எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு

தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னால் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சுதந்திரப் போராட்டத்த்ல் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்

சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை,  மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.

ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.

ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார்.

தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.

இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார். 

இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிச் செய்த காவலாளி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அதைவிட முக்கியமான ஒன்று, மாண்புமிகு அமைச்சரே அன்று தனியாக வந்திருக்கிறார். ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் கூட ஒரு கூட்டத்தோடுதான் செல்கிறார். இத்தைகைய சம்பவங்கள் நேரும்போது, சம்பந்தப்பட்ட பிரமுகர் கூட சும்மா இருந்தாலும், உடன் செல்லும் நல்லவர்கள் சும்மா இருப்பதில்லை. "அய்யா யாருன்னு தெரியுமா?" என்ன தைரியம் இருந்து அண்ணன் தெரியாதுன்னு சொல்லுவ?" "உன்பேரு என்ன? எந்த ஊரு?" இப்படி எல்லாம் விசாரித்து மிரட்டி ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இந்த நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. சுயநலம் சிறிதும் இன்றி, நாட்டிற்காக வாழ்ந்த தலைவர்கள் இருந்த இடத்தில் இதுபோன்ற போலி மனிதர்களைத் தான் நாம் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறோம்.

புகழின் மறுபக்கம்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று பெருமளவு சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையுமே சார்ந்து இருக்கின்றன. நேர்மரையானதகாவோ எதிர்மரையானதாகவோ எந்தவொரு பரபரப்பான செய்தியும் திரைத்துறைப் பிரபலங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் முக்கியமானவொன்று, சினிமா ஹீரோக்களின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைப் பற்றியது.

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று, மலையாள நடிகர்களைப் பற்றியது. தமிழ் இலக்கியவாதி ஒருவர் தனது கேரளப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபத்தை ஒரு வார இதழில் கூறியிருந்தார்.

கேரளத்தின் சூப்பர் ஸ்டார்  என்று போற்றப்படும் மம்மூட்டியின் எளிமையைப் பற்றியும், அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மக்களின் அணுகுமுறைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். அதோடு தமிழ்நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதாக எழுதியிருந்தார்.

நானும் எண்ணிப்பார்க்கிறேன். அண்டை மாநிலமான கேரளத்திற்கும் நமக்கும் ஏன் இந்த வித்தியாசம்? சினிமாப் பிரபலங்கள் மீதான பார்வையில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்ன?

முதலில் எனக்குத் தோன்றியது, கேரளத்தில் நிலவும் கல்வியறிவு. இந்தியாவிலேயே, அதிகமான கல்வியறிவு உடைய மக்களைக் கொண்ட மாநிலம். இதனால் மக்களிடம், வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் தெளிவாகக் காணக்கூடிய பக்குவம் இருக்கிறது. திரைப்பட ஹீரோக்களைப் பற்றியும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களும் மண்ணில் தோன்றியவர்கள்தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.அவர்களை ஒரு வித பிரமிம்மூபோடு பார்ப்பதில்லை. தங்களைப் போன்ற ஒரு மனிதராகவே பார்க்கிறார்கள். இதனால், பொது இடங்களில் இந்த நாயகர்களைப் பார்க்கும்போது எந்தவித சலசலப்பும் ஏற்படுவதில்லை.

இந்த ஒன்று தான் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். இங்கு சினிமா ஹீரோக்களை தெய்வமாக பார்ப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்போது அநேகம் பேர் என்று சொல்வது சற்று ஆறுதல்தான். முப்பது நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய கால கட்டத்தில், திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றுபவன் விண்ணுலக தேவனைப் போலவும், திரையில் கெட்டவர்களாகத் தோன்றும் வில்லன்களை, நிஜத்திலும் கொடூர அரக்கனைப் போலவும் நினைத்தவர்கள் நம் மக்கள். திரையில் தோன்றும் பிம்பங்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததனால் ஏற்படும் குழப்பம் இது.

இப்படி பொது மக்களிடம் தமக்கு ஏற்பட்டுள்ள மதிப்பை எத்தனை நாயகர்கள் உணர்ந்து, அதற்க்கேற்ப்ப செயல் பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே தேறுவர். திரையில் ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவரது இயற்கை குணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு படத்தில் மதுவை வெறுப்பவனாக நடிக்கும் நாயகன், நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது அவருடைய தனிப்பட விருப்பம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால், மக்கள் தன்னை மதிக்கிறார்கள் என்று உணர்ந்து, உண்மையிலேயே குடிப் பழக்கத்தை நிறுத்துபவர்கள், நிஜ நாயகர்களாக உருவாகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மிகவும் குறைவானவர்களே.

சினிமா ஹீரோக்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடாத ஊடங்ககளே கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கார் உபயோகிக்கிறார்கள், கல்யாண மண்டபங்கள், பண்ணை வீடுகள் முதலிய சொத்துகள் என்ன வைத்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பாமர மக்களையும் சென்று சேர்கின்றன. ஆனால் இந்த ஆடம்பர தோற்றத்துக்குப் பின் இந்த நட்சத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையை அந்த மக்கள் அறிவதில்லை.

இன்றைய தேதியில், தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொகையை சம்பளமாகப் பெருமளவிற்கு, அவருக்கு இருக்கும் அவசியங்கள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாயகனின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், அவனது வாழ்கை முறையைப் பற்றி நாம் அறிவதில்லை.

மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு ஹீரோ, ஒரு பொது இடத்தில் தோன்றினால், அங்கு என்ன களேபரம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். அவரைப் பார்க்கவும், அவருடன் கை குலுக்கி, கையெழுத்து பெறவும் முண்டியடித்துக்கொண்டு ஒரு சிறு பிரளயத்தையே உண்டாக்கிவிடுவார்கள் மக்கள். இப்படி இருக்கும்போது, ஒரு நாயகன் சாமான்யனைப் போல சாதாரண உணவு விடுதியில் சென்று தன் குடும்பத்தோடு உணவருந்த முடியாது. அவர்களது தனிமையையும் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய, ஒரு நட்சத்திர உணவகத்திக்கே அவர்கள் செல்ல முடியும்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, சாதரணக் கார்களில் பயணம் செய்தால் என்ன ஆகும்? பணத்தையெல்லாம் இழந்துவிட்டார். கடன் தொல்லையில் இருக்கிறார்.அவருக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது. அவரது புதிய படம் வெற்றிபெறாது . அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். போன்ற வதந்திகள் அவருக்கு எதிராக பரப்பப்படும். அதனால், தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், ஒரு ஆடம்பர சொகுசுக் காரை, அந்த ஹீரோ பயன்படுத்த வேண்டிய நிலை.

இதையெல்லாம் விட, ஒரு சினிமா நட்சத்திரமாக இருக்கக் கூடிய ஒருவர் இழக்கும் முக்கியமான விஷயம், தனிமை. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட முடியாத ஒரு பரிதாபத்திற்க்குரிய மனிதர். ஒரு சாமாநியனைப் போல தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல இயலாது.


நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்தில் கூறுவார். "ஓவர்நைட் ஸ்டார் என்பது தங்கக் கூண்டு போன்றது" என்று. ஆம். இந்த நடிகர்களின் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். தங்கக் கம்பிகளால் பூட்டப்பட்ட சிறையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து, புகழின் உச்சிக்குச் செல்ல, இவர்கள் கொடுத்த விலை, தங்களின் தனிமையும் சுதந்திரமும். இந்த நாயகர்கள் அடைந்திருக்கும் புகழின் மறுபக்கம் இதுதான்.

தங்கத்தில் செய்திருந்தாலும் சிறை சிறைதான். இதனை உணர்ந்தவர்கள், ஆடம்பர வாழ்கையை வெறுக்கத் துவங்கிவிடுகின்றனர். ஆனால், இந்த சிறையினை கௌரவமாகக் கருதுபவர்கள், அறியாமையில் உழன்று, வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள.

கேரளத்தில் மக்கள் சினிமா நட்சத்திரங்களை சக மனிதர்களாகவே பார்க்கிறார்கள். அதனால், இந்த நாயகர்களும், எளிமையான வாழ்கையை வாழ முடிகிறது. தமிழக மக்களும் விரைவில் இதனை உணர்ந்துகொள்வார்கள்.

