Showing posts with label எனது பார்வையில். Show all posts
Showing posts with label எனது பார்வையில். Show all posts

புகழின் மறுபக்கம்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று பெருமளவு சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையுமே சார்ந்து இருக்கின்றன. நேர்மரையானதகாவோ எதிர்மரையானதாகவோ எந்தவொரு பரபரப்பான செய்தியும் திரைத்துறைப் பிரபலங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் முக்கியமானவொன்று, சினிமா ஹீரோக்களின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைப் பற்றியது.

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று, மலையாள நடிகர்களைப் பற்றியது. தமிழ் இலக்கியவாதி ஒருவர் தனது கேரளப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபத்தை ஒரு வார இதழில் கூறியிருந்தார்.

கேரளத்தின் சூப்பர் ஸ்டார்  என்று போற்றப்படும் மம்மூட்டியின் எளிமையைப் பற்றியும், அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மக்களின் அணுகுமுறைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். அதோடு தமிழ்நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதாக எழுதியிருந்தார்.

நானும் எண்ணிப்பார்க்கிறேன். அண்டை மாநிலமான கேரளத்திற்கும் நமக்கும் ஏன் இந்த வித்தியாசம்? சினிமாப் பிரபலங்கள் மீதான பார்வையில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்ன?

முதலில் எனக்குத் தோன்றியது, கேரளத்தில் நிலவும் கல்வியறிவு. இந்தியாவிலேயே, அதிகமான கல்வியறிவு உடைய மக்களைக் கொண்ட மாநிலம். இதனால் மக்களிடம், வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் தெளிவாகக் காணக்கூடிய பக்குவம் இருக்கிறது. திரைப்பட ஹீரோக்களைப் பற்றியும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களும் மண்ணில் தோன்றியவர்கள்தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.அவர்களை ஒரு வித பிரமிம்மூபோடு பார்ப்பதில்லை. தங்களைப் போன்ற ஒரு மனிதராகவே பார்க்கிறார்கள். இதனால், பொது இடங்களில் இந்த நாயகர்களைப் பார்க்கும்போது எந்தவித சலசலப்பும் ஏற்படுவதில்லை.

இந்த ஒன்று தான் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். இங்கு சினிமா ஹீரோக்களை தெய்வமாக பார்ப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்போது அநேகம் பேர் என்று சொல்வது சற்று ஆறுதல்தான். முப்பது நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய கால கட்டத்தில், திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றுபவன் விண்ணுலக தேவனைப் போலவும், திரையில் கெட்டவர்களாகத் தோன்றும் வில்லன்களை, நிஜத்திலும் கொடூர அரக்கனைப் போலவும் நினைத்தவர்கள் நம் மக்கள். திரையில் தோன்றும் பிம்பங்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததனால் ஏற்படும் குழப்பம் இது.

இப்படி பொது மக்களிடம் தமக்கு ஏற்பட்டுள்ள மதிப்பை எத்தனை நாயகர்கள் உணர்ந்து, அதற்க்கேற்ப்ப செயல் பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே தேறுவர். திரையில் ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவரது இயற்கை குணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு படத்தில் மதுவை வெறுப்பவனாக நடிக்கும் நாயகன், நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது அவருடைய தனிப்பட விருப்பம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால், மக்கள் தன்னை மதிக்கிறார்கள் என்று உணர்ந்து, உண்மையிலேயே குடிப் பழக்கத்தை நிறுத்துபவர்கள், நிஜ நாயகர்களாக உருவாகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மிகவும் குறைவானவர்களே.

சினிமா ஹீரோக்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடாத ஊடங்ககளே கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கார் உபயோகிக்கிறார்கள், கல்யாண மண்டபங்கள், பண்ணை வீடுகள் முதலிய சொத்துகள் என்ன வைத்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பாமர மக்களையும் சென்று சேர்கின்றன. ஆனால் இந்த ஆடம்பர தோற்றத்துக்குப் பின் இந்த நட்சத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையை அந்த மக்கள் அறிவதில்லை.

இன்றைய தேதியில், தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொகையை சம்பளமாகப் பெருமளவிற்கு, அவருக்கு இருக்கும் அவசியங்கள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாயகனின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், அவனது வாழ்கை முறையைப் பற்றி நாம் அறிவதில்லை.

மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு ஹீரோ, ஒரு பொது இடத்தில் தோன்றினால், அங்கு என்ன களேபரம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். அவரைப் பார்க்கவும், அவருடன் கை குலுக்கி, கையெழுத்து பெறவும் முண்டியடித்துக்கொண்டு ஒரு சிறு பிரளயத்தையே உண்டாக்கிவிடுவார்கள் மக்கள். இப்படி இருக்கும்போது, ஒரு நாயகன் சாமான்யனைப் போல சாதாரண உணவு விடுதியில் சென்று தன் குடும்பத்தோடு உணவருந்த முடியாது. அவர்களது தனிமையையும் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய, ஒரு நட்சத்திர உணவகத்திக்கே அவர்கள் செல்ல முடியும்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, சாதரணக் கார்களில் பயணம் செய்தால் என்ன ஆகும்? பணத்தையெல்லாம் இழந்துவிட்டார். கடன் தொல்லையில் இருக்கிறார்.அவருக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது. அவரது புதிய படம் வெற்றிபெறாது . அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். போன்ற வதந்திகள் அவருக்கு எதிராக பரப்பப்படும். அதனால், தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், ஒரு ஆடம்பர சொகுசுக் காரை, அந்த ஹீரோ பயன்படுத்த வேண்டிய நிலை.

இதையெல்லாம் விட, ஒரு சினிமா நட்சத்திரமாக இருக்கக் கூடிய ஒருவர் இழக்கும் முக்கியமான விஷயம், தனிமை. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட முடியாத ஒரு பரிதாபத்திற்க்குரிய மனிதர். ஒரு சாமாநியனைப் போல தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல இயலாது.


நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்தில் கூறுவார். "ஓவர்நைட் ஸ்டார் என்பது தங்கக் கூண்டு போன்றது" என்று. ஆம். இந்த நடிகர்களின் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். தங்கக் கம்பிகளால் பூட்டப்பட்ட சிறையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து, புகழின் உச்சிக்குச் செல்ல, இவர்கள் கொடுத்த விலை, தங்களின் தனிமையும் சுதந்திரமும். இந்த நாயகர்கள் அடைந்திருக்கும் புகழின் மறுபக்கம் இதுதான்.

தங்கத்தில் செய்திருந்தாலும் சிறை சிறைதான். இதனை உணர்ந்தவர்கள், ஆடம்பர வாழ்கையை வெறுக்கத் துவங்கிவிடுகின்றனர். ஆனால், இந்த சிறையினை கௌரவமாகக் கருதுபவர்கள், அறியாமையில் உழன்று, வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள.

கேரளத்தில் மக்கள் சினிமா நட்சத்திரங்களை சக மனிதர்களாகவே பார்க்கிறார்கள். அதனால், இந்த நாயகர்களும், எளிமையான வாழ்கையை வாழ முடிகிறது. தமிழக மக்களும் விரைவில் இதனை உணர்ந்துகொள்வார்கள்.

அலைபேசி அடிமைத்தனம்

நம்முடைய வாழ்க்கை, இன்று இயற்கையால் சூழ்ந்திருப்பதைவிட, இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலுமே நிரம்பியிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் சில வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை, வாகனங்கள் இன்றி பக்கத்துத் தெருவுக்கு கூட நாம் செல்வதில்லை, தொலைக்காட்சி இல்லாமல் பொழுதைக் கழிக்க இயலவில்லை. இப்படி, அவற்றிடம் நம்மை முற்றிலுமாக இழந்துவிட்ட அறிவியல் சாதனங்களில் மிக முக்கியமானது, அலை பேசி.

