வாழ்வின் ஒளி

ஜென் குரு ஒருவர், சீடர்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார்.

"பிறப்பைப் பொறுத்தவரை, எல்லா உயிர்களும் சமமே. பசி, தூக்கம், தாகம், மரண பயம் இவை எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. ஒரு நாள் என்பது, இரவும் பகலும் சேர்ந்ததுதான். இரண்டும் மாறிவருவதுதான், கால ஓட்டம்.அதுபோலவே, வாழ்க்கை என்பது, இன்பம் தும்பம், பிறப்பு, இறப்பு இரண்டும் சேர்ந்ததே."

சீடர்கள் குருவின் உபதேசங்களை கூர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"இரவு வருகிறது, மெல்ல அது கலைந்து, பொழுது புலர்கிறது.அந்தச் சமயத்தில், எந்தவொரு நொடியில் பொழுது புலர்ந்துவிட்டது என்பதை நீ அறிவாய்? குரு சீடர்களை நோக்கிக் கேட்டார்.

"ஒரு மிருகம் தொலைவில் நிற்கும்போதே, அது கழுதையா? குதிரையா? என்று காண முடிந்தால், வெளிச்சம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம்." என்றான் ஒரு சீடன்.

குரு, மறுத்து தலையசைத்தார்.

"தூரத்திலிருக்கும் ஒரு மரம், ஆல மரமா? அரச மரமா? என்று சொல்லமுடியுமானால், அந்த நேரம் வெளிச்சம் வந்துவிட்டது என்று அறியலாம்" என்றான் மற்றொரு சீடன்.

அதையும் மறுத்தார் குரு.

சீடர்கள் குருவையே விளக்கம் தருமாறு வேண்டினர்.

"எந்தவொரு மனிதனைக் கண்டாலும், இவன் என் சகோதரன், எந்தவொரு பெண்ணைக் கண்டாலும், இவள் என் சகோதரி என்ற எண்ணம் உனக்கு ஏற்படுகிறதோ, அப்போதே உனக்கு வெளிச்சம் கிடைத்ததாக அர்த்தம். அதுவரை, உச்சி வெயில் கூட காரிருளே." என்று விளக்கினார் குரு.

இது தான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

 பிறப்பில்லா முக்தியை அடைய முதல் தகுதியே, சக மனிதனை, சகோதரத்துவத்துடன், பார்ப்பதுதான்.

உலகிலுள்ள அத்தனை மனிதர்களையும், சகோதர சகோதரிகளாக பார்த்தல், வெறுப்பையும், துவேஷத்தையும், ஒழித்து அன்பை மலரச் செய்யும்.

அனைத்து உயிரக்ளிடத்தும், அன்பு காட்டுங்கள் என்பதுதான், அனைத்து மதங்களும், போதிக்கும், விஷயம்.

இறைவனைத் தேடி அலைகிறேன், இறைவனுக்காக செய்கிறேன் என்று சொல்பவர்களெல்லாம், அந்த இறைவன், தங்களுக்குள்ளேயே இருக்கிறன் என்பதை உணர்வதில்லை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைகிறார்கள்.

சக மனிதரிடம் அன்பு செலுத்தாதவர்களுக்கு, இரவும் பகலும், வெறும் கால மாற்றகளாகவே இருக்கும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஆன வாழ்க்கையை அவர்கள் உணர்வதில்லை. இவர்கள் அனைவரும் இருளிலேயே வாழ்வைக் கழிக்கின்றனர். ஒளி என்பது நமக்குள்ளே ஏற்பட வேண்டும். அது ஏற்படும்போதுதான், நம் மனிதர்களாவோம். அதுவரை, மற்ற விலங்கினங்களுக்கும்  நமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

2 கருத்துரைகள்:


நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்



அருமையான பார்வை.இதை தொடருங்கள்.இது போன்ற பதிவுகள் நிறைய தேவை


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U