அலைபேசி அடிமைத்தனம்

நம்முடைய வாழ்க்கை, இன்று இயற்கையால் சூழ்ந்திருப்பதைவிட, இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலுமே நிரம்பியிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் சில வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை, வாகனங்கள் இன்றி பக்கத்துத் தெருவுக்கு கூட நாம் செல்வதில்லை, தொலைக்காட்சி இல்லாமல் பொழுதைக் கழிக்க இயலவில்லை. இப்படி, அவற்றிடம் நம்மை முற்றிலுமாக இழந்துவிட்ட அறிவியல் சாதனங்களில் மிக முக்கியமானது, அலை பேசி.

கிட்டத்தட்ட நம் உடலில் ஒரு உறுப்பாக, மூன்றாவது கையாக நம் வாழ்வில் ஒன்றிவிட்ட்ட ஒரு சாதனம் இந்த அலை பேசி. Mobile Phone. இந்த சின்னஞ்சிறிய கருவி இல்லாமல் நம்மால், இயங்க முடிவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, தகவல்கள் உடனடியாக பரிமாறிக்கொள்ளபப்டுகின்றன, அதோடு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் உபயோகப்படுகிறது. இப்படி பல அம்சங்களில் நமக்கு உதவும் இந்த கைபேசியை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அப்படிச் செய்த ஒரு மனிதரையும் சமீபத்தில் காண நேர்ந்தது.

சில அரசியல், சினிமா பிரபலங்களும், இலக்கியப் பிரமுகர்களும் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ஆனால், நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், அலைபேசி இல்லா வாழ்க்கையை அனுபவித்து வருவதை கண்டபோது ஆச்சர்யம் அளித்தது. இத்தனைக்கும் அவர் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி இந்த சிறிய தேவதையை புறக்கணித்துவிட்டு இருக்கிறார் என்று வியந்து அவரிடமே கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன காரணங்கள் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தின.

"இந்த அலைபேசி இல்லாததால், நம்முடைய நேரம் முழுமையாக நம்மிடமே இருக்கிறது" என்றார். "எங்கேனும் வெளியே செல்லும்போது, நண்பர்களைப் பார்த்தால், எந்த இடையூறும் இன்றி மணிக்கணக்கில் பேச முடிகிறது. அலைபேசி இருந்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வந்து விடுகிறது." என்று கூறியவர், "முக்கியமான கூட்டங்களிலும், கலந்துரையடல்களிலும் இருக்கும்போது அனாவசியமான கவனச் சிதறல்கள் ஏற்படுவதில்லை" என்று விளக்கினார்.

"இதெல்லாம் சரி, ஆனால் உங்கள் தொழிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? அலைபேசி உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியமல்லவா?" என்று கேட்டேன்.

"இல்லை கைபேசி இல்லாதது என் தொழிலுக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. " என்று சிரித்தார்.

"அது எப்படி?" என்று கேட்டேன் மேலும் ஆச்சர்யத்துடன்.

"என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் என் அலுவலக என்னை அதாவது landline எண்ணை வழங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் நேரடியாக அங்கு தொடர்புகொண்டு வேண்டிய சரக்கை தருவித்துக்கொள்வார்கள். ஒரு வேளை நான் அலைபேசி வைத்திருந்தால், அவர்கள் என்னை அழைத்து இந்த சரக்கை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்வார்கள். பின்னர் நான் மீண்டும் என் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டும். இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது.அதனால்தான் எனக்கு கை பேசி உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் என் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடைமுறை சௌகர்யமாகவே இருக்கிறது." என்றார்.

எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நம்முடைய விஞ்ஞான  உபகரன்களால் எத்தனை அழகான வாழ்க்கை மறைக்கப்பட்டிருக்கிரதேன்று உணர்ந்தபோது வேதனையாக இருந்தது.

நண்பர் சொன்னது போல் அலைபேசி உபயோகிக்கும்பொழுது, நம்முடைய நேரம் நம்மிடம் இருப்பதில்லை. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்வதை போல்லவே இயங்கிக்கொண்டிருக்கிறோம். சந்தித்துப் பார்க்கும் பொழுது, எதோ அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போலவே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தமானவர்களுடன், நேரம் செலவிட முடியாமல், சிறிது நேரத் தனிமையின் சுகத்தை அனுபவிக்க முடியாமல், சூழ்நிலைகளுக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது உணரமுடிந்தது.

ஆனால் இந்த அடிமைத்தளை வேறொருவர் நம்மீது சுமத்தியதல்ல, நாமே நமக்கு சூட்டிக்கொண்டது. இந்த அலைபேசி அடிமைத்தனம், பாரபட்சமின்றி, அனைத்துத் தரப்பினரிடமும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்யாசம் இன்றியும் பரவியிருக்கிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டும், வாலிபர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புவதிலும், பெரியவர்கள் தொழில்த் தொடர்புகளை பேசிக்கொண்டும், பெண்கள் தொலைகாட்சி நிகழ்சிகளைப் பற்றியும் தம் குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வதிலும் அலைபெசியிடம் காலத்தைப் பரிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நண்பரிடம் பேசியபோது உணர முடிந்த மற்றொரு விஷயம், இந்த அடிமைத்தளையை உடைத்தெறியவும், இந்த விஞ்ஞான சிறையிலிருந்து வெளியே வரவும் நமக்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியமும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. நான் உட்பட. அனாலும் இந்த இந்த சாதனங்களின் உபயோகத்தை குறைக்க முடியும். அதற்க்கான் முயற்சியையாவது மேற்கொள்ள எல்லோராலும் நிச்சியமாக முடியும்

அரசாங்கத்தின் அபத்தமான யோசனை

சமீபத்தில் படித்த செய்தியொன்று, என்னுள் சிந்தனையைத் தூண்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் குழந்தைக பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இத்தகைய புதுமையான திட்டத்தை அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் இக்கட்டான நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.பெருகிவரும் மக்கதொகையால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து, இது போன்ற திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், ஆனால் பெருகிக்கொண்டே வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.

குழந்தை என்பது, கடவுள் கொடுக்கும் வரமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் சன்மானத்துக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது என்பது சிக்கலான விஷயம். சில தம்பதிகள், இந்த பணத்திற்காக உருவான கருவைக் கூட கலைக்கும் வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக ஒன்றும் அறியாத ஒரு கருவைக் கொள்வது தகுமா? இது போன்ற செயல்களுக்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருக்கலாமா? மேலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்க முடியாமல் போனாலோ, தாமதமானாலோ, அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?

திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கருத்தரிகவிலை என்றால், நம் சமுதாயத்தில் என்னென்ன பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் மனைவியாகிய அந்தப் பெண் சந்திக்கக்கூடிய அவமானங்கள் சொல்ல முடியாதவை. அப்படியிருக்கும்போது, இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. முன்பு சொன்னதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பத்திக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகுமேயானால், அதனை அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் ஈடு செய்ய முடியுமா?

இப்படி யோசித்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த திட்டம் சற்று அபத்தமாகவும் ஆபத்தானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இன்னும் சிறப்பான திட்டங்களை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். முன்பு இருந்த, இரண்டு குழந்திகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் திட்டம் இன்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கொடிய திட்டம்தான்.

இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டத்திலேயே சிறு மாறுதல் செய்து, ஒரு தம்பதி, முதல் குழந்தைக்குப் பிறகு, குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு அடுத்தக் குழந்தை பெற்றுக்கொண்டால், சன்மானம் வழங்கப்படும் என்று மாற்றியமைக்கலாம். இதன் மூலம், ஜனத்தொகை பெருகும் வேகத்தைப் பாதியாகக் குறைக்க முடியும். இது,  தம்பதிகளின் ஆரோக்யத்திற்க்கும் சிறந்தாதாக இருக்கும்.

இப்படிப்பட்ட திட்டங்களை அரசு அறிவிக்கலாமே தவிர, புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களை குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது தவறான அணுகுமுறை. மகாராஷ்டிரா அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களைப் பரிசீலித்து தேசம் முழுவதும், முதல் குழந்தைக்குப் பிறகு, இரண்டாவது குழந்தைக்கு போதிய கால இடைவெளி (மூன்று வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ) விட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவிக்கலாம்.

வாழ்வின் நோக்கம்

அஹமது காசிம் எனும் சூபி ஞானி ஒருவர், மெக்கா நகர் நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள் பயணம் என்பதால், தேவையான உணவை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.

பயணத்தின்போது, ஒரு பெண்மணி எதிர்பட்டார். ஞானியை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, "உங்களைப் பார்த்தால் சூபி ஞானி போல் தெரிகிறதே. எங்கே பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினாள்.

"புனித மெக்கா நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்று பதிலிறுத்தார் அஹமது காசிம்.

"அது சரி மூட்டையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?"என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்மணி.

"வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு" என்றார் சூபி.

"வழியில் உமக்கு உணவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டீரா?" என்று சூபியை ஏளனமாகப் பார்த்தால் அந்தப் பெண்.

இது கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அந்த ஞானியைப் பார்த்து மேலும் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி.

"உங்கள் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. நீர் ஒரு சூபியாக இருந்தும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர். வழிப் பயணத்தின்போது, ஏதோவொரு வகையில் இறைவன் உணவு வழங்கிவிடுவான் என்ற நம்பிக்கை கூட உமக்கு இல்லை. நீர் எப்படி பிறருக்கு இறைத் தத்துவத்தை போதிக்கப் போகிறீர்?" என்று ஏளனமாகச் சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த அந்த சூபி, வழியில் எதிர்பட்டோருக்கு தான் கொண்டு வந்த உணவை தானமாகக் கொடுத்துவிட்டு,  வெறும்கையோடு, மனதில் இறைவன் பால் நம்பிக்கையும் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நீண்ட தூரம் நடந்தார். பசியும் களைப்பும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. சுற்றிலும் எதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கினார்.எதுவும் புலப்படவில்லை. இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் நடந்தார்.

அப்போது கீழே ஒரு பெண்ணின் கால் கொலுசு கிடப்பதைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்தவர், இதைத் தவற விட்டுச் சென்றவர்கள் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள், அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு, உணவு ஏதாவது கேட்கலாம், என்று சுற்றிலும் பார்த்தார்.

அப்போது அவர் முன்பு சந்தித்த அதே பெண்மணி வந்து கொண்டிருந்தாள். நேர்ந்கி வந்ததும் அவளைப் பார்த்து, "தாயே! இந்தக் கொலுசு தங்களுடையதா?" என்று வினவினார்.

"ஆம் என்னுடையதுதான்" என்று பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

"அம்மா! எனக்கு ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் மிகுந்த பசியாக இருக்கிறது" என்று வேண்டினார் அஹமது காசிம்.

மீண்டும் அவரை ஏளனமாகப் பார்த்த அந்தப் பெண்மணி,"இப்போது நீங்கள் இந்தக் கொலுசைக் கொடுத்துவிட்டு உணவு பெரும் வியாபாரியாகி விட்டீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நாமும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை அடைய வேண்டுமென்று உழைக்கிறோம். ஆனால் ஏன் அதனை அடைய வேண்டும்? அதன் பலன் என்ன?அந்த நோக்கம் எத்தன்மையது? போன்றவற்றை நாம் உணர்வதில்லை. அதனாலேயே நம் லட்சியத்தை அடைந்தவுடனேயே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.

வாழ்க்கைப் பயணத்தில் நமது இலக்கு எது? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் பயணம் எப்படி இருக்கிறது? நம்மில் எத்தனைப் பேர் இந்தக் கேள்விகளுக்கான் பதிலை அறிந்திருக்கிறோம்?

நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம், ஆனால் அந்த படிப்பின் நோக்கம் என்ன? எதற்க்காக படிக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கொடுப்பதில்லை. நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம் என்று மட்டும் சொல்லி படிக்க வைக்கிறோம். இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக உணராமல், கடமையைச் செய்வதுபோல் செய்துகொண்டிருக்கிறோம்.

இறை நம்பிக்கையிலும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். கடவுளிடம் நாம் முழுமையாகச் சரனடைந்துவிடுவதே உண்மையான பக்தி. கஷ்டங்களும் கவலைகளும் வரும்போது மட்டும் கடவுளை நினைக்காமல், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவன் செயல் என்று நம்பியிருப்பதே இறை நம்பிக்கை.

உதவியின் தன்மை

பேரறிஞர் ஐயா பெரியார் அவர்கள், பிறருக்கு உதவுவதை தன்னுடைய கொள்கையாக வைத்திருந்தார். ஆனால் அவர் என்றுமே நன்றியை எதிர்பார்த்து எந்த உதவியும் யாருக்கும் செய்ததில்லை.

ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம், "ஐயா தாங்கள் தொடர்ந்து போராடவில்லை என்றால் வகுப்புரிமை, சட்டமாகியிருக்காது.அதை தமிழர்கள் நினைத்துப் பார்க்காவிட்டாலும், தினமும் உங்களிடம் வந்து பரிந்துரை வாங்கிச் செல்லும் நபர்களாவது நினைத்துப் பார்க்கிறார்களா? ஒரு நாளைக்கு குறைந்தது இருபது பேராவது தங்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிச் செல்கிறார்கள், ஆனால், பத்து நாளைக்கு ஒருவர் கூட உங்களை சந்தித்து நன்றி சொல்வதில்லையே" என்று வேதனைப்பட்டார்.

இதைக் கேட்டு சிரித்த பெரியார், "இவ்வளவுதானா உங்களுக்குத் தெரிந்தது? நான் தண்ணீர் பந்தல் வைத்து நடத்துகிறேன். அதில் தண்ணீர் பருகியவர்கள், தாகம் தீர்ந்ததும் நகர்ந்து செல்லாமல், நன்றி கூறிக் கொண்டிருந்தால், பிறருக்கு தண்ணீர் ஊற்றுவதும் தடைபடும்."

ஐயா பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்திருக்கும், உலகத்துக்கும் எத்தனையோ விஷயங்களை போதித்திருக்கிறார். ஆனால் இந்த ஒரு சம்பவத்தின் மூலம் அவர், மகத்தான கருத்துக்களை எளிமையாக விளக்கிவிட்டார். ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, ஓர் தலைவனும் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஒரு தலைவன் என்பவன், தனது கொள்கையிலும் அதனை அடைவதிலுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர, தனது முயற்ச்சிகளுக்கான பலன்களை எதிர்பார்த்து அதில் மூழ்கிவிடக்கூடாது.

இன்றைய அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், தங்கள் கடமையைச் செய்வதற்கே,  லஞ்சம் எதிர்பார்க்கும்போது, தான் செய்த உதவிக்கு, நன்றி கூட எதிர்பாராத பெரியார், எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குக் காட்டிவிட்டார்.

ராமர் கோவிலா? பாபர் கோவிலா?

தேசத்தின் மாபெரும் புதிராக இருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தொடங்கிய இந்த பிரச்னை, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உச்சக்கட்டத்தை எட்டி, இன்று வரை தீராத துயரமாக இருக்கிறது. இந்த விவகாரத்தின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கபப்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு அதுவும் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. காமன் வெல்த் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில், கலவரம் ஏற்ப்படக் கூடிய அபாயம் இருப்பதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற நியாயமான காரணம் இருந்தாலும், இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி தற்காலிகத் தீர்வுகளும், தள்ளிவைப்புகளும்? முடிவு என்றைக்கு வெளியிடப்பட்டாலும் கலவரம் நடக்கும் ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு கலவரத்தை அடக்க வேண்டுமே தவிர இப்படித் தள்ளிவைப்பது சரியான அணுகுமுறையாகாது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரை, இதன் பின்னணியையும், இந்தப் பிரச்னையின் மூலத்தையும் சற்று விரிவாக அலசியிருக்கிறது.  அதில் கூறப்பட்டுள்ள படி, முகலாயப் பேரரசர் பாபர் இந்தியாவை ஆண்டபோது, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பது தான் இந்த பாபர் மசூதி. இஸ்லாமிய, மங்கோலியப் படையெடுப்புகளின்போது நிர்மூலமாக்கப்பட்ட பல கோவில்களில், இந்த அயோத்தியும் ஒன்று. அப்படி இடிக்கப்பட்ட பல கோவில்கள், சுதந்திரத்திற்குப் பின்பு மீண்டும் கட்டப்பட்டிருகின்றன. அப்படியிருக்கையில் இந்த அயோத்தி விவகாரம் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக  மாறவேண்டும்?

இந்துக்கள்  வணங்கும்  தெய்வமான,  ராமர் அவதரித்த  இடம், ராம ஜன்ம பூமி என்று இந்த அயோத்தி கருதப்படுவதுதான் இத்தனைக் கலவரத்திற்கும் காரணம். ஹிந்துக்களின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக, ராமாயணம் எனும் பெருங்காவியம் இருக்கிறது. ஆனால், மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த நம்பிக்கைகள் காரணம் அல்ல என்பதும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் வேண்டிச் செய்யப்பது என்பதும், இருதரப்பினரும் அறிந்ததே. பின் எப்படி இத்தனை கொடிய கலவரங்கள் நிகழ்கின்றன?

இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள நாம் முகலாயர் காலம் வரை செல்ல வேண்டும். மங்கோலியர்களும், இஸ்லாமியர்களும் இந்தியா மீது தொடர்ச்சியாக நடத்திய படையெடுப்புகளில், ஹிந்து மதத்தின் சின்னங்களாகக் கருதப்பட்ட பல கோவில்கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. மக்களும் மிகுந்த கொடுமைகளை சந்திக்க நேர்ந்தது. அன்று இஸ்லாமியர்கள் காட்டிய அந்த வெறி, அவர்களை ஹிந்து மதத்தின் நிரந்தரப் பகைவர்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துவிட்டது. பின்னர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறை சம்பவங்களும் இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்துவிட்டது. ஊன்றிக் கவனித்தால், ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் வட இந்தியாவிலேயே அதிகம் நடப்பது தெரியும். காரணம் இந்த மக்கள், முகலாயர் காலத்திலும், பிரிவினையின்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான் இப்பொழுது நடந்து வரும் சம்பவங்கள் இருக்கின்றன. இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருப்பதும் நிதர்சனமான உண்மை.

மக்களின் நிலை இப்படி இருக்கையில், வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது முக்கியமல்ல.எப்போது சொல்லப்பட்டாலும், கலவரத்தைத் தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த நிலையில், தீர்ப்பை விரைவாக வெளியிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே புத்திசாலித்தனமாக இருக்குமே சாஹிய, அதனைத் தள்ளிப்போடுவது எந்த வகையிலும் நன்மை அளிக்கப்போவதில்லை. கலவரங்கள் எழுமானால், அதனை எதிர்த்து அடக்க முயற்ச்சிக்க வேண்டும். அதைவிடுத்து, வான்முறை ஏற்படும் என்று தயங்குவதும் அஞ்சுவதும் ஒரு அரசாங்கத்துக்கு அழகல்ல.

இந்தக் கலவரங்களைத் தவிர்ப்பது என்பது சிரமாமான காரியம். ஏனெனில், எத்தகைய தீர்ப்பு வந்தாலும், வன்முறையில் ஈடுபட சில விஷமிகள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும், மக்களிடையே அதிக பதட்டமில்லாமல் இருக்க, இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் நடுநிலையானதாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில், ராமர் கோவிலும் கட்ட வேண்டாம், பாபர் கோவிலும் கட்ட வேண்டாம். ஒரு அநாதை ஆசிரமமோ, குழந்தைகள் பூங்காவோ, அல்லது ஏதேனும் அரசாங்க அலுவலகமோ கட்டிவிடலாம்.

மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில தேசவிரோதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இத்தகைய தீர்ப்பையே வழங்க வேண்டும்.

அறிவுக் கொல்லி நோய்கள்

தமிழகத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்பது தமிழக அரசியல்வாதிகளின் முக்கியமான கோஷம். ஆனால், தமிழகத்தை சீரழிக்கும், மக்களை மூடர்களாக்கும் விஷயங்களே இங்கு நடக்கின்றன. இவற்றுக்கும் அரசியல்வாதிகளே முக்கியக் காரணம்.இத்தகைய செயல்களைச் செய்ய தொலைகாட்சி எனும் சிறிய வஸ்துவே போதுமானது.. தமிழில் இருக்கும் அளவுக்கு இந்தியாவின் வேறு மொழிகளில், இத்தனை சேனல்கள் இருகின்றனவா என்பது சந்தேகமே. இதில் முக்கியமான விஷயம், ஏறக்குறைய தமிழ் நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சிச் சேனல்கள் வைத்திருக்கின்றன.(மற்ற மாநில அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு வசதியில்லாதவர்களா, அல்லது புத்திசாலித்தனம் இல்லாதவர்களா என்பது தெரியவில்லை.)

இத்தனை சேனல்கள் இருப்பதால் என்ன பிரச்சனை என்பதைக் கூட உணராதவர்களாக இருக்கிறோம் நாம். அந்த அளவுக்கு நம்மை இந்த சின்னத்திரை மோகம் பீடித்திருப்பதுதன் முதல் பிரச்சனை.

உலக அளவில் பார்த்தால், தொலைக்காட்சிச் சேனல்கள் எத்தனையோ இருக்கின்றன. அறிவையும் திறமையையும் வளர்க்கும் பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களும் செய்திகளும் உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. இப்படி இந்த தொலைக்காட்சியின் நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகளின் வீரியம் அதிகமாக உள்ளது.

முன்பே சொன்னது போல், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சேனல்கள், கட்சிக்காரர்களுடையதே. இவை இந்த கட்சிகளின் பிரசார ஆயுதமாகவே செயல்படுகின்றன. இவர்கள் ஒளிபரப்பும் செய்திகளின் நம்பத்தன்மை மிகக் குறைவாகவே இருக்கிறது. தங்கள் கட்சிக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. இதனால், இவர்களின் செய்திகளைப் பார்ப்பவர்கள், நாட்டு நடப்புகள் பற்றி, தவறான கண்ணோட்டம்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த சேனல்களால் ஏற்படும் முக்கியமான தீமை, இவர்களின் நிகழ்ச்சிகளின் பலனாக வருவதுதான். அறிவுப் புரட்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு, இவர்கள் மூளையை மழுங்கடிக்கும் செயல்களையே செய்துவருகிறார்கள். ஆக்கப்பூர்வமான் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கும்போது, கதைகளே இல்லாத மெகா சீரியல்களும், சினிமா மற்றும் சின்னத் திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருக்கும் தொலைபேசியில் பாட்டு கேட்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, இன்று தமிழக மக்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

செய்திகளில்தான் இவர்கள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறார்கள் என்றால், சினிமா விமர்சனத்திலும் நடுநிலைத்தன்மை இல்லை. இந்தச் சேனல்காரர்கள் சினிமாவையும்  தயாரிப்பதால், தங்கள் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்களின் ரசனைப்படியும், கதையின் தன்மையைப் பொருத்தும் படங்களை வரிசைப் படுத்தும் நிகழ்ச்சியில், இவர்களின் படங்களுக்கே முன்னிலை அளிக்கப்படுகிறது. இதனால் பல தரமான படங்கள், உரிய மதிப்பளிக்கபடாமல் தோல்வியைத் தழுவுகின்றன.

பொது மக்களுக்கு மட்டுமல்ல, திரைத் துறைக்கும் பாதகமான செயல்களையே இவர்கள் செய்து வருகிறார்கள். புதிய படங்களை வெளியான மூன்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே இவர்களின் சேனல்களில் ஒளிபரப்பிவிடுகின்றனர். இதனால், மக்களிடையே, எப்படியும் சில நாட்களில் ஏதாவதொரு டிவியில் போட்டுவிடுவார்கள், எதற்க்காக படத்தை திரை அரங்குகளில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. திரைப் படங்கள் தோல்வியடைய இது ஒரு முக்கியமானக் காரணம்.

இவர்களின் இந்த செயல்கள், உலகில் பரவும் ஆட்கொல்லி நோய்களை விட கொடிய  அறிவுக்கொல்லி நோயாக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்துவருகிறது. இந்த நிலை மாற மக்களிடையே ஒரு அறிப் புரட்சி நிகழ்வதைத் தவிர வேறு வழி இல்லை. உலகில் மீண்டும் பெரியாரும், சாக்ரடீசும், பெர்னார்ட் ஷாவும் பிறந்து வந்தால் தான் இத்தைகய புரட்சி நிகழுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

குறுஞ்செய்தியில் நல்ல செய்தி

சில தினகளுக்கு முன்பு, தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரையொன்று என்னை சிந்திக்க வைத்தது. செல் போன்களில் வரும் SMS கள் பற்றிய அந்த கட்டுரை, நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள், சிந்திக்க வேண்டியவை.

நம் மொபைல்களில் தினம் தினம் பல்வேறு பார்வர்ட் மெசேஜுகள் வருகின்றன. அவற்றில் பாதி மெசேஜுகள், இந்த மெசேஜை இத்தனை பேருக்கு அனுப்பினால், நன்மை நடக்கும்; இந்த எண்ணகளில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம். அது உங்கள் மொபைலை செயலிழக்கச் செய்துவிடும்; யாரோ ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார், அவருக்கு உதவ இந்த SMS ஐ இத்தனைப் பேருக்கு அனுப்புங்கள், ஒரு மெசேஜுக்கு பத்து பைசா வீதம், பணம் கொடுக்க மொபைல் கம்பெனி முன்வந்துள்ளது; இது போன்ற மெசேஜுகள் தான்.

