அரசாங்கத்தை அலறவைத்த அறவழிப்போராட்டம்

கலவரங்களும் தீவிரவாதமும் மலிந்துவிட்ட நிலையில் உண்ணா விரதம் எனும் அறப்போராட்ட முறை பயனற்றதாகவே தோன்றும். ஆனால் இன்றைய நிலையிலும் உண்ணாவிரதத்தால் வெற்றி காண முடியுமென்பதை நிரூபிக்கும் செய்தியொன்றை படிக்க நேர்ந்தது

வரலாறு என்பதே ரத்தத்தால் எழுதப்படும் காவியம்தான். ஆனால் அந்த ரத்தம் எப்படி சிந்தப்பட்டது என்பதே அந்த சரித்திரத்தின் மீதான பார்வையைத் தீர்மானிக்கும். இருதரப்பிலும் வன்முறையால் ஏற்பட்ட இழப்புகளால் எழுதப்பட்ட வரலாறு அந்த குரூரத்தின் வாடையே கொண்டிருக்கும். பல உத்தமர்களின் உயிர் தியாகத்தால் உருவான சரித்திரம் அவர்களின் பெருமையையும் தியாகத்தையும் காலம் பல கடந்தும் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு சரித்திரம்தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு. மகாத்மா என்று போற்றப்பட்ட உத்தமரால், அவர் காட்டிய அறவழியில் அஹிம்சை எனும் ஆயுதம் கொண்டு, பல தேசபக்தர்களின் உயிரை விலையாகக் கொடுத்து பெறப்பட்டது நம் சுதந்திரம். அந்தப் போராட்டத்தில் காந்தியவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த சக்திவாய்ந்த போராட்ட முறை உண்ணா விரதம்.

ஆங்கில அரசாங்கம் எழுப்பிய பல பிரச்னைகளையும் தேசத்தில் நடந்த கலவரங்களையும் இந்தப் போராட்டத்தின் மூலமாக முறியடித்திருக்கிறார் காந்தி.

இது நடந்தது முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு. அன்று வேண்டுமானால் இந்தப் போராட்டம் வலிமையானதாக இருந்திருக்கலாம். இன்றய பிரச்னைகளுக்கு இது போன்ற போராட்டங்கள் தீர்வு காண உதவாது என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

ஆனால் இந்தக் கருத்தை பொய்யாக்கி இன்றும் உண்ணா விரதத்தால் வெற்றி காண முடியும் என்று நிரூபித்திருக்கிறார் விடுதலைப் போராட்ட தியாகியோருவர்.

திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது தெற்கு குமிளம்பாடு எனும் கிராமத்தில் வசிக்கும் திரு.சுடலைமுத்து. என்பத்தியேழு வயதாகும் இவர் 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற சுதந்திரப் போராட்ட வீரர்.

தமிழக முன்னால் முதல்வர் காமராஜரையும், கக்கனையும் கடவுளுக்கு நிகராக நேசிக்கும் இவர், ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று உண்ணா விரதமிருந்து போராடி வெற்றி கண்டிருக்கிறார்.

இதற்கு முன்பாக 1980 களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, சென்னையிலுள்ள மறைமலையடிகள் நகர் ரயில் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய பிறகும், அதனை தமிழக அரசு மீண்டும் மறைமலையடிகள் பெயரையே சூட்டியதாம். அதனை எதிர்த்து 38 நாள் உண்ணாவிரதம் இருந்து வெற்றிகண்டுள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு மட்டும் இவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களின் எண்ணிக்கை 81 என்கிற தகவலே இவரது குணத்தை நமக்கு விளக்கிவிடும்.

இந்தச் செய்தியைப் படித்தபோது எனக்குள் பல நாட்களாக இருந்த சிந்தனை ஒன்று வலுப்பட்டது. ஆயுதமேந்தாமல், நம்மை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து தாக்காமல் எப்படி அற வழியில் போராட முடியும்? நம்மை தாகுபவனை திருப்பித் தாக்கி நம் வலிமையை காட்ட வேண்டாமா? அப்படிச் செய்யாமல் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்கும்போது ஓர் எண்ணம் ஏற்படும்.

இதனைப் பற்றி மேலும் சிந்தித்தபோது அஹிம்சையின் சக்தியும், வாய்மையின் வலிமையும் மெல்லப் புரிந்தது.