கிட்டத்தட்ட நம் உடலில் ஒரு உறுப்பாக, மூன்றாவது கையாக நம் வாழ்வில் ஒன்றிவிட்ட்ட ஒரு சாதனம் இந்த அலை பேசி. Mobile Phone. இந்த சின்னஞ்சிறிய கருவி இல்லாமல் நம்மால், இயங்க முடிவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, தகவல்கள் உடனடியாக பரிமாறிக்கொள்ளபப்டுகின்றன, அதோடு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் உபயோகப்படுகிறது. இப்படி பல அம்சங்களில் நமக்கு உதவும் இந்த கைபேசியை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அப்படிச் செய்த ஒரு மனிதரையும் சமீபத்தில் காண நேர்ந்தது.

சில அரசியல், சினிமா பிரபலங்களும், இலக்கியப் பிரமுகர்களும் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ஆனால், நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், அலைபேசி இல்லா வாழ்க்கையை அனுபவித்து வருவதை கண்டபோது ஆச்சர்யம் அளித்தது. இத்தனைக்கும் அவர் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி இந்த சிறிய தேவதையை புறக்கணித்துவிட்டு இருக்கிறார் என்று வியந்து அவரிடமே கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன காரணங்கள் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தின.

"இந்த அலைபேசி இல்லாததால், நம்முடைய நேரம் முழுமையாக நம்மிடமே இருக்கிறது" என்றார். "எங்கேனும் வெளியே செல்லும்போது, நண்பர்களைப் பார்த்தால், எந்த இடையூறும் இன்றி மணிக்கணக்கில் பேச முடிகிறது. அலைபேசி இருந்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வந்து விடுகிறது." என்று கூறியவர், "முக்கியமான கூட்டங்களிலும், கலந்துரையடல்களிலும் இருக்கும்போது அனாவசியமான கவனச் சிதறல்கள் ஏற்படுவதில்லை" என்று விளக்கினார்.

"இதெல்லாம் சரி, ஆனால் உங்கள் தொழிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? அலைபேசி உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியமல்லவா?" என்று கேட்டேன்.

"இல்லை கைபேசி இல்லாதது என் தொழிலுக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. " என்று சிரித்தார்.

"அது எப்படி?" என்று கேட்டேன் மேலும் ஆச்சர்யத்துடன்.

"என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் என் அலுவலக என்னை அதாவது landline எண்ணை வழங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் நேரடியாக அங்கு தொடர்புகொண்டு வேண்டிய சரக்கை தருவித்துக்கொள்வார்கள். ஒரு வேளை நான் அலைபேசி வைத்திருந்தால், அவர்கள் என்னை அழைத்து இந்த சரக்கை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்வார்கள். பின்னர் நான் மீண்டும் என் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டும். இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது.அதனால்தான் எனக்கு கை பேசி உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் என் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடைமுறை சௌகர்யமாகவே இருக்கிறது." என்றார்.

எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நம்முடைய விஞ்ஞான  உபகரன்களால் எத்தனை அழகான வாழ்க்கை மறைக்கப்பட்டிருக்கிரதேன்று உணர்ந்தபோது வேதனையாக இருந்தது.

நண்பர் சொன்னது போல் அலைபேசி உபயோகிக்கும்பொழுது, நம்முடைய நேரம் நம்மிடம் இருப்பதில்லை. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்வதை போல்லவே இயங்கிக்கொண்டிருக்கிறோம். சந்தித்துப் பார்க்கும் பொழுது, எதோ அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போலவே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தமானவர்களுடன், நேரம் செலவிட முடியாமல், சிறிது நேரத் தனிமையின் சுகத்தை அனுபவிக்க முடியாமல், சூழ்நிலைகளுக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது உணரமுடிந்தது.

ஆனால் இந்த அடிமைத்தளை வேறொருவர் நம்மீது சுமத்தியதல்ல, நாமே நமக்கு சூட்டிக்கொண்டது. இந்த அலைபேசி அடிமைத்தனம், பாரபட்சமின்றி, அனைத்துத் தரப்பினரிடமும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்யாசம் இன்றியும் பரவியிருக்கிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டும், வாலிபர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புவதிலும், பெரியவர்கள் தொழில்த் தொடர்புகளை பேசிக்கொண்டும், பெண்கள் தொலைகாட்சி நிகழ்சிகளைப் பற்றியும் தம் குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வதிலும் அலைபெசியிடம் காலத்தைப் பரிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நண்பரிடம் பேசியபோது உணர முடிந்த மற்றொரு விஷயம், இந்த அடிமைத்தளையை உடைத்தெறியவும், இந்த விஞ்ஞான சிறையிலிருந்து வெளியே வரவும் நமக்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியமும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. நான் உட்பட. அனாலும் இந்த இந்த சாதனங்களின் உபயோகத்தை குறைக்க முடியும். அதற்க்கான் முயற்சியையாவது மேற்கொள்ள எல்லோராலும் நிச்சியமாக முடியும்

அரசாங்கத்தின் அபத்தமான யோசனை

சமீபத்தில் படித்த செய்தியொன்று, என்னுள் சிந்தனையைத் தூண்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் குழந்தைக பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இத்தகைய புதுமையான திட்டத்தை அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் இக்கட்டான நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.பெருகிவரும் மக்கதொகையால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து, இது போன்ற திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், ஆனால் பெருகிக்கொண்டே வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.

குழந்தை என்பது, கடவுள் கொடுக்கும் வரமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் சன்மானத்துக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது என்பது சிக்கலான விஷயம். சில தம்பதிகள், இந்த பணத்திற்காக உருவான கருவைக் கூட கலைக்கும் வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக ஒன்றும் அறியாத ஒரு கருவைக் கொள்வது தகுமா? இது போன்ற செயல்களுக்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருக்கலாமா? மேலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்க முடியாமல் போனாலோ, தாமதமானாலோ, அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?

திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கருத்தரிகவிலை என்றால், நம் சமுதாயத்தில் என்னென்ன பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் மனைவியாகிய அந்தப் பெண் சந்திக்கக்கூடிய அவமானங்கள் சொல்ல முடியாதவை. அப்படியிருக்கும்போது, இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. முன்பு சொன்னதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பத்திக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகுமேயானால், அதனை அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் ஈடு செய்ய முடியுமா?

இப்படி யோசித்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த திட்டம் சற்று அபத்தமாகவும் ஆபத்தானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இன்னும் சிறப்பான திட்டங்களை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். முன்பு இருந்த, இரண்டு குழந்திகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் திட்டம் இன்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கொடிய திட்டம்தான்.

இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டத்திலேயே சிறு மாறுதல் செய்து, ஒரு தம்பதி, முதல் குழந்தைக்குப் பிறகு, குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு அடுத்தக் குழந்தை பெற்றுக்கொண்டால், சன்மானம் வழங்கப்படும் என்று மாற்றியமைக்கலாம். இதன் மூலம், ஜனத்தொகை பெருகும் வேகத்தைப் பாதியாகக் குறைக்க முடியும். இது,  தம்பதிகளின் ஆரோக்யத்திற்க்கும் சிறந்தாதாக இருக்கும்.

இப்படிப்பட்ட திட்டங்களை அரசு அறிவிக்கலாமே தவிர, புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களை குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது தவறான அணுகுமுறை. மகாராஷ்டிரா அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களைப் பரிசீலித்து தேசம் முழுவதும், முதல் குழந்தைக்குப் பிறகு, இரண்டாவது குழந்தைக்கு போதிய கால இடைவெளி (மூன்று வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ) விட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவிக்கலாம்.

ராமர் கோவிலா? பாபர் கோவிலா?

