டும் அதிகமாகச் சேர்க்கப் பட்டிருந்தால், அந்த உணவின் சுவையே மாறிவிடும். அதுபோல, வாழ்வில் எந்தவொரு சுவை மேலோங்கியிருந்தாலும், அதனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது.

இதில் விஷயம் என்னவென்றால், வாழ்கை எனும் உணவில், அனைத்து சுவைகளும் சரியாகவே கலக்கப் பட்டிருக்கும். நாம் எதனை அதிகம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் சுவையும் இருக்கும். துன்பங்களைப் பெரிதாக நினைத்தால், வாழ்கை கசப்பானதாகத் தெரியும். மகிழ்ச்சியை விரும்பினால், இனிப்பானதாகத் தோன்றும்.இரண்டையும் சமமாக பார்க்கும்போதே, அதன் உண்மையான சுவையை உணர முடியும்.

ஆன்மீகப்பாதிகள்

ஆழ்ந்த ஞானம் பெற்ற ஆன்மீகவாதி ஒருவர், ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். ஒரு நாள் யாத்ரிகன் ஒருவன் அவரது புகழையும், பெருமையையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணினான்.எதிரில் வந்தவர்களிடம், அந்த ஞானியின் இருப்பிடத்திற்கு வழிகேட்டு, சென்றடைந்தான்.

ஊருக்கு வெளியே, ஒரு குடிலில் தங்கியிருந்த அந்த மகானைப் பார்க்க மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். ஒருவர் பின் ஒருவராக, குடிலுக்குள் சென்று அவரை தரிசித்து வெளியில் சென்ற வண்ணம் இருந்தனர்.

இதைப் பாத்த யாத்ரிகன், ஞானியிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல், தொலைவில் இருந்தே, பார்த்துக்கொண்டிருந்தான். மக்கள் அவரிடம் பேசுவதையும், ஞானி அவர்களது சந்தேகங்களையும், மனக்குழப்பங்களையும் தீர்த்து வைப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.

நாள் முழுதும் இப்படி, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தவன், மாலையில் , அந்த ஞானியின் சீடன் ஒருவனிடம் சென்று பேசத் தொடங்கினான்.

"ஐயா, உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றான் யாத்ரிகன், அந்த சீடனிடம்.

"அதற்கென்ன தாராளமாகக் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்." என்றான் அந்த சீடன்.

"உங்கள் குருவிடம், அற்புத ஆற்றல்கள் உண்டா?" என்று வினவினான் யாத்ரிகன்.

"அது பற்றி எனக்குத் தெரியாது" என்ற அந்த சீடன், "ஆனால், அவரிடம் தினமும் நிறையப்பேர் வருவதுண்டு. பலதரப்பட்ட பிரச்சனைகளோடு வரும் இவர்களில் பலர், திரும்பி வந்து தங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிட்டது என்று கூறி, குருவை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்." என்றான்.

"உங்கள் குரு ஏன் தான் செய்த அற்புதங்களை மறைக்கிறார்? நான் அறிந்த வரையில், அவரால் பலர் நலம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர் எங்கும் இதனைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.தனது பிரார்த்தனையால், ஏராளமானவர்களை குணப்படுத்தியிருக்கிறார், கேட்டால், இது இயற்கையின் அருள் என்கிறார். துயரத்தில் வாடும் பலருக்கு அந்தத் துயர் நீங்க வழி காட்டியிருக்கிறார். இதனை அவர்களின் நல்வினைப் பயன் என்கிறார்.எதற்க்காக இப்படிச் செய்கிறார்? தன்னடக்க்த்தாலா? புகழின் மீது விருப்பமில்லாதாலா? இதனால் அவருக்கு என்ன பயன்?" என்று தன் சந்தேகத்தை சீடனிடம் கேட்டு தெளிவு பெற விரும்பினான், யாத்ரிகன்.

இதைக் கேட்ட சீடன், சற்று நேரம் சிந்தித்துவிட்டு, "நீங்கள் கூறுவது உண்மைதான். நானும் இதனைப் பல முறை கவனித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, குரு, அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க விரும்பவில்லை. இரண்டாவது, மிக முக்கியமான காரணம், மக்கள் அற்புதங்களில் தங்கள் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டுவிட்டால், உண்மையான ஆன்மீகப் பண்புகளை அறிந்துகொள்ளும் ஆர்வமோ, அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து, அத்தகைய பண்புகளை வளர்த்துக்கொள்ளும் என்னமோ மக்களிடம் இல்லாமல் போய்விடும்.அதனால்தான், குரு, இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை." என்றான் அந்த சீடன்.

