சுயமரியாதையுள்ள அரசியல்வாதி - ஓர் அதிசயம்

முன்பு, பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின், எதிர்க் கட்சித் தலைவராக, காயிதே மில்லத் அவர்கள் இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலம். அதன் கல்வி மந்திரியாக, அவினாசிலிங்கம் செட்டியார் இருந்தார்.

ஒரு விருந்தில் இவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட இருவரும், பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கல்வி அமைச்சர், மில்லத்திடம்,

"இஸ்மாயில் சாஹிப், தங்கள் மகன் எஞ்சினியரிங் கல்லூரியில் நன்றாகப் படித்து வருகிறானா?" என்று கேட்டார்.

"ஆமாம்! ஆனால், அவன் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று வியப்புடன் கேட்டார் காய்தே மில்லத்.

"எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்குக் கல்லூரியில் சீட் கொடுத்ததே நான்தானே! விண்ணப்பத்தைப் பார்த்தவுடன் உங்கள் மகன் என்பது தெரிந்தது.தங்களது மகனுக்கு சீட் இல்லை என்று நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார், அவினாசிலிங்கம்.

"அப்படியா?" என்று பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார், மில்லத்.அடுத்த நாளே, தன் மகனை அழைத்து, "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போகவேண்டாம். இன்றோடு அந்தப் படிப்பு நின்று போகட்டும்" என்று கூறிவிட்டார்.

குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும், எவ்வளவோ கேட்டும் என்ன காரணம் என்று கூற மறுத்துவிட்டார். பின் பல நாட்களுக்குப் பிறகு, மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது, தன் செயலுக்கான விளக்கத்தைச் சொன்னார்.

"நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால், என் மகனுக்கு கல்லூரி சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப்பட்ட தயவு நமக்குத் தேவை இல்லை"

பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்யக்கூடிய அரசியல்வாதிகள் நிறைந்த, இன்றைய காலகட்டத்தில், தன் மீதுள்ள மரியாதையினால், ஆளுங்கட்சி அமைச்சர் செய்த உதவியைக் கூட அவமானமாக எண்ணி ஒதுக்கிய, காயிதே மில்லத் போன்றவர்களை இன்றைய அரசியலில் காண முடியவே முடியாது.

ஒரு உண்மையான அரசியல்வாதி என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய அரசியல்வாதிகள் யாரும் இப்படி நடந்துகொள்ளப் போவதில்லை. அப்படி நடக்கக் கூடியவர்கள் யாரும், அரசியல்வாதிகளாகப் போவதுமில்லை என்பதுதான் இன்றைய அரசியலின் நிலை. இந்த நிலை மாறினால் மட்டுமே, நம் தேசத்தின் நிலையும் மாறும்.

1 கருத்துரைகள்:


போட்டியிடுபவர்களில் நல்லவர்களை-கட்சி/ஜாதி பேதம் பார்க்காமல்-ஆதரித்து வாக்களிப்பது நாமாகிய வாக்காளர்களிடம்தானே உள்ளது?


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U