தேசத்தின் மாபெரும் புதிராக இருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தொடங்கிய இந்த பிரச்னை, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உச்சக்கட்டத்தை எட்டி, இன்று வரை தீராத துயரமாக இருக்கிறது. இந்த விவகாரத்தின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கபப்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு அதுவும் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. காமன் வெல்த் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில், கலவரம் ஏற்ப்படக் கூடிய அபாயம் இருப்பதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற நியாயமான காரணம் இருந்தாலும், இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி தற்காலிகத் தீர்வுகளும், தள்ளிவைப்புகளும்? முடிவு என்றைக்கு வெளியிடப்பட்டாலும் கலவரம் நடக்கும் ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு கலவரத்தை அடக்க வேண்டுமே தவிர இப்படித் தள்ளிவைப்பது சரியான அணுகுமுறையாகாது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரை, இதன் பின்னணியையும், இந்தப் பிரச்னையின் மூலத்தையும் சற்று விரிவாக அலசியிருக்கிறது.  அதில் கூறப்பட்டுள்ள படி, முகலாயப் பேரரசர் பாபர் இந்தியாவை ஆண்டபோது, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பது தான் இந்த பாபர் மசூதி. இஸ்லாமிய, மங்கோலியப் படையெடுப்புகளின்போது நிர்மூலமாக்கப்பட்ட பல கோவில்களில், இந்த அயோத்தியும் ஒன்று. அப்படி இடிக்கப்பட்ட பல கோவில்கள், சுதந்திரத்திற்குப் பின்பு மீண்டும் கட்டப்பட்டிருகின்றன. அப்படியிருக்கையில் இந்த அயோத்தி விவகாரம் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக  மாறவேண்டும்?

இந்துக்கள்  வணங்கும்  தெய்வமான,  ராமர் அவதரித்த  இடம், ராம ஜன்ம பூமி என்று இந்த அயோத்தி கருதப்படுவதுதான் இத்தனைக் கலவரத்திற்கும் காரணம். ஹிந்துக்களின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக, ராமாயணம் எனும் பெருங்காவியம் இருக்கிறது. ஆனால், மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த நம்பிக்கைகள் காரணம் அல்ல என்பதும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் வேண்டிச் செய்யப்பது என்பதும், இருதரப்பினரும் அறிந்ததே. பின் எப்படி இத்தனை கொடிய கலவரங்கள் நிகழ்கின்றன?

இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள நாம் முகலாயர் காலம் வரை செல்ல வேண்டும். மங்கோலியர்களும், இஸ்லாமியர்களும் இந்தியா மீது தொடர்ச்சியாக நடத்திய படையெடுப்புகளில், ஹிந்து மதத்தின் சின்னங்களாகக் கருதப்பட்ட பல கோவில்கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. மக்களும் மிகுந்த கொடுமைகளை சந்திக்க நேர்ந்தது. அன்று இஸ்லாமியர்கள் காட்டிய அந்த வெறி, அவர்களை ஹிந்து மதத்தின் நிரந்தரப் பகைவர்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துவிட்டது. பின்னர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறை சம்பவங்களும் இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்துவிட்டது. ஊன்றிக் கவனித்தால், ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் வட இந்தியாவிலேயே அதிகம் நடப்பது தெரியும். காரணம் இந்த மக்கள், முகலாயர் காலத்திலும், பிரிவினையின்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான் இப்பொழுது நடந்து வரும் சம்பவங்கள் இருக்கின்றன. இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருப்பதும் நிதர்சனமான உண்மை.

மக்களின் நிலை இப்படி இருக்கையில், வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது முக்கியமல்ல.எப்போது சொல்லப்பட்டாலும், கலவரத்தைத் தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த நிலையில், தீர்ப்பை விரைவாக வெளியிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே புத்திசாலித்தனமாக இருக்குமே சாஹிய, அதனைத் தள்ளிப்போடுவது எந்த வகையிலும் நன்மை அளிக்கப்போவதில்லை. கலவரங்கள் எழுமானால், அதனை எதிர்த்து அடக்க முயற்ச்சிக்க வேண்டும். அதைவிடுத்து, வான்முறை ஏற்படும் என்று தயங்குவதும் அஞ்சுவதும் ஒரு அரசாங்கத்துக்கு அழகல்ல.

இந்தக் கலவரங்களைத் தவிர்ப்பது என்பது சிரமாமான காரியம். ஏனெனில், எத்தகைய தீர்ப்பு வந்தாலும், வன்முறையில் ஈடுபட சில விஷமிகள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும், மக்களிடையே அதிக பதட்டமில்லாமல் இருக்க, இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் நடுநிலையானதாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில், ராமர் கோவிலும் கட்ட வேண்டாம், பாபர் கோவிலும் கட்ட வேண்டாம். ஒரு அநாதை ஆசிரமமோ, குழந்தைகள் பூங்காவோ, அல்லது ஏதேனும் அரசாங்க அலுவலகமோ கட்டிவிடலாம்.

மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில தேசவிரோதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இத்தகைய தீர்ப்பையே வழங்க வேண்டும்.

அறிவுக் கொல்லி நோய்கள்

தமிழகத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்பது தமிழக அரசியல்வாதிகளின் முக்கியமான கோஷம். ஆனால், தமிழகத்தை சீரழிக்கும், மக்களை மூடர்களாக்கும் விஷயங்களே இங்கு நடக்கின்றன. இவற்றுக்கும் அரசியல்வாதிகளே முக்கியக் காரணம்.இத்தகைய செயல்களைச் செய்ய தொலைகாட்சி எனும் சிறிய வஸ்துவே போதுமானது.. தமிழில் இருக்கும் அளவுக்கு இந்தியாவின் வேறு மொழிகளில், இத்தனை சேனல்கள் இருகின்றனவா என்பது சந்தேகமே. இதில் முக்கியமான விஷயம், ஏறக்குறைய தமிழ் நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சிச் சேனல்கள் வைத்திருக்கின்றன.(மற்ற மாநில அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு வசதியில்லாதவர்களா, அல்லது புத்திசாலித்தனம் இல்லாதவர்களா என்பது தெரியவில்லை.)

இத்தனை சேனல்கள் இருப்பதால் என்ன பிரச்சனை என்பதைக் கூட உணராதவர்களாக இருக்கிறோம் நாம். அந்த அளவுக்கு நம்மை இந்த சின்னத்திரை மோகம் பீடித்திருப்பதுதன் முதல் பிரச்சனை.

உலக அளவில் பார்த்தால், தொலைக்காட்சிச் சேனல்கள் எத்தனையோ இருக்கின்றன. அறிவையும் திறமையையும் வளர்க்கும் பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களும் செய்திகளும் உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. இப்படி இந்த தொலைக்காட்சியின் நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகளின் வீரியம் அதிகமாக உள்ளது.

முன்பே சொன்னது போல், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சேனல்கள், கட்சிக்காரர்களுடையதே. இவை இந்த கட்சிகளின் பிரசார ஆயுதமாகவே செயல்படுகின்றன. இவர்கள் ஒளிபரப்பும் செய்திகளின் நம்பத்தன்மை மிகக் குறைவாகவே இருக்கிறது. தங்கள் கட்சிக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. இதனால், இவர்களின் செய்திகளைப் பார்ப்பவர்கள், நாட்டு நடப்புகள் பற்றி, தவறான கண்ணோட்டம்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த சேனல்களால் ஏற்படும் முக்கியமான தீமை, இவர்களின் நிகழ்ச்சிகளின் பலனாக வருவதுதான். அறிவுப் புரட்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு, இவர்கள் மூளையை மழுங்கடிக்கும் செயல்களையே செய்துவருகிறார்கள். ஆக்கப்பூர்வமான் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கும்போது, கதைகளே இல்லாத மெகா சீரியல்களும், சினிமா மற்றும் சின்னத் திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருக்கும் தொலைபேசியில் பாட்டு கேட்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, இன்று தமிழக மக்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

செய்திகளில்தான் இவர்கள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறார்கள் என்றால், சினிமா விமர்சனத்திலும் நடுநிலைத்தன்மை இல்லை. இந்தச் சேனல்காரர்கள் சினிமாவையும்  தயாரிப்பதால், தங்கள் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்களின் ரசனைப்படியும், கதையின் தன்மையைப் பொருத்தும் படங்களை வரிசைப் படுத்தும் நிகழ்ச்சியில், இவர்களின் படங்களுக்கே முன்னிலை அளிக்கப்படுகிறது. இதனால் பல தரமான படங்கள், உரிய மதிப்பளிக்கபடாமல் தோல்வியைத் தழுவுகின்றன.