உண்மையான ஞானம் அடைந்தவர்கள், மனிதனிடம் அன்பையும், பண்பையுமே வளர்க்க விரும்புவார்கள். தங்களிடம் உள்ள சக்தியை வெளிக்காட்டிக் கொண்டு, சுய விளம்பரம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை, திறமைசாலிக்கு அறிமுகம் தேவையில்லை என்பதுபோல, அவர்களிடம் உள்ள திறமைகள் அல்ல, இத்தகைய பண்புகளே ஞானிகளின் புகழுக்குக் காரணமாக இருக்கும்.

ஞானம் என்பதன் குணமே, இத்தகைய தன்னடக்கமும், பண்பும் தான்.இவற்றை உணராதவர்கள், ஞானிகளோ, ஆன்மீகவாதிகளோ அல்ல, ஆன்மீகப்பாதிகள்.

முல்லாவின் அல்லா

முல்லா நஸ்ருதினை நமக்குத் தெரியும். குழந்தைகள் கதையில் வரும் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம். அனால் அவரது கதையில் சொல்லபப்டும் கருத்துகள், ஆழ்ந்த பொருள் உடையதாக இருக்கும். அவரை ஒரு ஞானி என்றே சொல்லலாம். அவர் நகைச்சுவையாக பேசினாலும், அதில் பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட முல்லா நஸ்ருதீன் மீது ஒரு நாள் ஒரு வழக்கு தொடரப்பட்டது.அவரது பெருமை, புகழ் கண்டு பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

புகாரின் முக்கிய அம்சம், முல்லா மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான். மன்னரிடமும் முல்லாவுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. ஆனாலும் வேறு எந்த வழக்காக இருந்தாலும் மன்னர் தள்ளுபடி செய்திருப்பார், மதத்துக்கு எதிராக செயல்படுவாதாக கூறப்பட்டபடியால், மன்னர் அரசவையில் முல்லாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தார்.

முல்லா அவைக்கு வந்தார். அவர் மீது விசாரணை என்று கேள்விப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் பலரும் அரசவையில் கூடி இருந்தனர்.

வழக்கு தொடந்தவர்கள் எழுந்தனர். முல்லா ஊர் ஊராகச் சென்று கடவுளுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். பல ஊர்களிலும் முல்லா பேசியதாக சொல்லப்பட்ட விஷயங்களை தெரிவித்தனர்.

"முல்லா இதற்கு உங்களின் விளக்கம் என்ன?" அமைதியாக கேட்டார் மன்னர்.

முல்லா நஸ்ருதீன் எழுந்து நின்று, "அரசே! ஆன்றோர்கள் நிரம்பிய இந்த அவையிலிருந்து, பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுங்கள்" என்று பணிவுடன் கூறினார்.

பொறாமை நிறைந்தவர்களுக்கிடையே பெரும் போட்டி ஏற்ப்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.பெரும் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முல்லா அவர்களிடம், இறைவனைப் பற்றி அவைகள் நினைப்பதை எழுதச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும், எழுதி முடித்து மன்னரிடம் கொடுத்தனர்.

மன்னர் ஒவ்வொன்றாக, அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார். ஒருவர் இறைவனை ப்ரம்மாண்டமனவர் என்று கூறியிருந்தார். மற்றொருவர், அவர் அணுவுக்குள் அடங்கியிருப்பதாக கூறினார். ஒருவர், கடவுள் ஆகாயத்தில் இருப்பதாக எழுதியிருந்தார். வேறொருவர், எளிய வடிவமானவர் என்று கூறியிருந்தார். இன்னொருவரோ, இறைவன்  வடிவமற்றவர் என்று சொல்லியிருந்தார். இப்படி பத்து பெரும் பத்து விதமான பதில்களை எழுதியிருந்தனர்.

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த முல்லா நஸ்ருதீன் எழுந்து, "மன்னா! எது இறைவன் என்பதிலேயே இத்தனைக் குழப்பம் கொண்ட இவர்கள், நான் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறேன் என்று எப்படிக் கூற முடியும்? இறைவனையே அறியாத இவர்கள், நான் அவருக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்பதை மட்டும் எப்படி உணர்ந்தார்கள்?" என்று கேட்டார்.

ஆன்மிகம் என்ற பெயரில் பல ஏமாற்று வேலைகளும், மதத்தின் பெயரால் கொடிய கலவரங்களும் நடக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்தக் கதை எத்தனை கருத்துகளை விளக்குகிறது.

இன்று ஆன்மிகவாதிகள் என்று சொல்லிகொள்ளும் பலரும் இறைவன் யார், எப்படி இருப்பார் என்று அறியாதவர்களே. அந்தக் கடவுளே இவர்கள் முன் தோன்றினாலும் இவர்களால், உணர முடியாது. காரணம், இவைகள் யாரும் இறைவனையும், அந்த தத்துவத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களில்லை.

