புகழின் மறுபக்கம்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று பெருமளவு சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையுமே சார்ந்து இருக்கின்றன. நேர்மரையானதகாவோ எதிர்மரையானதாகவோ எந்தவொரு பரபரப்பான செய்தியும் திரைத்துறைப் பிரபலங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் முக்கியமானவொன்று, சினிமா ஹீரோக்களின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைப் பற்றியது.

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று, மலையாள நடிகர்களைப் பற்றியது. தமிழ் இலக்கியவாதி ஒருவர் தனது கேரளப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபத்தை ஒரு வார இதழில் கூறியிருந்தார்.

கேரளத்தின் சூப்பர் ஸ்டார்  என்று போற்றப்படும் மம்மூட்டியின் எளிமையைப் பற்றியும், அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மக்களின் அணுகுமுறைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். அதோடு தமிழ்நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதாக எழுதியிருந்தார்.

நானும் எண்ணிப்பார்க்கிறேன். அண்டை மாநிலமான கேரளத்திற்கும் நமக்கும் ஏன் இந்த வித்தியாசம்? சினிமாப் பிரபலங்கள் மீதான பார்வையில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்ன?

முதலில் எனக்குத் தோன்றியது, கேரளத்தில் நிலவும் கல்வியறிவு. இந்தியாவிலேயே, அதிகமான கல்வியறிவு உடைய மக்களைக் கொண்ட மாநிலம். இதனால் மக்களிடம், வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் தெளிவாகக் காணக்கூடிய பக்குவம் இருக்கிறது. திரைப்பட ஹீரோக்களைப் பற்றியும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களும் மண்ணில் தோன்றியவர்கள்தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.அவர்களை ஒரு வித பிரமிம்மூபோடு பார்ப்பதில்லை. தங்களைப் போன்ற ஒரு மனிதராகவே பார்க்கிறார்கள். இதனால், பொது இடங்களில் இந்த நாயகர்களைப் பார்க்கும்போது எந்தவித சலசலப்பும் ஏற்படுவதில்லை.

இந்த ஒன்று தான் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். இங்கு சினிமா ஹீரோக்களை தெய்வமாக பார்ப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்போது அநேகம் பேர் என்று சொல்வது சற்று ஆறுதல்தான். முப்பது நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய கால கட்டத்தில், திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றுபவன் விண்ணுலக தேவனைப் போலவும், திரையில் கெட்டவர்களாகத் தோன்றும் வில்லன்களை, நிஜத்திலும் கொடூர அரக்கனைப் போலவும் நினைத்தவர்கள் நம் மக்கள். திரையில் தோன்றும் பிம்பங்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததனால் ஏற்படும் குழப்பம் இது.

இப்படி பொது மக்களிடம் தமக்கு ஏற்பட்டுள்ள மதிப்பை எத்தனை நாயகர்கள் உணர்ந்து, அதற்க்கேற்ப்ப செயல் பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே தேறுவர். திரையில் ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவரது இயற்கை குணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு படத்தில் மதுவை வெறுப்பவனாக நடிக்கும் நாயகன், நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது அவருடைய தனிப்பட விருப்பம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால், மக்கள் தன்னை மதிக்கிறார்கள் என்று உணர்ந்து, உண்மையிலேயே குடிப் பழக்கத்தை நிறுத்துபவர்கள், நிஜ நாயகர்களாக உருவாகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மிகவும் குறைவானவர்களே.

சினிமா ஹீரோக்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடாத ஊடங்ககளே கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கார் உபயோகிக்கிறார்கள், கல்யாண மண்டபங்கள், பண்ணை வீடுகள் முதலிய சொத்துகள் என்ன வைத்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பாமர மக்களையும் சென்று சேர்கின்றன. ஆனால் இந்த ஆடம்பர தோற்றத்துக்குப் பின் இந்த நட்சத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையை அந்த மக்கள் அறிவதில்லை.

இன்றைய தேதியில், தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொகையை சம்பளமாகப் பெருமளவிற்கு, அவருக்கு இருக்கும் அவசியங்கள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாயகனின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், அவனது வாழ்கை முறையைப் பற்றி நாம் அறிவதில்லை.

மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு ஹீரோ, ஒரு பொது இடத்தில் தோன்றினால், அங்கு என்ன களேபரம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். அவரைப் பார்க்கவும், அவருடன் கை குலுக்கி, கையெழுத்து பெறவும் முண்டியடித்துக்கொண்டு ஒரு சிறு பிரளயத்தையே உண்டாக்கிவிடுவார்கள் மக்கள். இப்படி இருக்கும்போது, ஒரு நாயகன் சாமான்யனைப் போல சாதாரண உணவு விடுதியில் சென்று தன் குடும்பத்தோடு உணவருந்த முடியாது. அவர்களது தனிமையையும் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய, ஒரு நட்சத்திர உணவகத்திக்கே அவர்கள் செல்ல முடியும்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, சாதரணக் கார்களில் பயணம் செய்தால் என்ன ஆகும்? பணத்தையெல்லாம் இழந்துவிட்டார். கடன் தொல்லையில் இருக்கிறார்.அவருக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது. அவரது புதிய படம் வெற்றிபெறாது . அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். போன்ற வதந்திகள் அவருக்கு எதிராக பரப்பப்படும். அதனால், தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், ஒரு ஆடம்பர சொகுசுக் காரை, அந்த ஹீரோ பயன்படுத்த வேண்டிய நிலை.

இதையெல்லாம் விட, ஒரு சினிமா நட்சத்திரமாக இருக்கக் கூடிய ஒருவர் இழக்கும் முக்கியமான விஷயம், தனிமை. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட முடியாத ஒரு பரிதாபத்திற்க்குரிய மனிதர். ஒரு சாமாநியனைப் போல தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல இயலாது.


நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்தில் கூறுவார். "ஓவர்நைட் ஸ்டார் என்பது தங்கக் கூண்டு போன்றது" என்று. ஆம். இந்த நடிகர்களின் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். தங்கக் கம்பிகளால் பூட்டப்பட்ட சிறையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து, புகழின் உச்சிக்குச் செல்ல, இவர்கள் கொடுத்த விலை, தங்களின் தனிமையும் சுதந்திரமும். இந்த நாயகர்கள் அடைந்திருக்கும் புகழின் மறுபக்கம் இதுதான்.

தங்கத்தில் செய்திருந்தாலும் சிறை சிறைதான். இதனை உணர்ந்தவர்கள், ஆடம்பர வாழ்கையை வெறுக்கத் துவங்கிவிடுகின்றனர். ஆனால், இந்த சிறையினை கௌரவமாகக் கருதுபவர்கள், அறியாமையில் உழன்று, வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள.

கேரளத்தில் மக்கள் சினிமா நட்சத்திரங்களை சக மனிதர்களாகவே பார்க்கிறார்கள். அதனால், இந்த நாயகர்களும், எளிமையான வாழ்கையை வாழ முடிகிறது. தமிழக மக்களும் விரைவில் இதனை உணர்ந்துகொள்வார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U