பொது மக்களுக்கு மட்டுமல்ல, திரைத் துறைக்கும் பாதகமான செயல்களையே இவர்கள் செய்து வருகிறார்கள். புதிய படங்களை வெளியான மூன்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே இவர்களின் சேனல்களில் ஒளிபரப்பிவிடுகின்றனர். இதனால், மக்களிடையே, எப்படியும் சில நாட்களில் ஏதாவதொரு டிவியில் போட்டுவிடுவார்கள், எதற்க்காக படத்தை திரை அரங்குகளில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. திரைப் படங்கள் தோல்வியடைய இது ஒரு முக்கியமானக் காரணம்.

இவர்களின் இந்த செயல்கள், உலகில் பரவும் ஆட்கொல்லி நோய்களை விட கொடிய  அறிவுக்கொல்லி நோயாக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்துவருகிறது. இந்த நிலை மாற மக்களிடையே ஒரு அறிப் புரட்சி நிகழ்வதைத் தவிர வேறு வழி இல்லை. உலகில் மீண்டும் பெரியாரும், சாக்ரடீசும், பெர்னார்ட் ஷாவும் பிறந்து வந்தால் தான் இத்தைகய புரட்சி நிகழுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

ஊழ்வினையாகிவிட்ட ஊழல்

ஓர் இந்தியக் குடிமகன், தனது நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டுமென்று நினைத்தால், அவனது முதல் கவலை, ஊழல் பற்றியதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ஊழல், நம் நாட்டில் பரவியிருக்கிறது. நம் நாட்டில் மட்டும்தான் இந்த ஊழல் இருக்கிறதா? உலகின் மற்ற நாடுகளில் இதுபோன்ற கேவலமான நிலை இல்லையா என்று பல முறை சிந்தித்ததுண்டு. எனது கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய செய்தியொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

சீனாவில், ஊழல் அதிகரித்திருப்பதாக நாளிதழொன்றில் செய்தி வந்திருந்தது. ஆஹா! படிப்பதற்கே எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. நம்மைப் போல சீனாவிலும், ஊழல் இருக்கிறது. அதுவும், 2003 இல் இருந்து, 13 % ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாம். ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் எண்ணிகையும் உயர்ந்திருக்கிறதாம்.

ஊழல் - உடலுக்குள் உருவாகி, மெல்ல மெல்ல வளர்ந்து, உடலையே செயலிழக்கச் செய்யக்கூடிய புற்று நோய் போல, அரசு இயந்திரத்தில் உள்ளே பரவி, இயக்கைதையே நிறுத்திவிடும் விஷக் கிருமி.

இந்த ஊழல் என்பது பல வகைகளிலும் நடக்கிறது. அந்தந்த இடங்களுக்கேற்ப, அவரவர் தகுதிக்கேற்ப, என்று மாறுபடும். லஞ்சம், அரசு பணத்தில் மோசடி, நிர்வாகத்தில் குளறுபடிகள் என்று ஊழலை விவரித்துக்கொண்டே போகலாம்.இந்த ஊழல் பற்றிப் பேசும்போது, இந்தியன் படத்தில், கமல்ஹாசன் சொல்லும் வசனமொன்று நினைவுக்கு வருகிறது. "வெளிநாட்டிலும் லஞ்சம் இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம், கடமையை மீறத் தான் லஞ்சம். ஆனால் இங்கு கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்ற அவல நிலை" எத்தனை உண்மையான வசனம். இந்தியாவின் நிலையை, ஒரே வரியில் விளக்கிவிடும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.இந்தியாவில், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் என்ற நிலை, பல அரசு அலுவலங்களிலும் இருக்கிறது.

சரி, ஏன் இந்த அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? மனசாட்சிபடி வேலை செய்யமாட்டார்களா? எதற்க்காக ஊழல் செய்கிறார்கள்? இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற விஷயங்களை நன்கு சிந்தித்தால் கிடைக்கும் உண்மைகள் வேதனை தரக் கூடியவை.

இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?

இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது.

இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது  முடித்துக்கொள்கிறோம்.

அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.

இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.

இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே.

நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களை நாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்?

மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது.

அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வாழ்க்கைச் சிற்பிகள்

குரு. தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, நமது வாழ்க்கையை செதுக்குவதில் பெரும் பங்காற்றுபவர். தெய்வத்திற்கும் மேலாக மதிக்கப்படும், உன்னதமான மனித உறவு.

இந்தியாவின் முதல் ஜனாதிபதி, திரு.ராதாகிருஷ்ணனின், பிறந்த நாள், ஆசிரியர் தினமாக, இன்று தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்நாளில், கால் பகுதியில் மட்டுமே நம்முடன் இருக்கும், இந்த ஆசிரியர்கள்தான், நம்  மொத்த வாழ்க்கைக்கான அடித்தளம் அமைப்பவர்கள். இவர்கள் அமைத்துத் தரும் பாதையிலேயே நம் வாழ்க்கைப் பயணம் அமைகிறது. இத்தகைய ஆசிரியர்களின் மேன்மையை நாம் முழுமையாக உணர்ந்திருக்கிறோமா? இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உலகில் மற்ற எந்த தொழிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு, ஆசிரியர் பணிக்கு உண்டு. குருவிடம் பாடம் பயின்ற மாணவன், எத்தனை ஆண்டுகள் கழித்து அவரை சந்தித்தாலும், அடையாளம் கண்டு, தன்னை அறிமுகப் படுத்திகொண்டு உரையாடுவான். பால்ய நண்பர்களை கூட பார்த்தும் பேசாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்களை பல வருடங்கள் கழித்துப் பார்த்தவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தாமல் செல்வதில்லை.

தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, ஒரு குழந்தையை நன்கு அறிந்தவர், ஆசிரியர் மட்டுமே. அப்படிப்பட்ட குருவின் கடமை, அவனுக்கு கல்வி பயிற்றுவிப்பது மட்டும் அல்ல. ஒரு நாளின் பெரும் பகுதியை அவருடனேயே செலவிடும் மாணவனின் திறமைகளை அறிந்து, அவற்றை வெளிக்கொணர வேண்டும். மாணவனே அறியாத, அவனது பல ஆற்றல்களை, அவனுக்கு உணர்த்தி, அதனை மேம்படுத்தவும் உதவ வேண்டும்.

கல்வி போதிப்பதென்றால், பாடங்களை மட்டும் கற்றுத் தருவதல்ல. உயர்ந்த பண்புகளையும், நல்லொழுக்கத்தையும், கற்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களை, அவர்களது தவறுகளுக்காக, தண்டிப்பதை விட, அவற்றை உணர்ந்து, திருத்திக்கொள்ளச் செய்வதே, ஆசிரியரின் பணியாகும். கண்டிப்பும், கருணையும், சரி பாதி கலந்த கலவையாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் தவறு செய்யும்போது, தண்டிக்காமல், அந்த தவறை உணரச் செய்து, அதனை மீண்டும் செய்யாதபடி, நெறிப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு, அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உதவுவதோடு, நற்குணங்களைக் கற்றுத் தர வேண்டும்.

மாணவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய வல்லமை படைத்தவர் ஆசிரியர். புத்தகங்கள் வாசிப்பது, பொது அறிவை வளர்த்துக் கொள்வது, போன்ற பழக்கங்களை, அவர்களிடம் ஏற்படுத்தும் கடமையும் குருவுக்கு உண்டு. சாதனையாளர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துக் கூறி, அதன் மூலம், எதிர் காலத்தில் மாணவர்கள் சந்திக்கவிருக்கும், சோதனைகளை எப்படி வெல்வது என்பதையும் போதிக்கவேண்டும்.

பண்டைய காலங்களில், அரசர்களுக்கு ஆலோசனை சொல்ல, அமைச்சர்களுக்கு இணையாக ராஜ குருக்களும் இருந்திருக்கிறார்கள். பல சமயங்களில், மந்திரிகளை விட, இந்த ராஜகுருக்கள், அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள்.இவர்கள், மன்னனுக்கு, அரசியல் சிக்கல்கள் மட்டுமல்லாது, குடும்ப வாழ்க்கையிலும் ஆலோசனைகள் வழங்கும் வல்லமை படைத்தவர்கள். சந்திர குப்தனை நெறிப்படுத்தி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை  நிறுவியவரும், அர்த்த சாஸ்திரம் எனும், அரசியல் வேதத்தை எழுதியவருமான சாணக்யர், ஒரு ராஜகுரு தான்.

இத்தைகைய மேன்மைகள் நிறைந்த ஆசிரியர் பணியை, இன்று செய்பவர்கள், சரியாக இருக்கிறார்களா?

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது, மதிப்பெண் குறைவாக எடுத்தல், படிப்பில் சரிவர கவனம் செலுத்தாதது, போன்ற சிறிய தவறுகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற வேலியே பயிரை மேயும் செயல்களை செய்வது, வேதனையாக இருக்கிறது.

சுருங்கச் சொன்னால், மாணவன் என்பவன் ஒரு பாறாங்கல் போன்றவன். அந்தக் கல்லில், அழகிய சிற்பம் செதுக்கும் சிற்பி, ஆசிரியர்.இதனை உணர்ந்துகொண்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும்.

நண்பனே நண்பனே

மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில், நண்பனை சேர்க்காமல் விட்டுவிட்டார்கள் என்று ரஜினிகாந்த், தனது சமீபத்திய படத்தில் ஒரு காட்சியில் சொல்லியிருப்பார். நட்பு என்பது அத்தனை முக்கியமானதா? ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும், கல்வி கற்ப்பித்த குருவுக்கும், படைத்த கடவுளுக்கும் இணையாக சொல்வதற்கு? இதனை எண்ணிப் பார்க்கும்போதுதான் நட்பின் முழு மதிப்பையும் உணர முடிந்தது.

தாய், தந்தை, உடன் பிறந்தோர் என்பது ரத்தத்தால் வந்த சொந்தங்கள். மனைவி என்பவள், நம்மோடு கலந்துவிடும் பந்தம். ஆனால், நண்பன் என்பவன், எந்த ரத்த சம்பந்தமும் இல்லாமல், நம் உயிரோடு கலந்து, வாழ்க்கையில் நமக்கு இணையாக பயணிப்பவன்.

நம்மிடம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல், நமது முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய், நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, நமது சுக துக்கங்களில் பங்கெடுத்து, ஆதரித்துச் செல்லும், உன்னதமான உறவு, நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

நட்பின் மேன்மையை, வள்ளுவர் எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார். ஆடை விலகினால், கை எப்படி தன்னிச்சையாக அதனை சரி செய்ய விளையுமோ, அப்படி தன் நண்பனுக்கு ஓர் துன்பம் வரும்போது, ஓடோடி வந்து உதவுவதுதான் நட்பு என்று, இந்த அருமையான உறவின் அர்த்தத்தை, இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்.

தாய் தந்தையிடமும், மனைவியிடமும் சொல்ல முடியாத பல விஷயங்களை, உண்மையான நண்பர்களிடம் மட்டுமே சொல்ல முடியும். நம்முடைய அந்தரங்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளக் கூடிய ஒரே பந்தம், நட்பு.

இந்த நண்பர்கள், நமக்கு மகிழ்ச்சியிலும், சோகத்திலும் கலந்துகொள்ளும் பங்காளிகளாக மட்டுமல்ல, சமயத்தில், நம்மை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும், வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.ஆனால், அத்தனை நண்பர்களும் அப்படி இருக்கிறார்களா? சிந்தித்துப் பார்த்தபோது, இந்த நண்பர்களின் வகைகளை உணர்ந்துகொள்ள முடிந்தது.

நண்பர்களை, மூன்று வகையாக பிரிக்கலாம்.

சில நண்பர்கள், நம்முடன், உறவாடி, நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களில் நம்முடன் இருந்து, நடப்பை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இவர்கள், நமக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது, விலகிச் சென்றுவிடுகின்றனர்.இத்தகையவர்களை நண்பர்கள் என்றே கூற முடியாது. நட்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்.

இன்னும் சில நண்பர்கள், நம் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டு, கஷ்டம் வரும்போது, நமக்கு ஆலோசனை சொல்வார்கள். ஆனால், நாம் அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தினால், நம்மை விட்டு அகன்றுவிடுகின்றனர். நண்பனாக, அறிவுரை சொல்ல வேண்டிய கடமையைச் செய்துவிட்டதாகவும், அதனை நாம் அலட்சியப் படுத்திவிட்டதாகவும், துன்பங்களை நாம் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று, பிரிந்துவிடுகின்றனர்.

வேறு சிலர், நாம் தவறு செய்யும்போது, நம்மை தடுப்பதற்கு பதில், நம்மை தவறு செய்ய தூண்டிவிட்டு, அதன் பலனை அனுபவிக்கும்போது, நம்மை தனியாகவிட்டுவிடுவர்.

ஆனால் உண்மையான நண்பன் என்பவன், நாம் அவனது வார்த்தைகளை  அலட்ச்சியப்படுத்தினாலும், நம்மைவிட்டு விலகாமல், நாம் தவறு செய்தாலும் நம்முடனேயே இருந்து, நம்மை திருத்த முயற்ச்சிக்கிறான். அந்தத் தவறுக்கான பலனை அனுபவிக்க நேர்ந்தாலும், நம்முடன் அதையும் பகிர்ந்துகொள்வான்.

ஆபத்தில் உதவுபவன் மட்டுமல்ல உண்மையான நண்பன், அந்த ஆபத்தை நம்முடன் சேர்ந்து எதிர்கொள்பவனே சிறந்த நண்பன்.

நம்முடைய திறமைகளை, மற்றவரைவிட, நன்கு அறிந்து வெளிக்கொண்டு வரக் கூடியவர்கள் நண்பர்கள் மட்டுமே.

இன்றைய காலகட்டத்தில், ஒன்றாக சேர்ந்து மது அருந்தவும், காதலில் பிரச்னை எழும்போது, பெற்றோரை எதிர்த்து, காதலர்களை சேர்த்துவைப்பதுமே நண்பர்களின், தலையாய பணியாக இருக்கிறது.இது சரியான நட்பல்ல. பள்ளியிலும், கல்லூரியிலும், நண்பனோடு செலவிடும் நேரங்களில், அவனது, திறமைகளையும், ஈடுபாடுகளையும்  அறிந்து, அதனை வெளிக்கொணர முயற்ச்சி செய்ய வேண்டும்.