தங்கள் கஷ்டங்களைத் தீர்த்துவைக்குமாறு கடவுளை வேண்டுபவர்களிடம், கடவுள நேரில் வந்து, "நான்தான் கடவுள், உங்கள் கஷ்டங்களைப் போக்கவே வந்தேன்" என்றால் எத்தனைப் பேர் நம்புவார்கள்?. அத்தனைக் கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டியவர்கள், அவர் நேரில் வரும்போது, அவரை அறிந்துகொள்ள மறுப்பார்கள். இதுதான் மக்களிடையே நிலவும் ஆன்மிகம்.இப்படிப்பட்ட மக்களை யார்தான் ஏமாற்ற மாட்டார்கள்?

கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவர்கள் என்றும், அவரையும், அவரது சக்திகளையும் முழுமையாக உணர்ந்தவர்கள் என்று சொல்லும் யாரும், கடவுள் நேரில் வந்தால் நம்ப மறுப்பார்கள். இதற்குக் காரணம், அவர்கள் கடவுள் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகள். இறைவனை இவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு, அந்த உருவப் படியே கடவுள் இருக்கிறார்  என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள். இறைவன் நேரடியாக நம்மிடம் வர மாட்டார் என்பதை இவர்கள் அறிவார்கள். இதனால்தான், போலியாக சில ஆன்மீகவாதிகளும், சாமியார்களும், இறைவனைக் காட்டுகிறேன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிரார்கள்.

இறைவனைப் பற்றி ஒன்றை நாம் முழுமையாக உணர வேண்டும். அவரை நாம் காண முடியாது. ஆனால் அவரை உணர முடியும். உணமையான ஆன்மீக அறிஞர்கள் பலரும் சொன்ன கருத்து, உனக்குள்ளேயே தேடு என்பதுதான். அதன் அர்த்தம், இறைவன் உனக்குள் இருக்கிறார், அவரைத் தேடு என்பதுதான்.

இந்தத் தேடலை மேற்கொள்ளத்தான், தியானம், யோகாசனம் என்று பல வழிமுறைகளை ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர்ந்துகொண்டால், போலியான ஆன்மீகவாதிகளை நாம் நாடிச் செல்ல வேண்டியதில்லை.

இறைவனை உணர மற்றொரு வழி, அன்பு! அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் கடவுளை உணர முடியும். பிறர் மீது நாம் அன்பு காட்டும்போது அவர்களை நாம் மதிக்கிறோம். அந்த மதிப்பிலும், பரிவிலும் இறைவனைக் காணலாம். கருணை என்பதே இறைவனின் குணம். அதனை நாம் பிறரிடம் காட்டும்போது நாம் கடவுளாகிறோம்.இதனை உணர்ந்துகொண்டு, கடவுள், ஆன்மிகம் என்ற பெயரால் நடத்தப்படும் ஏமாற்று வேலைகளை தடுப்போம்.

கள்வரே! கள்வரே!

நமக்கு கெடுதல் செய்தவனுக்கும் நல்லது செய்யணும்னு வள்ளுவர் சொன்னதா ஸ்கூல்ல  டீச்சர் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அன்னிக்கிருந்தே இதுக்கு அர்த்தம் புரியல. எனக்கு கெடுதல் செஞ்சவனுக்கு, நான் ஏன் நல்லது செய்யணும்? கூட படிக்குற பொண்ணு டிபன் பாக்சில இருந்து, சாப்பாட்ட தின்னுட்டு, என்னை டீச்சர்ட்ட  மாட்டிவிட்டவனுக்கு, நான் எதுக்கு நல்லது செய்யணும்? அப்போ எனக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். இந்த ஆள் சுத்த கிறுக்குத்தனமா எழுதியிருக்கர்னுதான் அப்போ நினைச்சேன்.
 
ஆனா பெரியவனான பிறகு, வேற பெரிய மனுஷங்களும் இதையே சொல்றாங்கன்னு படிச்சப்போ, நாமதான் சரியா புரிஞ்சுக்கலைன்னு தோனுச்சு. சரி இது என்னதான் விஷயம் பார்த்துருவோம்னு, கொஞ்சம் தத்துவ புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அதுல மெய்ஞானம், வேதாந்தம், சித்தாந்தம்னு என்னென்னவோ சொல்லியிருந்தாங்க.என்னடா இது, இதுக்கு ஸ்கூல்ல படிச்சதே பரவாயில்லையேன்னு  நினைச்சேன்.

நல்ல புரியறமாதிரி நறுக்குன்னு யாரும் சொல்லலியானு தேடுனப்போ தான், சூபி கதைகள் கிடைச்சது. பெரிய பெரிய விஷயங்களையெல்லாம், சும்மா நறுக்குன்னு புரியற மாதிரி சுருக்கமா சொல்லியிருந்தாங்க. அத படிச்சப்புறம்தான், இந்த பெரியவங்கல்லாம் என்ன சொல்ல வர்றாங்கனு கொஞ்சம் புரிஞ்சது.

