அக்பரின் அவசரம்

முகலாயப் பேரரசர் அக்பர், ஒரு முறை, தன்னந் தனியாக  வேட்டைக்குச் சென்றிருந்தார். அப்பொழுது மாலை நேரமாகிவிட்டதால், கொண்டுவந்திருந்த பாயை விரித்து, அதில் அமர்ந்து தொழுகத் தொடங்கிவிட்டார்.

அப்போது, ஒரு பெண்மணி, தன் மகனைக் காணவில்லை என்று அங்குமிங்கும் ஓடித் தேடிக்கொண்டிருந்தாள். அப்படி ஓடும்போது, தொழுகை செய்துகொண்டிருந்த அக்பரின் மீது மோதிவிட்டாள். தடுக்கி விழுந்தவள், எழுந்து ஒரு வார்த்தைகூட பேசாமல், அக்பரிடம் மன்னிப்பு கேட்காமல், மகனைத் தேடி ஓடினாள்.

அக்பர் பெருங் கோபம் கொண்டார். தொழுகை செய்யும்போது கவனம் வேறு பக்கம் செல்லக் கூடாது என்கிறபடியால், எப்படியும் அந்தப் பெண் மறுபடியும் இந்த வழியாகத்தான் வர வேண்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று வழிபாட்டைத் தொடர்ந்தார்.

தொழுகை முடிந்து எழுந்த அக்பர், அந்தப் பெண்மணி தொலைவில் வருவதைக் கண்டார். மகனைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில், அவனைத் தோளில் தூக்கிக் கொஞ்சியபடி வந்துகொண்டிருந்தவளை, மறித்து நிறுத்தினார் அக்பர்.

"என் மீது இடறி விழுந்துவிட்டு, மன்னிப்புகூட கேட்காமல் நீ சென்றதன் காரணம் என்ன? இதற்க்கு தக்க பதில் கூறாவிடில் கடுமையாகத் தண்டிக்கப் படுவாய்" என்று கண்டிப்புடன் கூறினர்.

அக்பரைப் பார்த்ததும், அவர் யார் என்பதை உணர்ந்துகொண்ட பெண்மணி, தான் செய்த தவறையும் புரிந்துகொண்டாள். இருப்பினும், தைரியமாக அக்பரிடம் பேசினாள்.

"ஐயா, நான் என் மகனைக் காணவில்லையே என்ற பதற்றத்துடன் அவனைத் தேடிச் சென்றுகொண்டிருந்தேன்.உங்களை இடறியதையும் நான் கவனிக்கவில்லை, நான் விழுந்ததும் நினைவில் இல்லை. எனது நோக்கம் முழுதும், என் மகனைத் தேடுவதிலேயே இருந்தது. ஆனால், எல்லாம் வல்ல, பேரருளாளனான, இறைவனை வழிபடுவதில் இருந்த நீங்கள்,அதைவிட்டு என்னை கவனித்தது எப்படி?" என்று எதிர் கேள்வி கேட்டாள்.

தன் அவசரத்தை உணர்ந்த அக்பர், பின்னாளில்  தனது வரலாற்றில் இந்த சம்பவத்தினை இப்படிக் குறிப்பிடுகிறார் "என் மனம் வழிபாட்டில் ஒன்றவில்லை என்பதை அந்தப் பெண் எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டிவிட்டாள்"

நம்மில் பலரும் இப்படித்தான். இறைவனை வழிபடுவதை வெறும் கடமையாகச் செய்து கொண்டிருக்கிறோம். கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கும்போது, வீட்டில் பொருள்கள் பத்திரமாக இருக்கின்றனவா, குழந்தைகள் சாப்பிட்டார்களா? என்பது போன்ற எண்ணங்களுடன் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்.

வழிபாடு என்பது நம் கடமைக்காகவும்,தேவைக்காகவும் செய்யப்படுவதல்ல. மனதின் அமைதிக்காகவும், திருப்திக்காகவும் செய்யப்படுவது. அந்த அமைதியே இறைவன். அதனையே உணராமல், இறைவனை வணங்குவதிலும் வழிபடுவதிலும் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

நம் மனதை, இறைவன் என்ற ஒரு புள்ளியில் குவித்து, அமைதியை ஏற்படச் செய்வதுதான் பிரார்த்தனை. அந்த அமைதியின் மூலம்தான் இறைவனை உணரமுடியும். குழப்பங்களும், பலதரப்பட்ட எண்ணங்களும் நிறைந்த உள்ளத்தில் இறைவன் இருப்பதில்லை என்று பொருளல்ல. அவர்களுக்குள் இருக்கும் இறைவனை அவர்கள் உணரவில்லை என்பதுதான். குழப்பங்களையும், எண்ணங்களையும் விலக்கி, மனதில் அமைதியைப் பரவச் செய்வதுதான் இறைவனை உணரும் மார்க்கம். இதற்கான் ஒரு கருவியே பிரார்த்தனை, வழிபாடு.

1 கருத்துரைகள்:


வழிபாட்டில் மட்டுமல்ல, எந்தக்காரியம் செய்தாலும் மனது ஒன்றி அந்தக் காரியத்தைச் செய்தால்தான் அந்தக் காரியம் ஒழுங்காக நடக்கும். இதை ஒரு வாழ்க்கை நெறியாக்கஃ கொள்ளுவேண்டும்.


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U