புத்தகங்கள் வாசிப்பது, நல்ல சினிமாக்களைப் பார்ப்பது, தொலைக்காட்சியில் வரும், அறிவியல், பொது அறிவு, ஆக்கப்பூர்வ விவாத நிகழ்சிகள் போன்ற நல்ல பல விஷயங்களை, நண்பனுக்கு அறிமுகம் செய்து, அவனது உலகத்தை விரிவடையச் செய்வது, நண்பனின் கடமையே.

திருமணத்திற்குப் பிறகு, நண்பனை விட்டு நாகரீகமாக விலகினாலும், அவனது குடும்ப வாழ்க்கையில், பிரச்னைகள் வரும்போது, ஓடிவந்து தீர்த்துவைக்க வேண்டும்.

இத்தகைய பண்புகளை வைத்தே சிறந்த நண்பனை நாம் இனம் கண்டுகொள்ள முடியும். இத்தகைய குணம் அற்றவர்களை, நாம் விலக்கி வைப்பதே சிறந்தது.

மொத்தத்தில் நண்பன் என்பவன், நம் மீது அன்பைப் பொழியும்போது அன்னையாகவும், நாம் தவறு செய்யும்போது, நெறிப்படுத்தும் தந்தையாகவும், பல நல்ல விஷயங்களைக் கற்றுத் தரும்போது குருவாகவும், ஆபத்தில் உதவும்போது தெய்வமாகவும் இருக்க வேண்டும்.

மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் நண்பன் சேர்க்கப்படவில்லையே என்ற ஆதங்கத்திற்க்கான அர்த்தம், எனக்கு இப்போது விளங்குகிறது. இந்த நான்கு உறவுகளின், மொத்த உருவமாக விளங்கும், நண்பன், கண்டிப்பாக நாம் வாழ்வில் சம்பாதிக்கும் மதிப்பில்லாத சொத்தாக அமையும்.அதனால், சிறந்த நண்பர்களை தேர்வு செய்வதில் நாம் எச்சரிக்கையாகவே செயல்பட வேண்டும்.

சிறந்த நண்பர்கள் மட்டும் அமைந்துவிட்டால், வாழ்வில் புதிய உயரங்களைத் தொடலாம்.

நண்பனொருவன் வந்தபிறகு,
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு,
வானுக்கும் எல்லையுண்டு
நட்புக்கில்லையே .

திருமணமுறிவு சிகிச்சை பிரிவு

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். ஆனால் அந்த திருமணங்களின் எதிர்காலம், இன்று நீதிமன்றங்களில்தான் நிச்சயிக்கப்படுகிறது. திருமணமான வெகு சில வருடங்களிலே, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால், அந்த உறவையே முறித்துக்கொள்கின்றனர். காமத்துப்பால், காமசூத்ரம் எனும் காதல் வேதங்களை உலகுக்கு வழங்கிய நம் நாட்டில், ஒருவனுக்கு ஒருத்தி என்று, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நமது நாட்டில் ஏன் இப்படியொரு நிலை உருவானது? அதிலும், காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, செய்துகொள்ளும் திருமணங்களும், சீக்கிரமே உடைந்துவிடுகிறதே, என்ன காரணம்?

இன்று விவாகரத்துக்காக தொடரப்படும் வழக்குகளில் பல, காதல் திருமணங்கள்தான். நம் நாட்டில், காதலிப்பவர்களில், 25 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே, காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்கிறார்கள். இதிலும், பெரும்பான்மையினர், பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்பவர்கள். இப்படி இணைந்தவர்கள்தான், அதிகமாக விவாகரத்து கோருகிறார்கள். இதற்க்கான காரணங்கள் என்று பார்த்தால், முக்கியமானது, இவர்களுக்கு, திருமணமான சில மாதங்களிலேயே, காதல் கசந்துவிடுகிறது என்று சொல்வார்கள். ஆனால், இதனை ஆராய்ந்துப் பார்த்தால், சரியான புரிந்துகொள்ளல் இல்லாததே காரணமாக இருக்கும். அதாவது, காதலித்தபோது இருந்த நிலைக்கும், திருமணத்திற்கு, பின் நடந்துகொள்ளும், விதமும் மாறுபடுவதை, தவறாக புரிந்துகொள்கின்றனர். இதனால், ஒரு சிறு மாற்றமோ, தவறோ கூட பெரிதாக தெரிகிறது.

மற்றொரு முக்கிய  காரணம், இவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, தீர்த்து வைப்பதற்கு ஆள் இல்லாதது. பெற்றவர்களை எதிர்த்து, நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, அதற்குப் பின் வரும் பிரச்னைகளில், ஆலோசனை வழங்கவோ, சமரசம் செய்து வைக்கவோ யாரும் இருப்பதில்லை. அதாவது, நண்பர்கள் முயர்ச்சி எடுத்தாலும், இவர்கள் ஏற்றுகொள்வதில்லை. அதனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பெரிதாகி, விவாகரத்து வரை சென்றுவிடுகின்றன.

திருமணமான சில காலத்திலேயே பிரச்னை வருவது, சகஜம்தான். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும், இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால், அங்கே பெற்றவர்களும், பெரியவர்களும் தலையிட்டு, அதனை தீர்த்து வைத்துவிடுவர். ஆனால், இன்று, பெற்றவர்கள் சொல்வதை  ஏற்றுக் கொள்ளாமல், பிடிவாதமாக இருந்து, பிரிந்துவிடுகின்ற தம்பதிகள் அநேகம் பேர். இத்தகைய சம்பவங்கள் நடக்கக் காரணம், தம்பதிகளிடையே இருக்கும் அகம்பாவமும், பிடிவாதமும்தான்.

இன்று பல குடும்பங்களிலும், கணவன், மனைவி இருவரும், வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகள் வீட்டிலும் எதிரொலிக்கின்றன. மேலும், இருவரும் சம்பாதிப்பதால், ஒருவித கர்வம் ஏற்பட்டுவிடுகிறது. பெண்ணுக்கு,சாதாரண பிரச்னைகள் எழும்போது கூட, நான் சுயமாக சம்பாதிக்கிறேன், எதற்கு கணவரை எதிர்பார்த்து, அவர் சொல்வதைக் கேட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆண்களுக்கு, தான் சொல்வதை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறாலே என்ற கோபமும், சம்பாதிக்கிறாளே, என்ற பொறாமையும், எங்கே தன்னை விட அதிகம்  சம்பாதிக்கத் தொடங்கிவிடுவாலோ என்ற பயமும் ஏற்படுகிறது.

பெரும்பாலும் முற்றிய பிறகே, பெற்றோருக்கு இந்த பிரச்னைகள் தெரிய வருகின்றன. அதன் பிறகு அவர்களின் சமாதானமும், சமரச முயற்ச்சிகளும் எடுபடுவதில்லை. இதற்க்குக் காரணம், இன்று பிள்ளைகள், தந்தையை விட தாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம், அவர்களை விட தங்களுக்கு, அதிகம் தெரியும், என்ற எண்ணத்தில், அவர்களது, கருத்துக்களை மதிப்பதில்லை. இதனால், இவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோற்று, தம்பதிகள், விவாகரத்து கேட்டு, நீதிமன்றம் செல்கின்றனர்.

இன்னும் சில குடும்பங்களில், பெற்றவர்களே பிள்ளைகளுக்குத் தவறான வழியைக் காட்டிவிடுகின்றனர். இவர்களுக்குள் எழும் பிரச்னைகளும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பும், பிள்ளைகளுக்கு,  திருமணத்தைப் பற்றியும் கணவன் மனைவி உறவைப் பற்றியும், தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சில வசதியான குடும்பங்களில், பெற்றவர்களே, பிரித்து வைத்துவிடுகின்றனர். அதாவது, கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் எழும்போது, இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கிவிடுகின்றனர். ஒரு தந்தை, தன் மகளிடம், மாப்பிள்ளை குடும்பத்தைவிட, நாம் எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை, அதனால், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய  அவசியமில்லை என்றும், மாப்பிள்ளையின் பெற்றோர், அவர்களுக்கு வேண்டுமென்றால், இறங்கி வந்து பேசட்டும் என்று தன் மகனிடமும், தவறான அணுகுமுறையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் என்ன?