அதுல சொன்ன ஒரு கதைலதான், ஸ்கூல்ல படிச்ச அந்த விஷயத்துக்கு அர்த்தமே புரிஞ்சது.

ஒரு நாள், எந்த வீட்டுக்குள்ள நுழையலாம்னு பாத்துக்குட்டே வந்த ஒரு திருடனுக்கு, ஊர் எல்லையில ஆத்தங்கரை ஓரத்துல இருந்த ஒரு குடிசை கண்ணுல பட்டுச்சு.கதவு வேற தொறந்துருந்துச்சா, நேரா உள்ள நுழைஞ்சுட்டான்.

உள்ள எதாவது கிடைக்குமான்னு பார்த்தான். ஆனா அந்த குடிசைக்குள்ள ஒண்ணுமே இல்ல.என்னடா இது? இந்த குடிசைக்கு சொந்தக்காரன் சரியான பிச்சைக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினச்சுட்டிருந்தப்போ, அவன் மேல ஒரு வெளிச்சம் விழுந்துச்சு.

பதறிப்போய் திரும்பிப் பாத்தபோ , ஒரு பெரியவர் கைல விளக்கோட நின்னுட்டுருந்தார்.

"இருட்டுல என்னப்பா தேடுற?" னு சாதாரணமா கேட்டவரு, "கதவோரமாதான தூங்கிட்டுருந்தேன், நானே உனக்கு வீடு பூராவும் சுத்திக் காட்டியிருப்பேனே?" னு அவன் பக்கத்துல வந்தாரு.

என்னடா இந்த ஆள் சுத்த பைத்தியக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினைச்சாலும், திருடனுக்கு அவர் குரல்ல இருந்த இனிமையும், அப்பாவித்தனமும் அவன என்னமோ செஞ்சுச்சு.முன்ன பின்ன தெரியாதவன்கிட்ட, யார் நீ? எதுக்கு வந்தனு மிரட்டாம், எதோ சொந்தகாரன பாத்ததுபோல குசலம் விசாரிக்கிரானேனு "நான் யார்னு தெரியுமா? நான் திருடன்" னு அதிகாரமா சொன்னான்.

"அதுனால என்னப்பா? ஒவ்வொருத்தரும் வாழறதுக்கு  எதோ ஒன்னு செய்யனுமில்ல? நீ திருடுற, அவ்வளவுதான். சரி வா நானே இந்த வீட்ட உனக்கு சுத்திக் காட்டுறேன். இங்க நான் முப்பது வருஷமா இருக்கேன். என் கண்ணுல எதுவும்பட்டதில்ல. இப்போ உனக்கு எதாவது பொருள் தெரிஞ்சா சொல்லு, நாம் பங்காளிகலாயிடுவோம்" னு இயல்பா சொன்னார்.

என்னடா இது வம்பாபோச்சு? எப்படியாவது இவர்கிட்ட்யிருந்து தப்பிச்சு போய்டனும்னு அவன் நகர்ந்தப்போ

"நில்லுப்பா, நீ இப்படி வெறும் கையேடு போகக்கூடாது. இந்தா இதை எடுத்துக்கோ" அப்படின்னு அவர் போத்தியிருந்த கம்பளிய கொடுத்தார். அவருகிட்ட இருந்த ஒரே பொருள் அதான்.

"என்னய்யா இது நன் ஒரு திருடன். எனக்குபோய் இதைக் கொடுக்குறீங்களே?" னு குழம்பிப் போய் கேட்டான் திருடன்.

"அட அதனால் என்னப்பா? எல்லாரும் ஏதோவொரு தொழில் பண்றாங்க. நீ இதப் பண்ற. என் ஆசீர்வாதத்தோட, நீ உன் தொழில கண்ணும் கருத்துமா செய். யாருகிட்டயும் மாட்டிக்காத" அப்படின்னு சொல்லி கம்பளிய அவனுக்குக் கொடுத்தார்.

இவருகிட்டருந்து தப்பிச்ச போதும்னு, அந்த திருடன், கம்பளிய போத்திக்கிட்டு வாசலைப் பாத்து நடந்தான்.

திருடன் அரண்டு போய்ட்டான். அவன் வாழ்நாள்ல அப்படியொரு அதட்டல் கேட்டதில்ல.திரும்பி அவருகிட்ட வந்தான்.

"வாழ்க்கைல கொஞ்சமாது நல்ல பண்புகளா கத்துக்கோ. நான் உனக்கு கம்பளி கொடுத்துருக்கேன், இவ்வளவு நேரம் பழகியிருக்கேன், ஒரு நன்றி கூட சொல்லாம் போற?" னு ஒரு அரட்டு அரட்டுனாறு.

