ஈழம் முடிந்த போர் முடியாத துயரம்

போர் முடிந்தாலும் ஈழத்தில் இருந்து வரும் செய்திகளில் பரபரப்பு குறையவில்லை. பிரபாகரனின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தீராத நேரத்தில் அவரது மகள், துவாரகா  கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவியது. அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இந்த செய்தி மக்களிடையே அதிக பாதிப்பை உருவாக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.இது போல் தினமொரு செய்தி இலங்கையில் இருந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நடந்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்தாலும் ஈழ மண்ணில் அமைதி இல்லை என்பதையே இது போன்ற செய்திகள் காட்டுகின்றன. விடுதலைப் புலிகள், உலகில் விமானப் படை கொண்ட ஒரே தீவிரவாத இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது.ஆம் இது தான் ஈழப் போரின் முடிவு. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற கூட்டம் ஒழிக்கப்பட்டது. ஆனால் போர்க்ககளத்தில் வாழும் மக்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

முப்பது ஆண்டுகளாக நடந்து வந்த யுத்தம், மக்களுக்காக  நடந்த யுத்தம். அதன் முடிவு இது தான். இதன் அர்த்தம் ஒன்று தான். போர்க்களத்தில் உயிர் துறந்த போராளிகளைத் தவிர யாருக்கும், இந்த மக்களைப் பற்றி கவலையில்லை.தமிழன் சாகிறான், தமிழன் கொல்லப்படுகிறான், தமிழன் வஞ்சிக்கப்படுகிறான் என்று கோஷம் எழுப்பும் யாரும் அந்த மக்களைப் பற்றி வருத்தப்படவில்லை. உண்மையில் இந்த மக்களைப் பற்றி சிந்திப்பவனுக்கு பாதிக்கப்படுவது தமிழனல்ல, தன்னைப் போன்ற சக மனிதன். இந்த எண்ணம் இருந்தால் அந்த மக்களைக் காப்பாற்ற தமிழர்களின் ஆதரவு மட்டும் முக்கியமானதாக இருக்காது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த மக்களுக்காக போராடுவான்.

தமிழன் பாதிக்கப்படுகிறான் என்ற குரல் ராஜபக்ஷேவாலோ மற்ற இந்திய மாநிலத்தைச் சேர்ந்தவர்களாலோ உணரப்படப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழன் என்பவன் தங்களுக்கு சம்பந்தம் இல்லாதவன். இந்திய அரசுக்கு இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை. ராஜபக்சேவுக்கோ தொல்லை கொடுக்கும் எதிரி. உலக மக்களும் இதனை இலங்கையின் உள்விவகாரமாகவே பார்க்கின்றனர். இத்தகைய கண்ணோட்டம் உருவாவதற்குக் காரணம் தமிழன் தான். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு இந்தப் போரை நடத்த வேண்டுமென்று நினைத்தார்களே தவிர, உலக மக்கள் அனைவரும் ஒரு இனம் படும் வேதனைகளை உணர வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் இல்லை.

ஆயுதம் ஏந்தி போராடிய யாருக்கும் இதுவே கதி என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இந்த உஅல்கின் வரலாறு முழுக்க ஆயுதங்களால் நிரம்பியது. ஆனால் அந்த ஆயுதங்கலஊகிடையே பூக்களாக  இன்றளவும் போற்றப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி, புத்தர், மார்டின் லூதர் கிங், இயேசு பிரான் போன்ற அனைவரும் ஆயுதங்களால் பெற முடியாததை அஹிம்சையால், அன்பால் பெற்றிருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல இன்னல்களை அனுபவித்த அமெரிக்க கறுப்பின மக்களின் துன்பம் கூட மார்டின் லூதர் கிங்கின் அஹிம்சைப் போராட்டத்தால் மட்டுமே முடிவுக்கு வந்தது. அவரது சம கால போராளியான மால்கம் எக்ஸ் கூட இன்று பலரால் அறியப்படாதவர். காரணம், அவரது ஆயுதப் போராட்டம் வெற்றியைக் கொடுக்கவில்லை. மார்டின் லூதர் கிங்கும், மகாத்மா காந்தியும் தங்களின் துன்பங்களை உலகம் உணரச் செய்தனர். அதனால் மட்டுமே அவர்களால் தங்கள் போராட்டத்தில் வெல்ல முடிந்தது.

இலங்கை தமிழர்களின் நிலையும் இதுவே.உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த அப்பாவிகளின்  துன்பங்களை உணர வேண்டும். இதனைச் செய்ய ஆயுதங்களால் முடியாது. உலக மக்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேவும் கொல்லப்படும் தமிழனும் தன்னைப் போன்ற மனிதனே என்ற எண்ணத்தை அடைய வேண்டும். இதற்க்கு ஆயுதங்களைத் துறந்து விட்டு, இலங்கையில் நடப்பதை தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அறியச் செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழன் சாகிறான் என்ற கோஷம் இனி வேண்டாம். அங்கு அழிக்கப்படுவதும்  நம்மைப் போன்ற ஒரு உயிர் என்ற எண்ணத்துடனேயே அவர்களுக்காக குரல் கொடுப்போம்.இனி அப்பாவி மக்கள் வதைக்கப் படுவதை எதிர்ப்போம், தமிழர்களாக அல்ல. மனிதர்களாக.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U