இவற்றை எத்தனை பேர் பின்பற்றி, குறிப்பிட்டபடி செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், இது போன்ற மெசேஜுகள் வராத செல் போன்களே கிடையாது. இவை பார்பதற்கு மூட நம்பிக்கை போலத் தோன்றினாலும், நான் இதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.

இந்த மெசேஜுகள் பல சமயம் அபத்தமாக இருந்தாலும், சேற்றிலும் செந்தாமரை முளைப்பது போல, இவற்றிலும் சில சமயம் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, ஏதோவொரு மந்திரத்தையோ, அல்லது வாசகத்தையோ குறிப்பிட்டு, இதனை இத்தனை பேருக்கு அனுப்பினால், நன்மை நடக்கும் என்று சொல்லப்படுகிறது என்றால், அது உண்மையோ இல்லையோ, அதில் நன்மை நடக்க ஒரு வாய்ப்பிருக்கிறது அல்லவா. இந்த குறுஞ்செய்திகளைப் படிப்பவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, ஆனால், அவர்கள் மனத்தில் நினைத்திருக்கும் ஏதோவொரு விஷயம் நடப்பதாக நினைத்துப் பார்ப்பார்கள், அதுவே அந்த விஷயம் நிறைவேறுவதற்கு வாய்ப்பாக அமையலாம்.நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய சம்பவம் இது.

உதாரணமாக, உங்களுக்கு, ஒரு மந்திரத்தை அனுப்பி, அதை நீங்கள், இருபது பேருக்கு அனுப்பினால், நீங்கள் நினைத்தது நடக்கும், என்றொரு குறுஞ்செய்தி வருகிறதென்று வைத்துக்கொள்வோம், உங்களையும் அறியாமல், அதைனைப் படித்தவுடன் நீங்கள் எதிர்பார்த்த்திருந்த ஒரு விஷயம் நிறைவேறுவதாக நினைப்பீர்கள். அந்த எண்ணம்தான் இதுபோன்ற குறுஞ்செய்திகளால் ஏற்படும் நன்மை.

இதைப் போலவே, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவ, இந்த செய்தியை, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பவும். என்று வரும் SMS களை, நம்பவில்லைஎன்றாலும், அந்த நபர் நலம்பெற வேண்டும் என்று நிச்சியம் நினைப்பார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பேர் நினைத்தால், அந்த எண்ணம், ஒருவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக இருக்கும்.

தினம் தினம் நம்மையும் அறியாமல் பல தவறுகளையும் பாவங்களையும் செய்கிறோம். அப்படி நம்மையும் அறியாமல் செய்யப்பட ஒரு நன்மையாக இந்த குறுஞ்செய்திகள் இருக்கட்டுமே.

ஜார்கண்ட் சட்டசபையில் வாஸ்த்து சாஸ்த்திரப் படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவதை விட, இவை ஒன்றும் மூட நம்பிக்கைகள் அல்ல. அப்படியே மூட நம்பிக்கையாக இருந்தாலும், இந்த நம்பிக்கையால் நன்மைகள் நடந்தால், இதனை ஆதரிக்கலாம் அல்லவா

யார் கடவுள்

ஹபிப் அஸ்மி எனும் துறவி ஒருவர், ஆற்றுக்கு நீராடச் சென்றார். ஆடைகளை ஆற்றங்கரையில் கழட்டி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், கரையில் இறந்த ஆடைகளைப் பார்த்தான். சுற்றுமுற்றும் பார்த்தவனுக்கு, ஞானி அஸ்மி, நீந்திக் குளித்துக் கொண்டிருந்தது தெரியவில்லை. யாரோ கவனமில்லாமல் இதனை விட்டுவிட்டு போய்விட்டார்கள். அவர் வரும்வரை, அந்த ஆடைகளைப் பாதுகாக்கத் தீர்மானித்து, அங்கு அமர்ந்துவிட்டான்.

வெகு நேரம் கழித்து குளித்துவிட்டு வந்த ஞானி, ஆடைகளை எடுக்கச் சென்றார். அவரைப் பார்த்த அந்த மனிதன், "ஐயா, உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் என்னாவது?" என்று கேட்டார்.

ஹபிப் அஸ்மி சிரித்துக் கொண்டே, "ஓஹோ! நான் ஆடைகளை இறைவன் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன். அவன் உங்கள் பொறுப்பில் விட்டுவிட்டான் போலிருக்கிறது." என்று அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் வாழ்வில் அன்றாடம் நடப்பதுண்டு. நாம் தொலைத்துவிட்ட ஒரு பொருளை யாரவது மீட்டுத் தந்தாள், அவர் நமக்குக் கடவுளாகத் தெரிவார்.ஆனால் அந்த சம்பவத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் இறைத் தத்துவம் எனும் சித்தாந்தம் இருக்கிறது.அந்த சித்தாந்தத்தையே எளிமையாக விளக்கிவிடும் கதை இது.

வழிப்போக்கன் ஒருவன், ஞானியின் ஆடைகளைப் பாதுகாக்கிறான். ஞானியோ, கடவுளே அந்தப் பொறுப்பை இந்த வழிப்போக்கனிடம் விட்டதாகச் சொல்கிறார். இப்போது சிந்தித்துப் பாருங்கள், ஒரு வேளை அந்த வழிப் போக்கன், ஒரு நாத்திகவாதியாக இருந்தால்? அவனுக்கு தான் அக்கறையோடு பாதுகாத்ததுதான் தெரியும். அதைக் கடவுள் செயலாக ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் நினைப்பதும் சரிதான். தன்னிச்சையாகத் தானே அந்த உடைகளை பாதுகாக்க முடிவெடுத்தான். பிறகு எப்படி அது கடவுளின் செயல் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியும்?

சரி அது அவனது செயல்தான். ஆனால் அவனை அப்படிச் செய்யத் தூண்டியது எது? அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். கேட்பாரற்றுக் கிடக்கும் ஆடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அவனுக்கு உணர்த்தியது அவனது மனம் தானே? அப்படியானால் அந்த மனமே கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

இல்லை, யாரோ ஆடைகளை விட்டுச் சென்றுவிட்டார்கள். அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அந்த நல்ல எண்ணம்தான் கடவுளா? அதாவது அடுத்தவர் பாதிக்கப் படக் கூடாது என்ற அவனது நல்லெண்ணம், கடவுளாக முடியுமா?

இவை எல்லாமே உண்மைதான். கடவுளின் குணம் என்ன? அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அத்தகைய எண்ணம் கொண்ட ஒரு மனிதன் ஏன் கடவுளாகக் கூடாது? அவனைப் பொறுத்தவரை, தானாகத் தான் எந்த காரியத்தையும் செய்கிறான். அந்தக் காரியத்தை அவனைச் செய்யத் தூண்டும் மனமே கடவுள். கடவுளை அறிந்தவனும் உணர்ந்தவனும் அப்படி ஏற்றுக்கொள்வான். உணராதவன், மனித செயலாகவே ஏற்றுக்கொள்வான்.

கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. நமக்குள் இருக்கும் சக்தியை நாம் உணர்ந்துகொள்ளும் நம்பிக்கை. இதனை அறிந்தவர்கள் ஞானிகளாக இருக்கிறார்கள். அறியாதவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கிறார்கள்.

விவேகானந்தரின் படிப்பு

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நூலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த நூலகரிடம், ஒரு புத்தகத்தின் தலைப்பைக் குறிப்பிட்டு, அந்தப் புத்தகத்தை படிக்க எடுத்துத் தருமாறு கேட்டார். நூலகரும், மிகுந்த சிரமப்பட்டு, வெகு நேரம் தேடி, அந்த புத்தகத்தை எடுத்துத் தந்தார்.

விவேகானந்தர், சிறிது நிறத்திலேயே அந்தப் புத்தகத்தை நூலகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

நூலகருக்கு கடுமையான கோபம் வந்தது. தான் வெகு சிரமப் பட்டு தேடி எடுத்துத் தந்த புத்தகத்தை, இவன் படிக்காமல், சிறிது நேரத்திலேயே கொடுத்துவிட்டானே என்று ஆதங்கபப்ட்டார். அதனை நேரடியாக விவேகானந்தரிடம் கூறினார்.

"என்னய்யா நன் எவ்வளவு சிரமப் பட்டு அந்தப் புத்தகத்தை உமக்குத் தேடி எடுத்துக் கொடுத்தேன்? நீங்கள் அதனைப் படிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டீர்களே? ஏன் இப்படி என் நேரத்தை வீனாக்கிநீர்கள்?" என்று விவேகானந்தரிடம் கத்தினார்.