"நன்றிங்கய்யா" னு சொல்லிட்டு வாசப்படிய தாண்டுனவன்கிட்ட, "கதவு திறந்துருந்துதுன்னு உள்ள வந்தெல்ல, போகும்போது மூடிட்டு போ. குளிர் காத்து அடிக்குதுள்ள. நீ திருடனாயிருக்குறதுல எனக்குப் பிரச்சனையில்ல. ஆனா பழக்க வழக்கங்கள்ள நான் ரொம்ப கண்டிப்பானவன் தெரிஞ்சுக்கோ" னு அவர் பேசுனத கேட்ட திருடன், இப்படி ஒரு மனுஷனான்னு நினைச்சுட்டே கதவை சாத்திட்டு நடந்தான்.

அடுத்த கொஞ்ச நாள் அவனுக்கு அந்த பெரியவர் பத்திய நினைப்பே இருந்துச்சு. அவரப் புரிஞ்சுக்கவே முடியலையேனு நினச்சவன், அவரைப்பத்தி விசாரிச்சதுல, அவரு ஒரு சூபி ஞானின்னு தெரிஞ்சுது.

அப்பறம் கொஞ்ச நாள்ல, அந்த திருடன் மாட்டிகிட்டான். அவனி நீதிமன்றத்துல நிப்பட்டினப்போ, "உன்ன நல்ல தெரிஞ்சவங்க யாராவது இந்த ஊர்ல இருக்காங்களா? னு நீதிபதி கேட்டார்.

அந்த ஊர்ல நிறையப் பேருக்கு அவனைத் தெரியும்னாலும், யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ஒரு திடனத் தெரிஞ்சவன்னு யாரு சொல்வாங்க? யாரு தனக்காக வந்து சாட்சி சொல்லுவாங்கனு அவன் யோசிச்சப்போ, அவனுக்கு, அந்த சூபி ஞானி ஞாபகம் வந்துச்சு. அவர் பேரைச் சொன்னான்.

இதைக் கேட்ட நீதிபதிஅதிர்ச்சியோட , "நீ சொல்றது மட்டும் பொய்யா இருந்தா உன்ன கடுமையா தண்டிப்பேன்" னு சொல்லி அந்த பெரியவர அழைச்சுட்டு வரச் சொன்னார்.

நீதிமன்றத்துக்கு வந்த பெரியவர்கிட்ட "இவனை உங்களுக்குத் தெரியுமா" னு நீதிபதி கேட்டார்.

"தெரியுமாவா? இவர் என் நண்பர்.ஒரு நாள் ராத்திரி இவர் என் வீட்டுக்கு வந்தார், அன்னைக்கு குளிர் அதிகமா இருந்துச்சு. அதுனால இவருக்கு என் கம்பளியைக் கொடுத்தேன்" அப்படின்னு சொன்னாரு.

"இவரு உங்க நண்பர்னு சொல்றிங்க. ஆனா இவர் மேல மத்தவங்க திருட்டுக் குற்றம் சுமத்துராங்களே?" னு நீதிபதி கேட்டார்.

"இருக்காது. இவர் ரொம்ப இனிமையானவரு. என்கிட்டே கம்பளிய வாங்கிட்டு நன்றி சொன்னார். வீட்டைவிட்டு போகும்போது, எனக்குத் தொந்தரவு தராம, கதவ சாத்திட்டு போனாரு. அருமையான நண்பர்"

"ஐயா நீங்களே இவரப் பத்தி இவளோ உயர்வாக சொல்றதுனால இவர விடுவிக்குறேன்" னு சொல்லி அந்த திருடன விடுதலை பண்ணுனாரு நீதிபதி.

விடுதலையான திருடன், அந்த ஞானி பின்னாடியே போனான். இதைப் பார்த்த ஞானி" என்னப்பா இது? எதுக்கு என் பின்னாடி வர்ற?" னு கேட்டார்.

"நீங்க என்ன காப்பத்திருக்கீங்க. என்ன உங்க நண்பன்னு சொல்லிருக்கிங்க. இனிமையானவன்னு சொல்லியிருக்கிங்க. இதுவரை என்னை யாரும் அப்படி சொன்னதில்ல. இனி உங்களோடதான் வரப் போறேன். உங்ககிட்ட இருக்குற இந்த பக்குவம், எல்லாத்தையும் வித்த்யாசமா பாக்குற இந்த குணம், இதெல்லாம் நானும் கத்துக்கணும். நானும் உங்களைப் போல ஆக வேண்டும். அதான் உங்க கூட வரேன்" னு சொன்னான்.

