அஹமது காசிம் எனும் சூபி ஞானி ஒருவர், மெக்கா நகர் நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள் பயணம் என்பதால், தேவையான உணவை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.
பயணத்தின்போது, ஒரு பெண்மணி எதிர்பட்டார். ஞானியை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, "உங்களைப் பார்த்தால் சூபி ஞானி போல் தெரிகிறதே. எங்கே பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினாள்.
"புனித மெக்கா நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்று பதிலிறுத்தார் அஹமது காசிம்.
"அது சரி மூட்டையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?"என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்மணி.
"வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு" என்றார் சூபி.
"வழியில் உமக்கு உணவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டீரா?" என்று சூபியை ஏளனமாகப் பார்த்தால் அந்தப் பெண்.
இது கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அந்த ஞானியைப் பார்த்து மேலும் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி.
"உங்கள் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. நீர் ஒரு சூபியாக இருந்தும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர். வழிப் பயணத்தின்போது, ஏதோவொரு வகையில் இறைவன் உணவு வழங்கிவிடுவான் என்ற நம்பிக்கை கூட உமக்கு இல்லை. நீர் எப்படி பிறருக்கு இறைத் தத்துவத்தை போதிக்கப் போகிறீர்?" என்று ஏளனமாகச் சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.
இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த அந்த சூபி, வழியில் எதிர்பட்டோருக்கு தான் கொண்டு வந்த உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, வெறும்கையோடு, மனதில் இறைவன் பால் நம்பிக்கையும் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
நீண்ட தூரம் நடந்தார். பசியும் களைப்பும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. சுற்றிலும் எதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கினார்.எதுவும் புலப்படவில்லை. இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் நடந்தார்.
அப்போது கீழே ஒரு பெண்ணின் கால் கொலுசு கிடப்பதைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்தவர், இதைத் தவற விட்டுச் சென்றவர்கள் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள், அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு, உணவு ஏதாவது கேட்கலாம், என்று சுற்றிலும் பார்த்தார்.
அப்போது அவர் முன்பு சந்தித்த அதே பெண்மணி வந்து கொண்டிருந்தாள். நேர்ந்கி வந்ததும் அவளைப் பார்த்து, "தாயே! இந்தக் கொலுசு தங்களுடையதா?" என்று வினவினார்.
"ஆம் என்னுடையதுதான்" என்று பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
"அம்மா! எனக்கு ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் மிகுந்த பசியாக இருக்கிறது" என்று வேண்டினார் அஹமது காசிம்.
மீண்டும் அவரை ஏளனமாகப் பார்த்த அந்தப் பெண்மணி,"இப்போது நீங்கள் இந்தக் கொலுசைக் கொடுத்துவிட்டு உணவு பெரும் வியாபாரியாகி விட்டீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
நாமும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை அடைய வேண்டுமென்று உழைக்கிறோம். ஆனால் ஏன் அதனை அடைய வேண்டும்? அதன் பலன் என்ன?அந்த நோக்கம் எத்தன்மையது? போன்றவற்றை நாம் உணர்வதில்லை. அதனாலேயே நம் லட்சியத்தை அடைந்தவுடனேயே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.
வாழ்க்கைப் பயணத்தில் நமது இலக்கு எது? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் பயணம் எப்படி இருக்கிறது? நம்மில் எத்தனைப் பேர் இந்தக் கேள்விகளுக்கான் பதிலை அறிந்திருக்கிறோம்?
நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம், ஆனால் அந்த படிப்பின் நோக்கம் என்ன? எதற்க்காக படிக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கொடுப்பதில்லை. நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம் என்று மட்டும் சொல்லி படிக்க வைக்கிறோம். இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக உணராமல், கடமையைச் செய்வதுபோல் செய்துகொண்டிருக்கிறோம்.
இறை நம்பிக்கையிலும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். கடவுளிடம் நாம் முழுமையாகச் சரனடைந்துவிடுவதே உண்மையான பக்தி. கஷ்டங்களும் கவலைகளும் வரும்போது மட்டும் கடவுளை நினைக்காமல், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவன் செயல் என்று நம்பியிருப்பதே இறை நம்பிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
தலைப்புகள்
- அரசியல் (4)
- அலசல் (1)
- ஆன்மிகம் (5)
- எனது பார்வையில் (18)
- தத்துவம் (7)
- படித்ததும் பாதித்ததும் (9)
- பிரபலங்களின் வாழ்க்கையில் (11)
- விமர்சனம் (1)
நான் - ஒரு சுய அறிமுகம்
- STP
- Madurai, Tamil Nadu, India
- இந்த உலகத்தை வாழச் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் ....
0 கருத்துரைகள்:
Post a Comment