"ஐயா! அந்தப் புத்தகத்தை நான் முழுமையாக படித்துவிட்டேன். அதிலிருந்து எதைக் கேட்டாலும் என்னால் சொல்ல முடியும்." என்றார் விவேகானந்தர் பொறுமையாக.

நூலகரும் விடுவதாக இல்லை. அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி கேள்வி கேட்கத் தொடங்கினார். அத்தனைக் கேள்விகளுக்கும் விவேகனந்தர் சளைக்காமல், அனாயசமாக பதிலளித்தார்.

நூலகருக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "இத்தனைப் பெரிய புத்தகத்தை எப்படி சிறிது நேரத்தில் படித்து முடிக்க உங்களால் முடிந்தது?" என்று கேட்டார்.

"சிலர் வார்த்தை வார்த்தையாகப் படிப்பார்கள். சிலர் பாரா பாராவாகப் படிப்பார்கள், சிலர் பக்கம் பக்கம் பக்கமாகப் படிப்பார்கள். புத்தகம் புத்தகமாகப் படிப்பது என்னுடைய வழக்கம்." என்று புன்னாகையுடன் கூறினார் விவேகனந்தர்.

இந்த விஷயத்தில் விவேகாந்தர், மக்களுக்கு சொல்லும் கருத்து என்ன?

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒன்றைப் படிப்பது என்பது, மூளை சம்பந்தப்பட்டது அல்ல, மனது சம்பந்தப் பட்டது.

விவேகானந்தர் அந்தப் புத்தகத்தை கடமைக்காகப் படிக்கவில்லை.ஒரு தவம் போலச் செய்தார். அவரது, கவனம் முழுவதும் அந்தப் புத்தகத்திலேயே இருந்தது. அவரது மனம் முழுமையாக, அந்தப் புத்தகத்திலேயே ஈடுபட்டிருந்தது. அதனால்தான், அவரால், அத்தனை சீக்கிரமாக படித்து முடிக்க முடிந்தது.

அதாவது நாம் செய்யும் எந்தவொரு பணியையும், முழு மனதுடனும், ஈடுபாடுடனும் செய்தால், விரைவாகவும் சிறப்பாகவும் செய்துவிட முடியும்.

இன்றைய குழந்தைகள், பள்ளிப் பாடங்களை, ஈடுபாடு இல்லாமலும், கடமைக்காகவும் மட்டுமே படிக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை, மனப்பாடம் செய்து பரீட்ச்சையில் எழுதி, நல்ல மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் இருக்கிறது. இத்தகைய செயல்களால், கல்வி கற்பதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. பாடங்களின் கருத்துகளை உணராமல், கல்வி கற்கும் நோக்கமும் நிறைவேறாமல், யாருக்கு என்ன பயன்?

கல்வி என்பது, மாணவர்களுக்கு நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தர வல்லது. அதனை வெறும் கடமையாகச் செய்யாமல், ஆத்மார்த்தமாக, முழு மனதோடும், ஈடுபாடோடும், செய்தால் மட்டுமே அதன் பலனைப் பெற முடியும்.இதனால்தான், இந்தியக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஏய் எல்லாரும் பார்த்துக்க, நாங்களும் பஞ்சாயத்து பண்றோம்

நம்மைச் சுற்றியுள்ள உலகம், எப்போதும் ஆச்சர்யங்கள் நிரம்பியது, வித்தியாசமான மனிதர்கள், அழகும் ஆபத்தும் நிரம்பிய இடங்கள், சில மனிதர்களின் இரட்டை வாழ்கை, இப்படி நம்மை வியக்கவும், அதிர்ச்சியடையவும் வைக்கும் விஷயங்கள் ஏராளம். நேற்று, நாளிதழொன்றில் படித்த ஒரு செய்தி, ஆச்ச்சர்யமளிப்பதாக இருந்தது. காவல் நிலையம், நீதி மன்றப் படிகளை மிதிக்கத கிராமம் பற்றிய செய்தி அது.

ஒரிசா மாநிலத்தில், கேந்திரபாரா எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள, சனமன்கராஜ்பூர் எனும் கிராமம் தான் இப்படிப்பட்ட அபூர்வமான மக்களைக் கொண்டது. இவர்கள், தங்கள் பிரச்னைகளுக்காக, காவல் நிலையங்களுக்கோ, நீதி மன்றங்களுக்கோ, செல்வதில்லை. எத்தனை பெரிய வழக்கானாலும், ஊர்ப் பெரியவர்கள் கூடி, இரு பக்க வாதங்களையும் கேட்டு, சரியான தீர்ப்பு வழங்கிவிடுகின்றனர். இதனை ஊர் மக்கள் அனைவரும், முழுமனதோடு ஏற்றுக்கொள்கின்றனர்.

சுமார் நாற்பது வீடுகளும், 300 க்கு மேற்ப்பட்ட மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், பொருளாதார ரீதியாகவும், உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மக்கள், ஊர்ப் பெரியவர்களால் சொல்லப்படும் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஒரு சிலர் மத்தியில் பகை நிலவினாலும், அவை நிலம் தொடர்பானாதாகவே இருக்கிறது. இந்த சச்சரவுகளும், சுமூகமாக தீர்க்கப்பட்டுவிடுகிறது.

கௌரவத்திற்காகவும், ஒருவரை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்திலும், காவல் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் செல்லும் இந்தக் காலத்தில், இப்படிப் பட்ட ஒழுக்கத்தோடும், கட்டுகோப்பாகவும் வாழ இந்த மக்களால் எப்படி முடிகிறது?

இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமத்தின் மக்கள், பெரும்பாலும் படித்தவர்கள் என்பதுதான். இவர்கள், நீதி மன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் செல்வதால் வரக் கூடிய பிரச்னைகளையும், சிக்கல்களையும், ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால், உடனடித் தீர்வாக, ஊர் பெரியவர்கள் சொல்லும் தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு, பிரச்னைகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால், பழங்காலத்து கிராமப் பஞ்சாயத்து முறையைத் தானே பின்பற்றுகிறார்கள், இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறதென்று தோன்றலாம். ஆனால், ஊன்றிக் கவனித்தால், இந்த நடைமுறையில், எண்ணற்ற நன்மைகள் இருப்பது புலப்படும்.

சிந்தித்துப் பாருங்கள், அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு. அதுவும் நியாயமான, நேரடியான தீர்வு. நீதி மன்றங்களுக்குச் சென்றால், காலவரையற்ற தாமதமும், செலவும் ஏற்படக்கூடும். ஆனால், இந்த மக்கள் பின்பற்றும் முறையில், எந்தவித செலவுகளோ, தாமதமோ இன்றி உடனடித் தீர்வுகள். அதைவிட முக்கியம், எந்தவிதமான குறுக்கு வழிகளும் தேவை இல்லாத நடைமுறை.


நமது பிரச்னைகள், ஊர் மக்கள் முன்பு விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு நியாயங்களும், கேட்கப்பட்ட பிறகே தீர்ப்பு வழங்கப்படும். இதனால், எந்தவொரு தரப்பும், பாதிக்கப்பட வாய்ப்பு இல்லாத, நேர்மையான விசாரணை நடத்தப்படும்.

இதையெல்லாம் விட முக்கியமான நன்மை என்று பார்த்தால், தனி மனித ஒழுக்கம் பின்பற்றப்படும். நமது நாட்டின் இன்றைய உடனடித் தேவையே தனி மனித ஒழுக்கம்தான். இத்தைகைய ஒழுக்கம் மக்கள் மத்தியில் நிலவினால், நாட்டில், பிரச்னைகளோ, சச்சரவுகளோ எழாது. எத்தனையோ தலைவர்களும், மகான்களும் போதித்த தனி மனித ஒழுக்கம், இந்த நடைமுறை மூலம் கடைபிடிக்கப்படும்.

பொதுவான நன்மைகளாக, நீதி மன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும், அரசாங்கத்தின் நேரமும், பொருட்செலவும் மிச்சமாகும்.

இப்படிப்பட்ட மக்கள், தேசம் முழுவதும் இருந்தால், சண்டைகளும் சச்சரவுகளும் அற்ற, அமைதியான, உலகத்திற்கே முன் மாதிரியான சமுதாயம் படைக்க முடியும்.

இதைதான் காந்தி, இந்தியாவின் வளர்ச்சியும், அரசியலும் கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும், என்று அன்றே சொன்னாரோ?