இந்தக் கதைய விளக்கி, நிறைய சித்தாங்களும், தத்துவங்களும் சொல்லியிருந்தாங்க. நான் அதையெல்லாம் இங்க சொல்லப் போறதில்ல. (பின்ன எனக்கு புரிஞ்சாத் தான நான் சொல்ல முடியும்?) முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் (அதாவது எனக்குப் புரிஞ்சது) அவன் ஒரு திருடன்னா இருந்தாலும்,  அந்த சூபி ஞானி அவன எப்படிப் பாத்தாரு?

அவருகிட்டயிருக்குரத  திருட வந்தவன் கிட்ட கூட எவ்வளவு அன்பா  நடந்துக்கிட்டாரு? தன்கிட்டயிருந்த ஒரே சொத்தான கம்பளியையும் அவனுக்குக் கொடுத்தாரு.

இதை படிக்கும்போதுதான் சின்ன வயசுல படிச்ச திருக்குறளுக்கு அர்த்தமே புரிஞ்சுது. ஒரு திருக்குறளைப் புரிஞ்சுக்குரதுக்கே இவளவு நாலாகியிருக்குன்னா, வாழ்க்கைல நம் எவ்வளவு விஷயங்களப் புரிஞ்சுக்காம இருக்கோம்?

தன்கிட்ட திருட வந்தவன் அன்பா நடத்தி, அவன தன் நண்பன்னு சொல்லி தண்டனைலருந்து காப்பாதுனதுனால, அவன் திருட்டு தொழில விட்டுட்டு திருந்தி, அவருகூடவே, சிஷ்யனா, ஞானத்தைத் தேடி கிளம்பிட்டான்.

அவரு மட்டும் அவன திருடன்னு சொல்லியிருந்தா, அவன் திருடனாவே தான் இருந்திருப்பான். கெடுதல் செய்ய வந்தவனுக்கு நல்லது செஞ்சதாலதான், அவன் திருந்தி அவருக்கு சீடனாகவே வந்தான். இதைத் தான், மன்னிக்கிற பண்புன்னு பெரியவங்க சொல்றாங்க. ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தா அவன் திருடனாவே இருந்திருப்பான். அந்த ஞானி வழங்கிய மன்னிப்புதான் அவன திருந்தி வாழ  வைச்சது.

தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கொடுக்குறதே, அவங்க செஞ்ச தப்ப உணரனும், திரும்ப செய்யக்கூடாதுன்னு தான். ஆனா அந்த தண்டனையலேயே அவங்க மறுபடியும் தப்பு செயவ்வாங்கன்னா அதனால என்ன பிரயோஜனம்?

ஆனால் மன்னிக்கும்போது, அவன் செஞ்ச தவற அவனே உணர ஒரு சந்தர்ப்பம் கொடுக்குறோம். அதைப் புரிஞ்சுக்கிடான்னா, எந்த சூழ்நிலைலயும், அவன் தப்பே செய்ய மாட்டான்.

இதுதான் வாழ்க்கையோட அடிப்படை தத்துவம்(நான் கூட கொஞ்சம் தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டேன்ல?). பிறரிடம் அன்பு செலுத்தும்போது, உலகத்தையே நாம் மாற்றிவிடுகிறோம்.

அன்பு மட்டுமே நிலையானதாக இருக்கும். அதுவே வலிமையானதாகவும் இருக்கும்.

வாழ்வின் ஒளி

ஜென் குரு ஒருவர், சீடர்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார்.

"பிறப்பைப் பொறுத்தவரை, எல்லா உயிர்களும் சமமே. பசி, தூக்கம், தாகம், மரண பயம் இவை எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. ஒரு நாள் என்பது, இரவும் பகலும் சேர்ந்ததுதான். இரண்டும் மாறிவருவதுதான், கால ஓட்டம்.அதுபோலவே, வாழ்க்கை என்பது, இன்பம் தும்பம், பிறப்பு, இறப்பு இரண்டும் சேர்ந்ததே."

சீடர்கள் குருவின் உபதேசங்களை கூர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"இரவு வருகிறது, மெல்ல அது கலைந்து, பொழுது புலர்கிறது.அந்தச் சமயத்தில், எந்தவொரு நொடியில் பொழுது புலர்ந்துவிட்டது என்பதை நீ அறிவாய்? குரு சீடர்களை நோக்கிக் கேட்டார்.

"ஒரு மிருகம் தொலைவில் நிற்கும்போதே, அது கழுதையா? குதிரையா? என்று காண முடிந்தால், வெளிச்சம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம்." என்றான் ஒரு சீடன்.

குரு, மறுத்து தலையசைத்தார்.

"தூரத்திலிருக்கும் ஒரு மரம், ஆல மரமா? அரச மரமா? என்று சொல்லமுடியுமானால், அந்த நேரம் வெளிச்சம் வந்துவிட்டது என்று அறியலாம்" என்றான் மற்றொரு சீடன்.