என்னை ஒருவர் அடித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவரை நான் திருப்பித் தாக்கினால் அவருக்கு கோபமூட்டும்படியே நான் செயல்படுகிறேன். அதனால் அவர் என்னை மேலும் தாக்கவே முனைவார். இருவருமே தாக்கியதால் யார் செய்தது தவறு என்று சிந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

ஆனால் என்னை அடித்தவரை ஒன்றும் செய்யாமல் நான் மெளனமாக இருந்தால், அவருக்கு என் மேல் கோபமிருக்கும் ஆனால் வெகு சிறிது நேரத்திற்கு. பிறகு அது மறைந்துவிடும். அதாவது நான் மெளனமாக இருக்கும் அந்த சிறிது நேரம் மெல்ல அவரது மனதில் சந்தேகத்தை எழுப்பும் "இவன் அமைதியாக இருக்கிறானே? நான் செய்ததுதான் தவறோ?" என்ற எண்ணம் பரவும். அதனை உணர்ந்தவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பார். உணராதவர்கள் கோபம் மறைந்து சகஜமாகிவிடுவர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்மைத் தாக்கியவரை எதிர்க்காமல் நாம் மௌனம் காக்கும் சில கணங்கள் அவருக்கு உண்மையை உணர்த்துகின்றன. அதனை உணர அவருக்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம்.

இதைத்தான் மகாத்மா வெள்ளையர்களிடம் செய்தார். அவர்கள் செய்த அடக்குமுறைகளை அமைதியாக எதிர்த்தார். அரசாங்க அதிகாரிகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொன்றுகொண்டிருந்தவர்கள் மத்தியில் அவரசாங்கதின் அத்தும்மீரல்களை, வன்முறைகளை பொறுமையாக எதிர்கொண்டார். அவர் காத்த அமைதியின் மூலம் ஆங்கிலேயர்களின் தவறை அவர்களே உணர சந்தர்ப்பமளித்தார்.

அதாவது அவர்கள் செய்வது தவறு என்று சட்டப்பூர்வமாகவோ ஆதரப்பூர்வமாகவோ நிரூபிக்க அவர் முயலவில்லை. மாறாக அவர்கள் மனசாட்சி மூலம் உணர்த்தினார். இதைத் தான் காந்தி வாய்மையின் சக்தியென்று கூறினார்.

அதற்காக இன்றைய நிலையில் தீவிராதிகள் தாக்கினால் அமைதியாக கைகட்டிகொண்டு நிற்க வேண்டுமென்பது அர்த்தமில்லை. நமது தாக்குதல் நம்மை தற்காத்துக்கொள்ள மட்டுமே இருக்கட்டும். அவர்கள் செயலின் வினைகளை உணர சந்தர்ப்பம் கொடுப்போம். அவர்களைச் சுட நமக்குத் துப்பாக்கிகள் தேவையில்லை. அவர்களுக்குள்ளிருக்கும் நிஜமே நமக்காக அதனைச் செய்துவிடும்.

 தீவிரவாதத்தையும் வன்முறையையும் கைவிட்டு மக்கள் மனதில் விரோதமும் குரோதமும் பரவாமல் அன்பை மட்டுமே விதைப்போம்.

2 கருத்துரைகள்:


அருமையா கூறியிருக்கிறீர்கள் நண்பரே...

அன்பு ஓன்று தான் நிலைக்கும்... அன்பே சிவம்...



இதைத்தான் மகாத்மா வெள்ளையர்களிடம் செய்தார். அவர்கள் செய்த அடக்குமுறைகளை அமைதியாக எதிர்த்தார். அரசாங்க அதிகாரிகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொன்றுகொண்டிருந்தவர்கள் மத்தியில் அவரசாங்கதின் அத்தும்மீரல்களை, வன்முறைகளை பொறுமையாக எதிர்கொண்டார். அவர் காத்த அமைதியின் மூலம் ஆங்கிலேயர்களின் தவறை அவர்களே உணர சந்தர்ப்பமளித்தார்.
//

பகத் சிங் தூக்கிலப்பட்ட போது, காந்தி எடுத்த நிலையையும்.. மனதில் நிறுத்திப்பாருங்கள் நண்பரே..


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U