நான், திருமணம் செய்துகொள்ளும் என் நண்பர்களுக்கு, ஒரே ஒரு அறிவுரை சொல்வதுண்டு. கணவனிடம், நீ எவ்வளவுதான் சம்பாதித்து, அவளை மாளிகை போன்ற வீட்டில் தங்க வைத்தாலும், நீ அவளுடன் செலவிடும் நேரத்திற்கு இணையாகாது. அதனால், என்ன வேலை இருந்தாலும், வாரத்தில் இரண்டு நாட்களோ, அல்லது ஒரு நாளோ, முழுதும் அவளுக்காக ஒதுக்கிவிடு என்று சொல்வேன்

மணமகளிடம், திருமணம் முடிந்து சில காலத்தில் அவன் உன்னுடன் அதிகம் நேரம் செலவிட முடியாமல் போனாலோ, உன்னை விட்டு விலகிப் போவது போல் தோன்றினாலோ, அப்போது இதனை நினைவில் கொள். உன் கணவன் செய்யும் காரியங்கள் எல்லாம் உனக்காகவும் உன் எதிர்காலத்திர்க்காகவும்தான். அவன் சம்பாதிப்பது உன்னை வசதியாக வாழவைக்கத் தான். இதனை புரிந்துகொண்டு, அவனை அரவணைத்துக்கொள்.

இந்த விஷயங்களைப் பெற்றவர்கள், தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வரும்போது புரியவைத்தால், விவாகரத்து கேட்டு யாரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள்.

அதிகார அழிவுகள்

"உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?"

"நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது"

கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனும், புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர். அவர்களும் பாடும் பழைய பாடல் இது.

இதன்படி, உலகத்திலே பயங்கரமான போதை வஸ்து எது? என்று கேட்டல், அதிகாரம் என்று சொல்லலாம்.

போதை வஸ்துக்கள் அனைத்தும், மனிதனுக்கு அறிமுகமாகி, அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கி, பின் மெல்ல மெல்ல அவனை ஆட்சி செய்யத் தொடங்கிவிடும்.கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அழித்துவிடும்

அது போல, அதிகாரம் என்றவொன்று கையில் கிடைத்தவுடன், மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். தனக்கு கீழ்ப்படியவும், தனது கட்டளைகளை ஏற்று நடக்கவும் உலகமே காத்திருக்கிறது என்ற எண்ணத்தில், அவர்களை ஆட்டிப் படைக்க நினைக்கிறான். அதுவே அவனது அழிவுக்கு வழிவகுத்துவிடுகிறது.

ஆசையே மனிதனின் எதிரி, என்று புத்தர் சொன்னார். அப்படிப் பார்த்தால், மனிதனுக்கு, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, இவைதான் முதன்மையான, கேடுவிளைவிக்கக் கூடிய ஆசைகள். இதில் அதிகாரம் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா? இந்த அதிகாரம் இவை மூன்றுக்கும் மேலாக இருக்கிறது. எப்படி என்றால், அதிகாரம் இருந்தால், இந்த மூன்றையும் அடையலாம் என்பது மனிதனின் எண்ணம்.

இதுவே இன்றைய அரசியல்வதிகளுக்கும் பொருந்தும். அதிகாரம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில், செயல்படுகிறார்கள்..எதேச்சாதிகாரம், சர்வாதிகாரம் என்று எதிர்க் கட்சிகள், ஆளுங்கட்சியைப் எதிர்த்து குரல் எழுப்புவதெல்லாம் இந்த அதிகார   துஷ்ப்ரயோகத்தால்தான்.

"தத்துவஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்" என்றார் கிரேக்க அறிஞர் பிளாடோ.தத்துவ ஞானிகள் என்பவர்கள், இந்த அதிகாரத்தின் தத்துவத்தை உணர்ந்தவர்கள். அந்த போதைக்கு அடிமையாகாமல், சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்பதுதான் இதன் கருத்து.

ஒரு மனிதன், தனக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களிடம் எப்படி மரியாதை செலுத்துகிறான், என்பதை வைத்து அறியப்படுவதில்லை. அவனுக்கு கீழே உள்ளவர்களை எப்படி மதிக்கிறான் என்பதை வைத்தே, அறியப்படுகிறான். அவனது குணம் வெளிப்படுகிறது. அதிகாரத்தில் உள்ள சிலர், தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், மக்களையும், அடிமைகளாக கருதுகின்றனர்.

அண்மையில் ஒரு அமைச்சர், "நான் ஒரு I. A. S. அதிகாரியாகியிருந்தால், கார் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டிருந்திருப்பேன்" என்று கூறியிருந்தது, அவர்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கிறது எண்ணத்தில்தான்.இந்த எண்ணத்தால், அவர்களின் படிப்பையும், தகுதியையும் மதிப்பதில்லை.

இந்த சர்வாதிகாரிகள், தங்களின் அழிவை தாங்களே தேடிக்கொள்கின்றனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டத்திலிருந்தே, இவர்களை அழிக்கும் சக்தி புறப்படுகிறது. இது வரலாற்றில் பல முறை நிரூபணமாகியுள்ளது. ரஷ்யப் புரட்சியும், பிரெஞ்சுப் புரட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

நமது புரானங்களிலும் இந்த கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.கம்சனும், மகிஷனும், நரகாசுரனும், தங்களது செயல்களாலேயே அழிவைத் தேடிக்கொண்டனர். இவர்களின் மூலம் மக்களுக்கு அதிகாரத்தின் தன்மையை உணர்த்தவே, இந்த புராணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

சர்வாதிகாரமும், அதிகார துஷ்ப்ரயோகமும் அரசியலிலும், ஆட்சி செய்பவர்களிடம் மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கிறது. வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள், தங்களின் சக்திக்கு ஏற்ப அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது, சில காவல் துறை அதிகாரிகள், தங்களுக்கு கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்களை, தங்களின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்வது, அலுவலகத்தில் மேலதிகாரிகள், கீழ்மட்ட ஊழியர்களை அடிமைபோல் நடத்துவது என்று அனைத்து மட்டங்களிலும் இந்த அதிகார போதை பரவியுள்ளது.

நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியும், கறுப்பின மக்களின் விடிவேல்லியகத் திகழும் நெல்சன் மண்டேலாவும், அவர்களுக்கிருந்த அதிகாரத்தை உபயோகித்து இந்த உலகையே ஆண்டிருக்கலாம். ஆனால் காந்தி, அவருக்கு அளிக்கப்பட தல்வைவர் பதவியை மறுத்துவிட்டார். மண்டேலா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொளும்படி தேசமே கேட்டுக்கொண்டபோதும், மறுத்து வேறொருவருக்கு வழிவிட்டு விலகினார். அதிகாரத்தின் தனமையை அறிந்ததாலும், மக்களுக்கு சேவை செய்ய, அதிகாரம் தேவையில்லை என்பதை உணர்ந்ததாலுமே இவர்கள் இன்றும் சிறந்த தலைவர்களாக மனிதர்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதிகாரம் என்பது, மக்களை நெறிப்படுத்தி, சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதற்காகவே வழங்கப்படுகிறது. அவர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்ய அல்ல.
இப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களின் அழிவுக்கு வழிவகுதுக்கொள்ளும், எத்தனையோ பேரை சமகால வரலாற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எண்டும் கூற்றை மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்துபவர்கள் இவர்களே.சர்வாதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்தே, அவர்களுக்கான் அழிவுசக்தி பிறக்கிறது.தாங்கள் செயல்களாலேயே எதிரிகளை உருவாக்கி, தங்களை அழிக்கும் ஆய்தத்தையும், இந்த சர்வாதிகரிகளே கொடுத்துவிடுகின்றனர். ஹிட்லர், ரஷ்ய ஜார் மன்னர்கள், போன்றவர்கள் இதற்க்கு சிறந்த உதாரணங்கள்.