அதையும் மறுத்தார் குரு.

சீடர்கள் குருவையே விளக்கம் தருமாறு வேண்டினர்.

"எந்தவொரு மனிதனைக் கண்டாலும், இவன் என் சகோதரன், எந்தவொரு பெண்ணைக் கண்டாலும், இவள் என் சகோதரி என்ற எண்ணம் உனக்கு ஏற்படுகிறதோ, அப்போதே உனக்கு வெளிச்சம் கிடைத்ததாக அர்த்தம். அதுவரை, உச்சி வெயில் கூட காரிருளே." என்று விளக்கினார் குரு.

இது தான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

 பிறப்பில்லா முக்தியை அடைய முதல் தகுதியே, சக மனிதனை, சகோதரத்துவத்துடன், பார்ப்பதுதான்.

உலகிலுள்ள அத்தனை மனிதர்களையும், சகோதர சகோதரிகளாக பார்த்தல், வெறுப்பையும், துவேஷத்தையும், ஒழித்து அன்பை மலரச் செய்யும்.

அனைத்து உயிரக்ளிடத்தும், அன்பு காட்டுங்கள் என்பதுதான், அனைத்து மதங்களும், போதிக்கும், விஷயம்.

இறைவனைத் தேடி அலைகிறேன், இறைவனுக்காக செய்கிறேன் என்று சொல்பவர்களெல்லாம், அந்த இறைவன், தங்களுக்குள்ளேயே இருக்கிறன் என்பதை உணர்வதில்லை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைகிறார்கள்.

சக மனிதரிடம் அன்பு செலுத்தாதவர்களுக்கு, இரவும் பகலும், வெறும் கால மாற்றகளாகவே இருக்கும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஆன வாழ்க்கையை அவர்கள் உணர்வதில்லை. இவர்கள் அனைவரும் இருளிலேயே வாழ்வைக் கழிக்கின்றனர். ஒளி என்பது நமக்குள்ளே ஏற்பட வேண்டும். அது ஏற்படும்போதுதான், நம் மனிதர்களாவோம். அதுவரை, மற்ற விலங்கினங்களுக்கும்  நமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

மூன்றாவது கை

வாழ்க்கையில் நாம் பலமுறை புரிந்துகொள்ள முயற்சித்தும், புரியாத விஷயங்கள், சிறு சம்பவங்களால் தெளிவாகிவிடுவதுண்டு . நம்பிக்கையின் சக்தியை பற்றி நான் முழுவதுமாக புரிந்துகொள்ள முயற்சித்தபோதும், அது போன்ற அனுபவமே ஏற்ப்பட்டது. பல முறை சிந்தித்திதும் புரிபடாத பல விஷயங்கள் இந்த குட்டிக் கதையைப் படித்தவுடன் தெளிவாக விளங்கிவிட்டது.

அந்த நாட்டில், தொடர்ச்சியாக பன்னிரண்டு வருடங்கள் மழை பொய்த்தது. நீர் நிலைகள் வற்றி, வறண்ட பூமியானது. பசியும், பஞ்சமும் மக்களை அழித்துக்கொண்டிருந்தது. அந்த நாட்டின் அரசன் அமைச்சர்களை அழைத்து ஆலோசித்தான். முன்பொரு சமயம் இத்தகைய நிலை வந்தபோது ஒரு முனிவரை அழைத்து வந்ததாகவும், அவர் காலடி பட்டவுடன் மழை பொழிந்ததாகவும், இந்த முறையும் அப்படியே ஆன்மீகவாதிகளை நாடிச் செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினர்.

இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், பல ஆன்மீக குருமார்களை அணுகினான். அவர்கள் அறிவுரைப் படி பிரம்மஞானி ஒருவரை அழைத்து வந்து 48 நாட்கள் தொடர்ந்து யாகமொன்றை நடத்த ஏற்பாடு செய்தான். யாகத்தின் இறுதி நாளில், மக்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றும், அன்றே மழை பெய்யுமென்றும் சொல்லப்பட்டது.

ஊரின் மையப் பகுதியில் யாக சாலை அமைத்து யாகம் தொடங்கப்பட்டது. தேவர்களுக்கும், தேவதைகளுக்கும், உரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு, சம்பிரதாயப்படி வேள்வி நடத்தப்பட்டது.

யாகம் முடியும் நாள், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மலை நேரம் நெருங்கியது. யாகமும் முடிந்தது. ஆனால் வானில் மருந்துக்குக்கூட மேகங்கள் இல்லை.

மன்னன் முகத்தில் கலக்கம். மகானின் முகத்தில் வேதனை. மக்களின் முகத்தில் அவநம்பிக்கை.

திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அடிவானில்,மேகக் கூட்டமொன்று புறப்படத் தொடங்கியது. அனைவரும் அந்தத் திக்கையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு சிறுவன் ஓடி வருவது தெரிந்தது.

கையில் ஒரு குடையுடன் ஓடி வந்த அந்த சிறுவன், கூட்டத்தில் புகுந்து தன் தோழர்களுடன் நின்றுகொண்டான்.

"எங்கேடா போன? எங்களோட தான வந்துட்டு இருந்த?" என்று மற்ற சிறுவர்கள் அவனிடம் கேட்டனர்.

"உங்களோட வந்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. இப்போ யாகத்துக்குத் தானே போறோம், அது முடிந்ததும் மழை பெய்யுமே, அப்போ எல்லாரும் நனஞ்சிருவோமே. அதான் வீட்டுக்கு ஓடிபோய் குடை எடுத்துட்டு வந்தேன்."

அவன் சொல்லி முடிக்கவும் அடை மழை தொடங்கவும் சரியாக இருந்தது.

வியப்புடன் இதனைப் பார்த்துகொண்டிருந்த, யாகத்தை நடத்திய மகான், "மன்னா, உண்மையில் இப்போது பெய்யும் மழை நாம் செய்த யாகத்துக்காகவோ, உனக்காகவோ, இந்த மக்களுக்காகவோ பெய்யவில்லை. இந்தச் சிறுவனுக்காகப் பொழிகறது. இந்த யாகத்தால் பெய்யாத மழை, இந்த சிறுவனின் நம்பிக்கையால் பெய்கிறது" என்றார்.

"இங்கு கூடியிருக்கும் அனைவரும், அரச ஆணைக்குப் பணிந்தும், என்னதான்  நடக்கிறது பார்ப்போம் என்ற எண்ணத்தாலுமே குழுமியிருக்கிறார்கள். மழை பெய்யும் என்ற நம்பிக்கை இவர்களிடத்தில் இல்லை. ஆனால், இந்தச் சிறுவனிடம் அது இருந்தது. அதுவே இந்த மழையை அழைத்து வந்திருக்கிறது." என்று அந்த சிறுவனைப் புகழ்ந்தார்.

நம்பிக்கை என்பது மஹா சக்தி. அந்த சக்தியாலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கை தான். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில், நல்லாதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.

கடவுள் என்பதே நம்பிக்கைதான். அவர் எப்படியிருப்பார், எங்கிருப்பார் என்று யாரும் பார்த்தது கிடையாது. ஆனால் இப்படித் தானிருப்பார் என்று நம் நம்பிக்கைக்கு உருவகம் கொடுத்து வணங்குகிறோம்.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கலானது, பல அந்தணர்கள் ஒன்று கூடி, ஒருமித்த மனத்துடன், ஒரே நோக்கத்துடன் ஜெபிக்கப்படுவது. அவர்களின் நோக்கமே நம்பிக்கையாக, மந்திர ஒளியாக பலமடங்கு பெருகி, எதனை வேண்டி யாகம் நடத்துகிறோமே, அதனை நிறைவேற்றிவைக்கிறது.

இந்த நம்பிக்கையே நம்மிடமிருந்து வெளிப்படும் கதிர்களாக, நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் இயக்குகிறது. நம் முயற்ச்சியில் வெற்றிபெறுவோம் என்று நினைத்தால், அந்த பாசிடிவ் உணர்ச்சி நம்மிடமிருந்து வெளிப்பட்டு, பிரபஞ்சத்தில் கலந்து, அத்தகைய சம்பவங்களே நடக்கின்றன.

நாம் கவலைகளால் பீடிக்கப்பட்டிருக்கும்போதும், ஏதோவொன்றுக்காக அஞ்சிக்கொண்டிருக்கும்போதும், அந்த சோக உணர்வுகள் வெளிப்பட்டு, மேலும் கவலைகளையே அளிக்கின்றன.இதனால்தான் பெரியவர்கள் எப்பொழுதும் நல்லனவற்றையே நினைக்க வேண்டுமென்று சொல்கின்றனர்.

வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?, செல்வந்தராவது எப்படி?, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி? என்று பல புத்தகங்களைப் படித்து நாம் பயனடைகிறோமோ இல்லையோ, இவற்றை எழுதியவர்கள், வெற்றியாளர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்தப் புத்தகங்கள் சொல்லும் விஷயங்களுக்கெல்லாம் ஆதாரம், நம்பிக்கைதான்.

இந்தப் புத்தகங்களைப் படித்ததால் ஒருவர் சாதித்துவிடுவதில்லை. இந்தப் புத்தகத்தில் சொன்னபடி நடந்தால், சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை இருந்ததால் சாதித்தார்.

இதனால்தான் நம்பிக்கை, மனிதனின் மூன்றாவது கை என்று சொல்லப்படுகிறது. 

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U