பிரதமரின் கழுதை

லாயிட் ஜார்ஜ் , என்பவர், முதல் உலகப் போர் காலத்தில், பிரிட்டனின் பிரதமராக இருந்தவர். வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர். முன்னொரு காலத்தில், அவரது மாமா, செருப்பு தைப்பவராக இருந்தார். அவரது தாய், தைத்த செருப்புகளை, ஒரு கழுதை பூட்டிய வண்டியில் ஏற்றிக் கொண்டு, விற்று வருவார். ஜார்ஜ் இன் இந்த பூர்விகத்தை, அவருக்கு வேண்டாதவர்கள் பலரும், சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு முறை ஜார்ஜ் அவர்கள், பொதுக் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒருவர்,

"கழுதை வண்டி என்னவாயிற்று?" என்று நக்கலாகக் கேட்டார்.

இதற்கு ஜார்ஜ் பொறுமையாக,

"வண்டியை விறகாகப் பிளந்து போட்டு வெகு நாட்களாகிறது.ஆனால் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அந்தக் கழுதை இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதன் குரலைத் தான் சற்று முன்பு கேட்டோம்." என்று பதிலளித்தார்.

வாழ்வின் சுவை

ஒரு முறை சொர்க்கத்தில், ஜைன துறவி, புத்த துறவி, சூபி ஞானி, ஆகிய மூவரும் சந்திக்கின்றனர். அங்கு மூன்று அழகான ஆசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. மூன்று ஞானிகளும் ஆளுக்கொரு ஆசனத்தில் அமர்கின்றனர்.

ஜைனத் துறவி, கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஜென் துறவி, கண்களை திறந்துகொண்டு, மெளனமாக அமர்ந்திருக்கிறார். சூபி ஞானி, முகம் மலர, புன்னைகையுடன் வீற்றிருக்கிறார்.

மூவரும் ஒருவரோடொருவர் பேசவில்லை.. ஒரு நீண்ட மௌனம் அங்கு நிலவியது. அதைத் தொடந்து, ஒரு அழகிய தேவதை அங்கு தோன்றியது. அதன் கையில் ஒரு தாம்பாளம். அதில், ஒரு தங்கக் கிண்ணத்தில், சிவந்த பழரசம் நிரம்பியிருந்தது.

புன்னகையுடன் அந்த தேவதை, "இதுதான் வாழ்கையெனும் ஜீவரசம்" என்று மூன்று ஞானிகளையும் பார்த்துக் கூறுகிறது.

இதனைக் கேட்ட ஜைனத் துறவி, "நான் இதனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.வாழ்கை என்பதே துன்பம்,. உலகமே துக்கமயமானது. வாழ்வின்போது செய்யும் செயலகலாகிய  கர்மவினைதான், நாம் அனுபவிக்கக் கூடிய பெருந்துன்பங்களுக்கு எல்லாம்  காரணம்.இதன் வாடை கூட என் மீது படக் கூடாது." என்று ஒதுங்கிச் சென்றுவிட்டார்.

தேவதை அடுத்தபடியாக ஜென் துறவியின் பக்கம் திரும்பியது. "எதையும் சுவைத்துப் பார்க்காமல் மறுத்துவிட முடியாது.ஒரேயடியாக மறுப்பதோ, அதே சமயம் ஏற்பதோ, தவறு. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாக, சிறிதளவு எடுத்துக்கொண்டு, பின்பு ஒதுக்கி விடவேண்டும்." என்று கூறியபடி, கிண்ணத்தை எடுத்து சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டார்.

"அப்பப்பா என்னவொரு கசப்பு. ஜைனத் துறவி சொன்னது போல், இது கொடும் துயரம்தான். எனினும் இதனைக் குடித்துப் பார்ப்பதே நம் கடமை. குடித்த பிறகு, சுவையில் மூழ்கிவிடாமல், ஒதுக்கிவிடுவதுதான் சரி" என்றார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சூபி ஞானி, அமைதியாக எழுந்து வந்து, கிண்ணத்தை எடுத்து, ஒரே மூச்சில், மொத்த திரவத்தையும் குடித்துமுடித்துவிட்டார்.

அவரது,முகம் முழுக்க சிரிப்பும், பூரிப்பும் நிரம்பியிருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஆசனத்தில் சாய்ந்துவிட்டார். ஜீவரசம் எப்படியிருந்தது? அதன் சுவை இனிப்பா? கசப்பா? எதையுமே கூறவில்லை. அமைதியாக இருந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரு துறவிகளும், "எப்படியிருந்தது ஜீவரசம்? உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்." என்று சூபி ஞானியிடம் வினவினர்.

"இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வாழக்கையை அப்படியே மொத்தமாக அருந்திவிட வேண்டும். அப்போதுதான் அது என்ன, எப்படிபட்டது என்பது நமக்குத் தெரியும். தெரிந்துகொண்ட பிறகு, சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. கொஞ்சம் கூட சுவைக்காமலோ, அல்லது ஒரு பகுதியை மட்டும் அருந்திவிட்டோ, அது எத்தன்மையது என்று கூறமுடியாது. அதனை முழுமையாக அனுபவித்த பிறகே அதன் தன்மையை உணர முடியும்." என்றார்.

வாழ்கை என்பது இப்படித்தான். ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறோம். நாம் எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே அதுவும் நமக்குத் தெரிகிறது.

துன்பமாகப் பார்த்தால், நம் வாழ்வில் நடக்கும் துன்பங்களே பெரிதாகத் தெரியும்.இன்பங்களை நம்மால் உணர முடியாது. அதற்காக நம்மால் வாழ்கையை ஒதுக்கி விடவும் முடியாது. இன்பமோ, துன்பமோ, வாழ்வது ஒன்றே வழி.

வாழ்கையை இன்பம் துன்பம் என்று பகுத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை.இரண்டும் கலந்ததே வாழ்கை.எதோ ஒன்றை மட்டும் நாம் எடுத்துகொள்ள முடியாது.இதுவே நிஜம். அதனால், வாழ்கை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தக் கோட்பாடு வாழ்கையின் இன்ப துன்பங்களுக்கு மட்டுமல்ல. அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தும். எந்தவொரு உணர்ச்சியையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காதல், காமம், பாசம், நட்பு, கோபம், என்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒன்றுபோல் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த உணர்ச்சிகளின் கலவையே வாழ்கை.இவைஅனைத்தும் சரி விகிதத்தில் கலக்கும்போதுதான், வாழ்கையின் சுவை சிறந்திருக்கும். உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என்று பல பதார்த்தங்கள் கலந்து தயாரிக்கப் படும் உணவில், ஏதோவொரு பதார்த்தம் மட்டும் அதிகமாகச் சேர்க்கப் பட்டிருந்தால், அந்த உணவின் சுவையே மாறிவிடும். அதுபோல, வாழ்வில் எந்தவொரு சுவை மேலோங்கியிருந்தாலும், அதனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது.

இதில் விஷயம் என்னவென்றால், வாழ்கை எனும் உணவில், அனைத்து சுவைகளும் சரியாகவே கலக்கப் பட்டிருக்கும். நாம் எதனை அதிகம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் சுவையும் இருக்கும். துன்பங்களைப் பெரிதாக நினைத்தால், வாழ்கை கசப்பானதாகத் தெரியும். மகிழ்ச்சியை விரும்பினால், இனிப்பானதாகத் தோன்றும்.இரண்டையும் சமமாக பார்க்கும்போதே, அதன் உண்மையான சுவையை உணர முடியும்.

நேருவின் கண்டனம்

இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு பதவியில் இருந்தபோது, அவரிடம் பாராளுமன்றத்தில் அதிக கேள்விகள் கேட்டவர், கிருபாளனி.

கிருபாளனி இப்படி குறுக்குக் கேள்வி கேட்கும்போதெல்லாம், மற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுங் கோபம்கொண்டனர். நேருவை ஆதரிக்கும் பத்திரிகை ஒன்று, கிருபாலணியை கண்மூடித்தனமாகத் தாக்கும் வகையில், கிருபாளனி எனும் பெயரை, கிருபாலூனி என்று அச்சிட்டது. லூனி என்றால், பைத்தியம் என்றொரு அர்த்தம் இருக்கிறதாம். அதனை குறிக்கும் வகையில் இப்படி எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை.

மூத்த தலைவரான கிருபாலணியை இப்படி குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்காக பாராளுமன்றத்தில், இதனை எதிர்த்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், எதிர்க் கட்சியினர் எல்லாம், குரலெழுப்பினர்.

இந்த செயலைச் செய்தது, நேருவுக்கு விசுவாசமான பத்திரிகை. அதனால், அந்த நாளிதழின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றே பேசப்பட்டது.