ஆட்சியாளர்கள், தங்களுக்கு வழங்கபப்ட்டிருகும் அதிகாரத்தை, ஆக்க சக்தியாக மட்டுமே பயன்படுத்தி, மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே அதனை உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால், இன்றில்லை என்றாலும் விரைவில், அவர்ளது செயல்களுக்கு மக்கள் மத்திய்லிருந்து, எதிர்ப்பும், புரட்சியும் கிளம்பி இவர்களை அழித்துவிடும். மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாத அமைப்புகள் தோன்றி, மக்களையும், ஆட்சியாளர்களையுமே அழித்துவிடும்.இதனை உணர்ந்துகொண்டு இன்றைய அரசியல்வாதிகள் செயல்படவேண்டும் 

மாப்பிள்ளை வேட்டை

முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார்.

இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.


சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?
சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது.

பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள்.

பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர்.

இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர்.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது.

முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.

பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற  சம்பளமும், பெண்ணைப்  பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.

அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.

இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர்.

மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?

தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.

டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.

வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.

இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை  அதிகம் விரும்புகின்றனர்.

இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் எஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.

இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?

வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?

இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?

அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.

ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது.அவனது  திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.

திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.

குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.

மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

அதுவே அவர்கள் ஆசையாக வளர்த்த மகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறப்பான வாழ்க்கையாக அமையும்.

அன்பின் முகவரி

அன்னை தெரசாவின் பிறந்த நாள் விழா சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அன்பையும் கருணையையும் மட்டுமே பரப்பிய அந்த உன்னதமான அன்னையை உலகமே நினைவுகூர்ந்தது. ஆனால், இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களில், வருத்தம் தரக்கூடிய சில சம்பவங்களும் நடப்பதுண்டு. அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவது குறிந்து எழுந்துள்ள சர்ச்சைகளே, இந்த இடத்தில வருத்தமான விஷயங்களாக உள்ளன.

புனிதர் பட்டமென்பது, இறந்த ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதற்கான அடையாளம். இந்தப் புனிதர் பட்டத்தை அளிக்கும் அதிகாரம், ரோமன் திருச்சபை வசம் உள்ளது. இந்தப் புனிதர் நிலையை அடைய, மூன்று நிலைகளில் தேர்வு பெற வேண்டும்.

அதாவது, ஒருவர் முதலில், இறைப் பணியாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, அவர், வணக்கதிற்க்குரிய்வராக அறிவிக்கப் பட வேண்டும்.

மூன்றாவது நிலையாக, அருளாளர் நிலை.


இந்த நிலைகளைத் தன் சேவைகளால் கடந்த அன்னை, அவரது, மறைவுக்குப் பின், புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான, முக்திப் பேரு நிலையை அடைந்துவிட்டரா? அதாவது, ஏதாவது அற்புதங்கள் செய்திருக்கிறாரா, என்பது தான் இப்போது கேட்கப்படும் கேள்வி.

19 . 10 . 2003 . இல், அன்னை அருளாளர் பட்டத்தை அடைய, எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்து, அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இதன் பிறகு, புனிதர் பட்டம் கொடுப்பதுதான் சரியென்று, அன்னையை அறிந்தவர்களும், அவரை நேசித்தவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

முன்பே கூறியதுபோல், அருளாளர் பட்டம் பெற ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி, மோனிக்கா பெஸ்ரா என்ற இந்திய கிறிஸ்த்தவப் பெண்ணின், வயிற்றில் இருந்த கட்டி, அன்னை தெரேச உருவம் பதிக்கப் பட்ட சங்கிலியை அணிந்ததும், பூரண குணமாகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனையே அற்புதமாக அங்கீகரிக்கலாம், என்று அன்னையின் அபிமானிகள் சொல்கிறார்கள். அன்னையின் உருவத்தில் இருந்து புறப்பட்ட ஒளி வெள்ளம், புற்றுநோய்  கட்டியை குணப்படுத்தியதாக மோனிக்கா பெஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அன்னைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, பத்திரிக்கையாளர் ஒருவர், "தெரசாவின் நோக்கம், மக்களுக்கு உதவி செய்வதல்ல. நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துகிறேன் என்று பொய் சொல்லி நன்கொடைகளைப் பெற்றவர். அவர் ஏழ்மையைப் போக்க உழைக்கவில்லை, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே குறியாக இருந்தார்" என்று அவதூறு கூறி இருக்கிறார்.

ஆனாலும் திருச்சபை, "பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி மறைந்ததை, அன்னையின் அற்புதமாக அங்கீகரித்து, அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது உண்மை. ஆனால், அவர் புனிதர் பட்டம் பெற இன்னுமோர் அதிசயம் நிகழ வேண்டும்" என்று அறிவித்துள்ளது.

இந்தச் செய்திகளைப் படிக்கும்போது, எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அன்னை வாழ்ந்த காலத்தில், அவர் செய்த சேவைகளும், காட்டிய அன்பும் அனைவரும் அறிந்ததே. இந்த உலகத்தில் அவர் பரப்பியது மனித நேயம் மட்டுமே. இதனை உலகமே உணர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது, ஒருவர் அன்னையைப் பற்றி அவதூறு கூறுவது, வேதனையாக உள்ளது.

அடுத்ததாக, அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றி நடந்து வரும் விவாதங்கள். அன்னையின் தூய்மையான அன்பை, அறிந்த உலகமே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் கிறித்துவ திருச்சபையின் விதிகள் அதனைத் தடுக்கிறது எனும்போது, வருத்தம்தான்.

ஆனால் அன்னை தெரசா, புனிதர் பட்டத்தை விட உயர்ந்த பட்டத்தை அவர் வாழ்நாளிலேயே பெற்று விட்டார்.

ஆம். கிட்டத்தட்ட அவரது பெயராகவே மாறிவிட்ட "அன்னை" என்ற பட்டம், புனிதர் பட்டத்தை விட மேலானதல்லவா?

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லப் பட்டதில், முதன்மை நிலையாக இருப்பது, மாதா எனும் அன்னை தான். ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளிடம் கருணை காடுவாலோ, அப்படி இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் பாரபட்சமின்றி அவர் அன்பு செலுத்தியதால், உலகமே அவரை அன்னையென்று அழைக்கிறது. அவரது அப்பழுக்கற்ற தூய்மையான அன்புக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரம் இது.

இதனை விட மேலான நிலையாக புனிதர் பட்டதை நான் கருதவில்லை. அப்படியே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதென்றாலும், இந்த மாசற்ற அன்னையென்ற அங்கீகாரம் ஒன்றே போதுமே. அவர் உலக மக்களிடம் செலுத்திய அன்பு அதற்கு சாட்சியாக இருக்குமே?

இன்று உலகில், தன்னலமற்ற, உண்மையான, சேவை செய்பவர்களும், கருணை, அன்பு செலுத்தி மனித நேயத்தைப் பரப்புபவர்களும் வெகு சிலரே. அத்தைகைய அன்னை தெரசாவை நிச்சயம் உலகம் அங்கீகரிக்க வேண்டும்.

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U