கோஷ்ட்டிகளை ஒழிக்கும் இளைஞர் காங்கிரஸ்?

 காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி வளர்ப்பதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டியுள்ளார் தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் .

காங்கிரஸில் கோஷ்டிகள் உள்ளதும் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. பின் எதற்க்காக திடீரென்று இந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் திடீரென்று கார்த்தி சிதம்பரத்தை தாக்கியுள்ளார்?

நாகப்பட்டினத்தில் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை விதிமுறைகளை மீறி வழங்கியிருக்கிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி கட்சிக்குள் கோஷ்டி வளர்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் புகார் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக இளைஞர் காங்கிரஸில் எதோ மாற்றங்கள் நிகழ்நது வருகின்றன. ஆனால் அவை எத்தகைய மாற்றங்கள் என்று உணர முடிவதில்லை. கட்சிக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை அகற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை மலரச் செய்யும் மறுமலர்ச்சியா? அல்லது உட்கட்சிப் பூசலை பரவ விட்டு கட்சியின் மதிப்பை இன்னும் குறைப்பதா? என்று oogikka முடியவில்லை.

வடக்கே உத்திர பிரதேசமும் தெற்கில் தமிழகமும் ராகுல் காந்தியின் எதிர்கால திட்டங்களில் முக்கிய இடங்களாக சொல்லப் படும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் அகில இந்தியா அளவில் வெகுவாக கவனிக்கப்படுகின்றன.

பல கோஷ்டிப் பூசல்களுக்கு  மத்தியில் இளைஞர் காங்கிரஸ் தலைவரை தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்தது பாராட்டப்பட்டாலும், வெற்றி பெற்ற யுவராஜ் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் என்ற முணுமுணுப்புகளும் எழத்தான் செய்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு ராகுல் காந்தி திடீர் விஜயம் செய்ததும் கட்சியில் ஆரோக்யமான மாறுதல்கள் தெரிவதாக பேச்சு எழுந்தது.

தி.மு.க வின் நிறுவனர் அண்ணா அவர்களின் எழுச்சிக்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மங்கிப் போனது. காமராஜர், கக்கன் போன்ற பெரும் தலைவர்கள் இருந்த கட்சிக்குள்  பூசல்கள் ஏற்பட்டு பெருமையையும் பாரம்பரியத்தையும் இழந்தது.

இந்திரா காந்தி காலத்தில் டெல்லியிலோ மற்ற மாநிலங்களிலோ எந்த குழப்பமானாலும் தமிழக முன்னால் முதல்வர் காமராஜ் அவர்கள் தீர்த்துவைக்க அழைக்கப்படுவார். ஆனால் இன்று கட்சியில் ஆயிரம் பிரச்னைகள் வந்தாலும் தீர்ப்பதற்கு ஆளில்லாத நிலை.

இத்தகைய பெருமை கொண்ட தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஸ்தாபிப்பததன் மூலம் தெற்கில் காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் அமைக்கலாம் என்பது ராகுலின் கணக்கு.

அதே போல் வடக்கே உ.பி போன்ற பெரிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதன் மூலம் தேசிய அளவில் கட்சியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ராகுல் காந்தி கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் தமிழகத்தில் இப்படிப் பட்ட புகார் எழுந்துள்ளது.

ராகுல் காந்தி அகில இந்திய அளவில் கட்சியில் இளைஞர்களை புகுத்தி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி வருகிறார். ஒவ்வொரு மாநிலமாக கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வருகிறார்.தமிழகத்தில் மட்டுமலாது பல மாநிலங்களிலும் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள் இருப்பதாலேயே இத்தகைய செயல்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகிறார் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்வதால் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. அதனால் நம் மாநிலத்திற்கு வளர்ச்சித் திட்டங்களை பெருமளவில் செயல்படுத்த முடியும்.தேசிய அளவில் பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பட்சத்தில் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியின்றி ஆட்சி செய்ய முடியும். இதனால் பல முக்கியமான பிரச்னைகளுக்கு தைரியமான முடிவுகளை எடுக்க முடியும்.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் காங்கிரஸ் கட்ச்க்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விலைவாசி உயர்வு, மாவோயிஸ்டுகள் தாக்குதல், காஷ்மீர் கலவரம் என்று பல பிரச்னைகளும் விமர்சனங்களும் ஆளுங்கட்சியின் மீது உள்ளது.

ஆனால் இவற்றை மட்டும் வைத்து தேர்தல் முடிவை ஊகிக்க முடியாது. எதிர்க் கட்சிகளின் நிலையையும் ஆராய வேண்டும்.

முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ,க. வை எடுத்துக்கொண்டால் திறமையான நிர்வாகத்தையும், நிலையான ஆட்சியையும் தர முடியுமென்றாலும் இவர்களது ஹிந்துத்வா கொள்கையும், இஸ்லாமிய விரோத நடவடிக்கையும் உள்நாட்டுக் கலவரங்களுக்கு வழிவகுத்துவிடும். தேசிய பாதுகாப்பில் இவர்கள் கண்டிப்புடன் இருந்தாலும் உள்நாட்டில் இவர்களால் அமைதியை காப்பாற்ற முடியாது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை அதன் பெரும் பலவீனம் முடிவுகளை எடுக்கத் தடுமாறுவது தான். விலைவாசி உயர்வு, நக்சலைட்டுகள் போன்ற முக்கிய பிரச்னைகளில் துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகிறது.

இந்த நிலைக்கு முக்கியமாக கட்சிக்குள் உள்ள பூசலும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தமும் காரணங்களாக இருக்கலாம்.

இதனாலேயே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி, பெருவாரியான பகுதிகளில் காங்கிரஸ் ஆட்சியை நிறுவ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ராகுல்.

இதனை உணர்ந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த தங்கள் உண்மையான உழைப்பை தர வேண்டும்.

இன்றைய நிலையில் தமிழகத்தில் கலைஞரும் ஜெயலலிதாவும் மாறி ஆட்சி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களோ அவர்களின் ஆட்சியில் திருப்தியில்லாமல் ஒரு மாற்றத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள். நம் மாநிலத்தில் இந்த திராவிட கட்சிகளுக்கு சரியான மாற்றாக காங்கிரஸ் மட்டுமே இருக்க முடியும்.பா.ஜ.க. போன்ற கட்சிகளின் கொள்கை நமக்கு ஒத்துவராத நிலையில் காங்கிரஸ் கட்சியாலேயே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்க முடியும்.

ராகுலின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப் படுமானால் தமிழகத்தில் மட்டுமல்ல, தேசத்தின் முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைய முடியும். அப்படிப் பட்ட சூழ்நிலை அமையுமானால், தேசத்தின் பல பிரச்சனைகளுக்கு தைரியமான சில முடிவுகளை  எடுக்க முடியும்.

இதனை மனதில்கொண்டு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேசத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U