ஆன்மீகப்பாதிகள்

ஆழ்ந்த ஞானம் பெற்ற ஆன்மீகவாதி ஒருவர், ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். ஒரு நாள் யாத்ரிகன் ஒருவன் அவரது புகழையும், பெருமையையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணினான்.எதிரில் வந்தவர்களிடம், அந்த ஞானியின் இருப்பிடத்திற்கு வழிகேட்டு, சென்றடைந்தான்.

ஊருக்கு வெளியே, ஒரு குடிலில் தங்கியிருந்த அந்த மகானைப் பார்க்க மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். ஒருவர் பின் ஒருவராக, குடிலுக்குள் சென்று அவரை தரிசித்து வெளியில் சென்ற வண்ணம் இருந்தனர்.

இதைப் பாத்த யாத்ரிகன், ஞானியிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல், தொலைவில் இருந்தே, பார்த்துக்கொண்டிருந்தான். மக்கள் அவரிடம் பேசுவதையும், ஞானி அவர்களது சந்தேகங்களையும், மனக்குழப்பங்களையும் தீர்த்து வைப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.

நாள் முழுதும் இப்படி, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தவன், மாலையில் , அந்த ஞானியின் சீடன் ஒருவனிடம் சென்று பேசத் தொடங்கினான்.

"ஐயா, உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றான் யாத்ரிகன், அந்த சீடனிடம்.

"அதற்கென்ன தாராளமாகக் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்." என்றான் அந்த சீடன்.

"உங்கள் குருவிடம், அற்புத ஆற்றல்கள் உண்டா?" என்று வினவினான் யாத்ரிகன்.

"அது பற்றி எனக்குத் தெரியாது" என்ற அந்த சீடன், "ஆனால், அவரிடம் தினமும் நிறையப்பேர் வருவதுண்டு. பலதரப்பட்ட பிரச்சனைகளோடு வரும் இவர்களில் பலர், திரும்பி வந்து தங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிட்டது என்று கூறி, குருவை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்." என்றான்.

"உங்கள் குரு ஏன் தான் செய்த அற்புதங்களை மறைக்கிறார்? நான் அறிந்த வரையில், அவரால் பலர் நலம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர் எங்கும் இதனைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.தனது பிரார்த்தனையால், ஏராளமானவர்களை குணப்படுத்தியிருக்கிறார், கேட்டால், இது இயற்கையின் அருள் என்கிறார். துயரத்தில் வாடும் பலருக்கு அந்தத் துயர் நீங்க வழி காட்டியிருக்கிறார். இதனை அவர்களின் நல்வினைப் பயன் என்கிறார்.எதற்க்காக இப்படிச் செய்கிறார்? தன்னடக்க்த்தாலா? புகழின் மீது விருப்பமில்லாதாலா? இதனால் அவருக்கு என்ன பயன்?" என்று தன் சந்தேகத்தை சீடனிடம் கேட்டு தெளிவு பெற விரும்பினான், யாத்ரிகன்.

இதைக் கேட்ட சீடன், சற்று நேரம் சிந்தித்துவிட்டு, "நீங்கள் கூறுவது உண்மைதான். நானும் இதனைப் பல முறை கவனித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, குரு, அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க விரும்பவில்லை. இரண்டாவது, மிக முக்கியமான காரணம், மக்கள் அற்புதங்களில் தங்கள் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டுவிட்டால், உண்மையான ஆன்மீகப் பண்புகளை அறிந்துகொள்ளும் ஆர்வமோ, அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து, அத்தகைய பண்புகளை வளர்த்துக்கொள்ளும் என்னமோ மக்களிடம் இல்லாமல் போய்விடும்.அதனால்தான், குரு, இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை." என்றான் அந்த சீடன்.

உண்மையான ஞானம் அடைந்தவர்கள், மனிதனிடம் அன்பையும், பண்பையுமே வளர்க்க விரும்புவார்கள். தங்களிடம் உள்ள சக்தியை வெளிக்காட்டிக் கொண்டு, சுய விளம்பரம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை, திறமைசாலிக்கு அறிமுகம் தேவையில்லை என்பதுபோல, அவர்களிடம் உள்ள திறமைகள் அல்ல, இத்தகைய பண்புகளே ஞானிகளின் புகழுக்குக் காரணமாக இருக்கும்.

ஞானம் என்பதன் குணமே, இத்தகைய தன்னடக்கமும், பண்பும் தான்.இவற்றை உணராதவர்கள், ஞானிகளோ, ஆன்மீகவாதிகளோ அல்ல, ஆன்மீகப்பாதிகள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U