ஆனால் இந்த பிரச்னை அவையில் எழுப்பப்பட்டபோது, நேரு, "நாட்டின் முதுபெரும் தலைவர் ஒருவரை, இப்படிச் சித்தரித்திருப்பது, அவரை அவமானப்படுத்துவது போலாகும். அந்தப் பத்திரிகைக்கு, அதிகமான ஆணவம் இருக்கிறது.எனவே வெறும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. சம்பத்தப்பட்ட பத்திரிகையாளர், பாராளுமன்றத்திற்கே வந்து பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்." என்று கூறி அதனை நிறைவேற்றியும் காட்டினார்.

ஒவ்வொரு கட்சியும்,தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பத்திரிகை வைத்துக்கொண்டு, தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிட்டும், எதிர்க் கட்சித் தலைவர்களை சரமாரியாகத் திட்டியும், அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதத்திலும் செய்தி வெளியிடுவது, அரசியலின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், நேருவின் நேர்மையான அரசியல், இளைஞர்கள் அனைவரும் பொது வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடம்.

ஊழ்வினையாகிவிட்ட ஊழல்

ஓர் இந்தியக் குடிமகன், தனது நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டுமென்று நினைத்தால், அவனது முதல் கவலை, ஊழல் பற்றியதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ஊழல், நம் நாட்டில் பரவியிருக்கிறது. நம் நாட்டில் மட்டும்தான் இந்த ஊழல் இருக்கிறதா? உலகின் மற்ற நாடுகளில் இதுபோன்ற கேவலமான நிலை இல்லையா என்று பல முறை சிந்தித்ததுண்டு. எனது கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய செய்தியொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

சீனாவில், ஊழல் அதிகரித்திருப்பதாக நாளிதழொன்றில் செய்தி வந்திருந்தது. ஆஹா! படிப்பதற்கே எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. நம்மைப் போல சீனாவிலும், ஊழல் இருக்கிறது. அதுவும், 2003 இல் இருந்து, 13 % ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாம். ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் எண்ணிகையும் உயர்ந்திருக்கிறதாம்.

ஊழல் - உடலுக்குள் உருவாகி, மெல்ல மெல்ல வளர்ந்து, உடலையே செயலிழக்கச் செய்யக்கூடிய புற்று நோய் போல, அரசு இயந்திரத்தில் உள்ளே பரவி, இயக்கைதையே நிறுத்திவிடும் விஷக் கிருமி.

இந்த ஊழல் என்பது பல வகைகளிலும் நடக்கிறது. அந்தந்த இடங்களுக்கேற்ப, அவரவர் தகுதிக்கேற்ப, என்று மாறுபடும். லஞ்சம், அரசு பணத்தில் மோசடி, நிர்வாகத்தில் குளறுபடிகள் என்று ஊழலை விவரித்துக்கொண்டே போகலாம்.இந்த ஊழல் பற்றிப் பேசும்போது, இந்தியன் படத்தில், கமல்ஹாசன் சொல்லும் வசனமொன்று நினைவுக்கு வருகிறது. "வெளிநாட்டிலும் லஞ்சம் இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம், கடமையை மீறத் தான் லஞ்சம். ஆனால் இங்கு கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்ற அவல நிலை" எத்தனை உண்மையான வசனம். இந்தியாவின் நிலையை, ஒரே வரியில் விளக்கிவிடும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.இந்தியாவில், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் என்ற நிலை, பல அரசு அலுவலங்களிலும் இருக்கிறது.

சரி, ஏன் இந்த அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? மனசாட்சிபடி வேலை செய்யமாட்டார்களா? எதற்க்காக ஊழல் செய்கிறார்கள்? இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற விஷயங்களை நன்கு சிந்தித்தால் கிடைக்கும் உண்மைகள் வேதனை தரக் கூடியவை.

இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?

இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது.

இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது  முடித்துக்கொள்கிறோம்.

அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.

இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.

இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே.

நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களை நாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்?

மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது.

அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஆன்மீகப்பாதிகள்

ஆழ்ந்த ஞானம் பெற்ற ஆன்மீகவாதி ஒருவர், ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். ஒரு நாள் யாத்ரிகன் ஒருவன் அவரது புகழையும், பெருமையையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணினான்.எதிரில் வந்தவர்களிடம், அந்த ஞானியின் இருப்பிடத்திற்கு வழிகேட்டு, சென்றடைந்தான்.

ஊருக்கு வெளியே, ஒரு குடிலில் தங்கியிருந்த அந்த மகானைப் பார்க்க மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். ஒருவர் பின் ஒருவராக, குடிலுக்குள் சென்று அவரை தரிசித்து வெளியில் சென்ற வண்ணம் இருந்தனர்.

இதைப் பாத்த யாத்ரிகன், ஞானியிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல், தொலைவில் இருந்தே, பார்த்துக்கொண்டிருந்தான். மக்கள் அவரிடம் பேசுவதையும், ஞானி அவர்களது சந்தேகங்களையும், மனக்குழப்பங்களையும் தீர்த்து வைப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.

நாள் முழுதும் இப்படி, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தவன், மாலையில் , அந்த ஞானியின் சீடன் ஒருவனிடம் சென்று பேசத் தொடங்கினான்.

"ஐயா, உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றான் யாத்ரிகன், அந்த சீடனிடம்.

"அதற்கென்ன தாராளமாகக் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்." என்றான் அந்த சீடன்.

"உங்கள் குருவிடம், அற்புத ஆற்றல்கள் உண்டா?" என்று வினவினான் யாத்ரிகன்.

"அது பற்றி எனக்குத் தெரியாது" என்ற அந்த சீடன், "ஆனால், அவரிடம் தினமும் நிறையப்பேர் வருவதுண்டு. பலதரப்பட்ட பிரச்சனைகளோடு வரும் இவர்களில் பலர், திரும்பி வந்து தங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிட்டது என்று கூறி, குருவை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்." என்றான்.

"உங்கள் குரு ஏன் தான் செய்த அற்புதங்களை மறைக்கிறார்? நான் அறிந்த வரையில், அவரால் பலர் நலம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர் எங்கும் இதனைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.தனது பிரார்த்தனையால், ஏராளமானவர்களை குணப்படுத்தியிருக்கிறார், கேட்டால், இது இயற்கையின் அருள் என்கிறார். துயரத்தில் வாடும் பலருக்கு அந்தத் துயர் நீங்க வழி காட்டியிருக்கிறார். இதனை அவர்களின் நல்வினைப் பயன் என்கிறார்.எதற்க்காக இப்படிச் செய்கிறார்? தன்னடக்க்த்தாலா? புகழின் மீது விருப்பமில்லாதாலா? இதனால் அவருக்கு என்ன பயன்?" என்று தன் சந்தேகத்தை சீடனிடம் கேட்டு தெளிவு பெற விரும்பினான், யாத்ரிகன்.

இதைக் கேட்ட சீடன், சற்று நேரம் சிந்தித்துவிட்டு, "நீங்கள் கூறுவது உண்மைதான். நானும் இதனைப் பல முறை கவனித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, குரு, அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க விரும்பவில்லை. இரண்டாவது, மிக முக்கியமான காரணம், மக்கள் அற்புதங்களில் தங்கள் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டுவிட்டால், உண்மையான ஆன்மீகப் பண்புகளை அறிந்துகொள்ளும் ஆர்வமோ, அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து, அத்தகைய பண்புகளை வளர்த்துக்கொள்ளும் என்னமோ மக்களிடம் இல்லாமல் போய்விடும்.அதனால்தான், குரு, இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை." என்றான் அந்த சீடன்.

உண்மையான ஞானம் அடைந்தவர்கள், மனிதனிடம் அன்பையும், பண்பையுமே வளர்க்க விரும்புவார்கள். தங்களிடம் உள்ள சக்தியை வெளிக்காட்டிக் கொண்டு, சுய விளம்பரம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை, திறமைசாலிக்கு அறிமுகம் தேவையில்லை என்பதுபோல, அவர்களிடம் உள்ள திறமைகள் அல்ல, இத்தகைய பண்புகளே ஞானிகளின் புகழுக்குக் காரணமாக இருக்கும்.

ஞானம் என்பதன் குணமே, இத்தகைய தன்னடக்கமும், பண்பும் தான்.இவற்றை உணராதவர்கள், ஞானிகளோ, ஆன்மீகவாதிகளோ அல்ல, ஆன்மீகப்பாதிகள்.

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U